Primary tabs
கன்னிக் களவு
காதலன் கஞ்சிக்கலயம் கொண்டு காட்டுக்குப் போகும் காதலியை கை தட்டிக் கூப்பிடுகிறான். அவள் அவன் மீது சற்றுக் கோபத்தோடு இருக்கிறாள். அத்தை மகனாகிய அவன் ஊரில் இருக்கும்பொழுதே, சொத்துள்ள ஒருவன் அவளைப் பெண் பேசி வரத் துணிந்து விட்டான். இதை அவள் அவனிடம் கூறுகிறாள். அவன் மணம் பேசி வர நேரமில்லை, வேலை அதிகம் என்று சொல்லுகிறான். களவு செய்பவன் நினைத்தால் நேரமா கிடைக்காது? இது கன்னிக் களவுதானே ! அவனுக்கு இன்னும் மனம் உறுதிப்படவில்லை. இவ்வாறு அவனுக்கு உறுதியேற்படும்படி சூடு கொடுத்துவிட்டு சந்திரனைப் பார்த்து “நீ மறைந்து கொண்டு என் மச்சானுக்குக் களவு செய்யக் கற்றுக் கொடு ” என்று சொல்லித் தனது காதலனைக் கேலி செய்கிறாள்.
காட்டுக்கு போகையிலே
கையலைச்சுக் கூப்பிட்டது
காரணத்தைச் சொல்லு மச்சான்
பெரியடத்துக் கிரீடமே
அஞ்சாறு ஆளோட-உன்ன
யாரை விட்டுக் கூப்பிடட்டும்?
மாதக் கணக்காயிருச்சு
கழுத்தில் தாலி கட்ட லேனா-நான்
கயத்தப் போட்டுச் செத்திடுவேன்
இன்பமான ரதி கிளியே
மதியான கண்ணே-உன்ன
மறக்க மனம் கூடலியே
மாலையிடும் சாமியிருக்க
சொத்துக் கையி சாமிபய
சொந்தமிண்ணு வாரானில்ல
கலயத்தில நீத்தி வச்சேன்
நீத மற்ற சிவகிரில
நிண்ணு போக நேரமில்லை
விடி நிலா ராஜாவே
கன்னி களவு செய்ய
கண் மறைஞ்சால் ஆகாதோ?
வாழுத வயதிலேயே
வாடி பொண்ணே ஒடிப் போவோம்
இலுமிச்சங்கனி போல
இருவருமே ஒரு செகப்பு
வாழுத வயதிலேயே
வாடி பொண்ணே
ஓடிப் போவோம் !
சேகரித்தவர்:
S.M. கார்க்கி
இடம்:
சிவகிரி.
நெல்லை மாவட்டம்