தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கூடப் புறப்பட்டாள்

கணவனும் மனைவியும் காலையில் அயலூர் செல்ல முடிவு செய்திருந்தார்கள். அவன் நன்றாக உறங்கி விட்டான். அவள் எழுந்து காலை உணவு தயாரித்து அவனை எழுப்பச் செல்லுகிறாள். அவன் அருகில் நின்றுகொண்டு பள்ளியெழுச்சி பாடுகிறாள். அவனும் துயிலுணர்ந்து அவள் பயணத்திற்குத் தயாராயிருப்பதைக் கண்டு மகிழ்ந்து அவள் பாட்டிற்குப் பதில் பாட்டுப் பாடுகிறான்.

மனைவி:
பாம்புக் கண்ணு கட்டிலிலே
படுத்து நித்திரை செய்யயிலே
சொல்லி உறங்கி விட்ட
சுந்தரமே எந்திரிங்க
தேக்கம் பலகை வெட்டி
தெக்குப் பாத்த மச் சொதுக்கி
மச்சுக்குள்ள நித்திரை போம்
மந்திரியே எந்திரிங்க
மகிழ மரக் கட்டிலுல
மதி கிளி படுத்திருக்க
நானும் உசுப்பரேனே
நல்ல உறக்கம் தானோ?
சொளகு பின்னல் கட்டுலல
சொகுசா நித்திரை செய்யயிலே
கால் கடுக்க நிக்குறனே
கவலை யத்த நித்தரையோ?

கணவன்:
பஞ்சணை மெத்தையிலே
படுத்து நித்திரை செய்யயிலே
தாளம் பூக் கையாலே
தட்டி உசுப்புனாளே
பாம்புக் கண்ணு கட்டுலிலே
படுத்து நித்திரை செய்யலிலே
சோலைக் குயில் போலச்
சொல்லி உசுப்புனாளே
சாலையான சாலையிலே
சாரட்டுப் போடையிலே
குங்குமப் பட்டுடுத்தி
கூடப் புறப்பட்டியே

வட்டார வழக்கு: உசுப்புரேனே-எழுப்புகிறேனே;சாரட்டு-Chariot என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
நெல்லை மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:11:15(இந்திய நேரம்)