தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4


 

ன்.

"வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய"        (எச்ச.9)

என்று  முற்றுவாய்பாட்டால் வினையெச்சம் வருதலின் வினையெச்ச
வாய்பாட்டால் முற்றுவரும் என்பதூஉம் அச்  சூத்திரத்தின் அமைத்துக்
கொள்ளப்படும் என்ப. இவ்வுரை இரண்டினும் ஏற்பது அறிந்து கொள்க.

'நடுவண்   ஐந்திணை'  என்பன  யாவை எனின் முல்லை, குறிஞ்சி,
பாலை,  மருதம்,   நெய்தல்   என்பனவாம்  எற்றுக்கு?  இந்நூலகத்து
அகமும் புறமும் ஆகிய உரிப்பொருள் கூறுகின்றாராதலான்  புணர்தல்,
பிரிதல்,  இருத்தல்,  இரங்கல், ஊடல்  என அமையுமே எனின், புறப்
பொருட்கண்  நிரைகோடலை வெட்சி எனக் குறியிட்டு ஆளுமாகலான்
ஈண்டு   இப்  பொருளையும்  முல்லை  குறிஞ்சி   மருதம்  நெய்தல்
என   ஆளும்   என்க.  இதனாற்  பயன் என்னையெனின்,   உரிப்
பொருளே     திணையென     உணர்த்துவராயின்  முதற்பொருளும்
கருப்பொருளும்   திணையாதல்   தோன்றாதாம்.  அவை  யெல்லாம்
அடங்குதற்பொருட்டு  முல்லை  குறிஞ்சி    பாலை  மருதம் நெய்தல்
என்றார் என்பது. அவை ஆமாறு வருகின்ற சூத்திரங்களான் விளங்கும்.
[ஏகாரம் ஈற்றசை.]                                        (2)

3. முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.

இது,   மேற்சொல்லப்பட்ட   நடுவண்  ஐந்திணை ஆமாறும், ஒரு
வகையான் உலகத்துப்  பொருள்  எல்லாம்  மூவகையாகி   அடங்கும்
என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.

பாடலுள்  பயின்றவை  நாடும் காலை - சான்றோர் செய்யுளகத்துப்
பயின்ற பொருளை  ஆராயுங்கால்.  முதல்  கரு உரிப்பொருள்  என்ற
மூன்றே  -  முதற்பொருள்   எனவும்  கருப்பொருள்  எனவும்  உரிப்
பொருள் எனவும் சொல்லப்பட்ட மூன்று பொருண்மையும் (காணப்படும்).
நுவலுங்காலை முறை சிறந்தன -அவை சொல்லுங்காலத்து முறைமையாற்
சிறந்தன.

இச்   சூத்திரத்துள்   பாடலுட் பயின்ற பொருள் மூன்று என ஓதி,
அவற்றுள் உரிப்பொருள்    என    ஒன்றை   ஓதினமையால்,  புறப்
பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டு கொள்க.

முறைமையாற்  சிறத்தலாவது:  யாதானும்  ஒரு செய்யுட்கண் முதற்
பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும்  வரின், முதற்பொருளால்
திணையாகும்  என்பதூஉம்,  முதற்பொருள்  ஒழிய ஏனைய, இரண்டும்
வரின்  கருப்பொருளால்  திணையாகும்   என்பதூஉம், உரிப்பொருள்
தானே வரின்  அதனால்   திணையாகும்  என்பதூஉம்  ஆம். அவை
ஆமாறு  முன்னர்க்  காணப்படும்.  அஃதேல்,  ஒரு  பொருட்கு ஒரு
காரணம்    கூறாது   மூன்று   காரணம்  கூறியது  என்னை எனின்,
உயர்ந்தோர்  என்றவழிக்   குலத்தினால்   உயர்ந்தாரையும்  காட்டும்,
கல்வியான் உயர்ந்தாரையும்  காட்டும்; செல்வத்தான்  உயர்ந்தாரையும்
காட்டும்;  அதுபோலக்  கொள்க.  [முதல்   ஏகாரம் பிரிநிலையாகவும்,
இரண்டாம் ஏகாரம் அசைநிலையாகவும் வந்தன.]

4. முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.

இது,     மேற்சொல்லப்பட்ட    மூன்று    வகைப்  பொருளினும்
முதற்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு-முதல் என்று
சொல்லப்படுவது  நிலமும் காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை,
என மொழிப   இயல்பு உணர்ந்தோர்  -என்று  சொல்லுவர்  உலகின்
இயல்பு உணர்ந்தோர்.

இயற்கை   என்பதனால் செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க.
நிலம்     என்பதனால்    பொருள்தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும்
பூதமும் கொள்க. [ஏகாரம் ஈற்றசை].

5. மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

இது,   நிறுத்தமுறையான்   நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

மாயோன்    மேய  காடு  உறை  உலகமும்  -  மாயவன் மேவிய
காடுபொருந்திய உலகமும்,   சேயோன்   மேய  மைவரை உலகமும் -
முருகவேள் மேவிய  மைவரை  உலகமும், வேந்தன்  மேய  தீம்புனல்
உலகமும் - இந்திரன்  மேவிய  தீம்புனல் உலகமும்,  வருணன் மேய
பெருமணல் உலகமும்-வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை
குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்-
முல்லை குறிஞ்சி  மருதம்  நெய்தல்  எனச் சொல்லிய முறையினானே
சொல்லவும் படும்.

நிரனிறை.   உம்மை  எதிர்மறையாகலான்  இம்  முறையன்றிப் பிற
வாய்பாட்டாற்   சொல்லவும்படும்  என்றவாறு.  காடு நாடு மலை கடல்
என்பதே  பெருவழக்கு.   இன்னும்  "சொல்லியமுறையால்  சொல்லவும்
படும்". என்றதனான்,  இம்   முறையன்றிச்  சொல்லவும் படும்  என்று
கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன்னும் பின்னுமாக
வைத்துக்   கூறுதல்.   அது   சான்றோர்   செய்யுட்  கோவையினும்
பிறநூலகத்துங் கண்டுகொள்க.   இச்   சூத்திரத்துள்   காடுறை நிலம்
என்னாது  உலகம் என்றதனான்  ஐவகைப்  பூதத்தானும்  ஐந்து இடம்
என்பது  உய்த்துணர வைத்தவாறு கண்டு கொள்க.

முல்லை   குறிஞ்சி  என்பன இடுகுறியோ, காரணக்குறியோ எனின்,
ஏகதேச   காரணம்பற்றி   முதலாசிரியர்   இட்டதோர்   குறி  என்று
கொள்ளப்படும். என்னை காரணம் எனின்.

"நெல்லொடு,
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்"       (முல்லைப்பாட்டு: 8-10)

என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆகலானும்,

"கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே"     (குறுந்.3)

என்றவழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்தது ஆகலானும்,

"இறா அல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:37:05(இந்திய நேரம்)