Primary tabs
உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயரவர்கள் பிறந்ததன்
பயனைத்
தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக்
காரணமாயிற்று. முதலியார்
சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி
ஐயரவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர்கள் இவர்கள்; அந்த
நூலைப்
பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம்
சொல்லப்
புகுந்தார்கள். ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு
பாடம் சொன்னார்கள்.
சிந்தாமணியில் ஆழ்ந்தார்கள். தாம் அதுகாறும் படித்த
நூல் குவியல்களால்
அறியவொண்ணாத பலவற்றை அதில் கண்டார்கள். அது
ஜைனசமய
நூலாதலால் பல செய்திகள் ஐயரவர்களுக்கு
விளங்கவில்லை. அவற்றை
யெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார்கள்.
சிந்தாமணிக்கு
நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள்.
அவருடைய
உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும்
மேற்கோள்களும்
ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள் அகக்கண்முன்
தோற்றுவித்தன.
தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச்
சிந்தாமணியைப்
பதிப்பிக்கவேண்டும். என்னும் எண்ணம் உண்டாயிற்று.
ஆராய்ச்சி
நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற
வேதனையைப் பல
சமயத்தில் அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும்
விடாப்பிடியாக முயன்று,
1887-ஆம் ஆண்டு சிந்தாமணியை
வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பைக்
கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து
களிக்கூத்தாடினர். அது
முதல் ஐயரவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து
வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.
சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு
வெளியாயிற்று. அதன்பின்
சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை
வந்தன. புறநானூறு
கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக்கண்டு
பிடித்ததுபோன்ற
மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது.
ஆராய்ச்சிக்காரர்களுடைய மூளை
வேலை செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின்
வாழ்க்கையைப்பற்றிய
ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
இவ்வாறு ஐயரவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும்
தொண்டை
விடாது செய்து வந்தார்கள். ஐம்பெருங் காப்பியங்கள்
என்று சேர்த்துச்
சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
சீவகசிந்தாமணி என்ற மூன்றையும் அவர்கள்
வெளியிட்டார்கள்.
பத்துப்பாட்டை அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண
முடிந்தது.
எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,
பரிபாடல், புறநானூறு
என்பன மலர்ந்தன.