தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

En Sarithiram


xiv

பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர
நமச்சிவாயர் உரை
என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன.
இவற்றையன்றித் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருக்காளத்திப் புராணம்
முதலிய பல புராணங்களும், கோவை, உலா,
கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணிமாலை, அந்தாதி, குறவஞ்சி

முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன.
தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து
ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.

ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும்
வேலை அன்று, ஐயரவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக
இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ்
பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும்; பல இடங்களில்
இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும்;
அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத்
திறமையாலும் விடாமுயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து
செப்பம் செய்யவேண்டும். ஐயரவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து
தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந்தொண்டர். அவர்களுடைய
பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப்
பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும்,
ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக
அற்புதமானவை. விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப்
பகுதிகளும் காட்சி தரும். அவை ஐயரவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச்
சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும்
பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும்
வகையில் அமைந்தவை ஐயரவர்களின் பதிப்புக்கள்.

இந்த முறையில் கண்ணாடிபோல் மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம்
ஆங்கிலமே அறியாத ஒரு தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து
சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?

முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய
அளவிலே வெளிப்படுத்திய ஐயரவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின்
அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்
சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:38:16(இந்திய நேரம்)