தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சோம்பலும் உழைப்பும்

கணவன் சோம்பேறி. மனைவி உழைப்பாளி. கணவனைப் பன்முறையும் உழைத்துப் பிழைக்குமாறு அவள் வற்புறுத்துகிறாள். அவன் இணங்கவில்லை. அவள் “கொழுக்கட்டை செய்து தருகிறேன் என்னோடு வேலைக்கு வா” என்றழைக்கிறாள். அவன் “தண்ணீர் தவிக்கும், வரமாட்டேன்” என்கிறான். அவள் படிப்படியாக அவனோடு வாது செய்து, அவனுடைய சாக்குப் போக்குகளையெல்லாம் மறுத்துரைத்து வேலைசெய்ய இணங்கும்படி செய்கிறாள். இது போன்ற பாடலொன்று நெல்லை மாவட்டத்தில் வழங்கி வருகிறது. “கீரை விதைக்கலாம் வா” என்ற தலைப்பில் அது “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்” என்ற தொகுப்பில் வெளியாகியுள்ளது. இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்கிவருகிறது.

பெண்:
மளுக்கிட்ட கம்பிடிச்சி
கொளுக்கிட்ட வெச்சி தாரேன்
வாடா என் சாமி
ஆண்:
கொளுக்கிட்ட தின்னாலே
தண்ணி தாகம் எடுக்கும்
போடி பொண் மயிலே
பெண்:
தண்ணி தாகம் எடுத்தா
நீரு மோரு தாரேன்
வாடா என் சாமி
ஆண்:
நீரு மோரு குடிச்சா
நித்திரையும் வந்திடும்
போடி பொண் மயிலே
பெண்:
நித்திரையும் வந்தா
தட்டி எழுப்பரேன்
வாடா என் சாமி
ஆண்:
தட்டி எழுப்பினால்
காலை பொறக்கும்
போடி பொண் மயிலே
பெண்:
காலை பொறந்தா
கீரை வெரைக்கலாம்
வாடா என் சாமி
ஆண்:
வேலி கட்டினால்
வெள்ளாடு தாண்டும்
போடி பொண் மயிலே
பெண்:
வெள்ளாடு தாண்டினா
பாலு கறக்கலாம்
வாடா என் சாமி
ஆண்:
பாலு கறந்தா
பூனை குடிக்கும்
போடி பொண் மயிலே
பெண்:
பூனைக் குடிச்சா
பூனையை அடிக்கலாம்
வாடா என் சாமி
ஆண்:
பூனையை அடிச்சா
பாவம் சுத்தும்
போடி பொண் மயிலே
பெண்:
பாவம் சுத்தினா
காசிக்குப் போகலாம்
வாடா என் சாமி
ஆண்:
காசிக்குப் போனா
காலை நோகும்
போடி பொண் மயிலே
பெண்:
காலை நொந்தால்
குதிரை வாங்கலாம்
வாடா என் சாமி
ஆண்:
குதிரை வாங்கினா
சவாரி செய்யலாம்
போடி பொண் மயிலே


சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம்:
அரூர், தருமபுரி.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:56:03(இந்திய நேரம்)