தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

En Sarithiram


xv

கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத்
தமிழாசிரியராக 1903-ஆம் ஆண்டு வந்தார்கள். அப்பால் அந்தப்
பதவியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள். கல்லூரி ஆசிரியர்
என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணாக்கர்களுக்குப்
பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும்
பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ, அவர்கள் ஓய்வு பெறவில்லை.
உண்மையில் அவ்வேலைகள் பின்னும் பன்மடங்கு பெருகின.

கல்லூரியில் வேலையாக இருந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம்
பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய
மகாமகோபாத்தியாய ம.வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி
மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர்
இவ்வகையில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி
முறையைக் கற்றுக் கொண்டு தாமே நூல்களை வெளியிட்டவர்கள் சிலர்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ.வை. அனந்தராமையர் முதலியவர்கள்
இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து
பதிப்பித்து வெளியிட்ட நூல்களைப் படித்து அந்த முறையையும் அறிந்த சில
புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.

1924 முதல் 1927 வரையில் ஐயரவர்கள் ராஜா அண்ணாமலை
செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக
இருந்தார்கள்.

அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு
தம்முடைய அனுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத்
தொடங்கினார்கள். இந்தத் துறையில் ஐயரவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது
பெரியவர்களும், சிறுவர்களும், ஆடவரும், பெண்டிரும், புலவர்களும் பிறரும்
ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றார்கள். பத்திரிகைகளில்
இவர்கள் கட்டுரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயரவர்களின்
கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்படைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப்
பத்திரிகைகளின் மலர்கள் ஐயரவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.

தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்னும் நெடு நாள்
ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்கள்.
அவற்றைக் கொண்டு மிகவிரிவாக அச்சரித்திரத்தை இரண்டு பாகங்களாக
எழுதி முடித்தார்கள். தம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:38:27(இந்திய நேரம்)