தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kudiyatchi


உலகின் அரசியல் இயக்கங்களிலோ நாகரிக இயக்கங்களிலோ இன்று தமிழகம் கலக்காமலும், கவனிக்கப்படாமலும் இருக்கிறது. ஆனால் அஃது என்றும் இப்படியே இருந்ததன்று. என்றும் இப்படியே இருக்கப்போவதுமில்லை. உலக அரசியல் கருத்துக்களில் பண்டைத் தமிழகம் கொண்ட பங்கு இன்னும் முற்றும் விளங்கக்கூட வில்லையாயினும் தெரிந்த அளவு இந்நூளில் குறிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் உலகில் அதன் இடம் எது, என்பதும் எதுவாயிருத்தல் சிறப்பு என்பதும் இறுதி இயலில் குறித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆறுகள் பல மலைப்பகுதிகளில் பிறந்து பல திசைகளில் ஓடுகின்றன; ஆனால் அவற்றின் நீர்த்தொகுதி ஒரே கடலினின்றும் முகில்களாக எழுந்தவையே; ஒரே கடலுடன் சென்று கலப்பவையே. உலகின் பல நாகரிகங்களும் இவ்வாறே. புதிய போக்கு வரவு, செய்திப் பரப்புக் கருவிகளால் உலகம் குறுகிவிட்ட இந்நாளில் மட்டுமின்றி, என்றுமே உலக நாகரிகம் அடிப்படையில் தொடர்புடைய ஒரே இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. அவ்வியக்கத்தில் தமிழகம் முன்பு பங்கு கொண்டிருந்தது. வருங்காலத்திலும் பங்கு கொள்வது உறுதி. சென்ற காலத்தின் பங்கு எவ்வளவு பெரிதாயினும் வருங்காலத்தில் அதன் பங்கு இன்னும் எவ்வளவோ பெரிது. அது தமிழகத்துக்கு மட்டுமன்றி உலகிற்கே பெருமை தருவதாகும் என்பதை இந்நூலின் கடைசிப் பகுதி எடுத்துக் காட்டுகிறது.

பண்டைப் பெருமையிலிருந்து எதிர்காலப் பெருமைக்கு நாம் துள்ளிக் குதித்துவிட முடியாதல்லவா? அவற்றினிடையே பாலமாக மேனாட்டு நாகரிக ஊழி உதவும். அப்பாலத்தில் ஆங்கில நாட்டு அரசியலும் உருசிய நாட்டு அரசியலும் இருபுறச் சிறைகள் ஆகும். பிரஞ்சுப் புரட்சியும் அமெரிக்கப் புரட்சியும் அவற்றின் இணைப்புக் கற்கள் ஆகும்.

இந்தியப் பரப்பின் அரசியல் ஆராய்ச்சியாளர் தமிழகத்தை ஒரு பகுதியாகக் கூட எண்ணிப்பார்ப்பதில்லை. உடலில் உயிரை ஒரு பகுதியாகக்கூட உடல் நூலார் கருத மாட்டார் அல்லவா?
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:32:11(இந்திய நேரம்)