Primary tabs
மாமன் பெருமை
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட-ஐயா நீ
அருமை மருமகனோ?
சின்னக் கிணறு வெட்டி
சிங்கார கல் பரவி
துவை வேட்டி போட்டு வரும்
துரை ராஜா உங்கள் மாமா
ஏலக்காய் காய்க்கும்,
இலை நாலு பிஞ்கு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய் மாமன் வாசலிலே
கல்லில் எலுமிச்சை காய்க்கும்
கதலிப் பழம் பழுக்கும்
முல்லைப் பூ பூக்குதில்ல
உன் தாய் மாமன் கொல்லையிலே
தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்
தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு
தங்க மடம் கட்டலாமே
வெள்ளிக் குடை பிடிச்சு
வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்
வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு
வெள்ளி மடம் கட்டலாமே!
முத்தளக்க நாழி
முதலளக்க பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசை யிட்டார் தாய் மாமன்.