Primary tabs


குறிஞ்சிக்கு மக்கட் பெயர் குறவன் குறத்தி என்பன; தலைமக்கட்
பெயர், மலைநாடன் வெற்பன் என்பன. பாலைக்கு மக்கட்பெயர், எயினர்
எயிற்றியர் என்பன; தலை மக்கட்பெயர், மீளி விடலை என்பன.
மருதத்திற்கு மக்கட்பெயர், உழவர் உழத்தியர் என்பன; தலைமக்கட்
பெயர் ஊரன் மகிழ்நன் என்பன. நெய்தற்கு மக்கட்பெயர், நுளையர்
நுளைச்சியர் என்பன;தலைமக்கட்பெயர் சேர்ப்பன் துறைவன் கொண்கன்
என்பன; பிறவும் அன்ன. [ஏகாரம் ஈற்றசை]
"கைக்கிளை முதலா" (அகத். 1) என்னும் சூத்திரம் முதலாக
இத்துணையும் கூறப்பட்டது. நடுவணைந்திணை நிலத்தானும்
காலத்தானும் கருப்பொருளானும் உரிப்பொருளானும் நிலமக்களானும்
தலைமக்களானும் வரும். எனவும், அவை இலக்கண நெறியானும்
வழக்கு நெறியானும் வரும் எனவும், கைக்கிளை பெருந்திணை
உரிப்பொருளான் வரும் எனவும், அகத்திணை ஏழிற்கும் இலக்கணம்
ஓதியவாறு.
உதாரணம்
முல்லைத்திணைக்குச் செய்யுள்.
"முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே." (அகம்.4)
இதனுள்,முல்லைக்கு உரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும்
இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டுகொள்க.
"இல்லொடு மிடைந்த கொல்லை முல்லைப்
பல்லான் கோவலர் பையுள் ஆம்பல்
புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்குங்கொல் அளியள்நங் காத லோளே"
என்பதும் அது.
"திருநகர் விளங்கு மாசில் கற்பின்
அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யென்னோ முல்லை
இரும்பல் கூந்தல் நாற்றமும்
முருந்தேர் வெண்பல் ஒளியுநீ பெறவே."
இது முதற்பொருள் வாராது கருப்பொருளானும் உரிப்பொருளானும்
முல்லையாயினவாறு.
"கரந்தை விரைஇய தண்ணுறுங் கண்ணி
இளையர்ஏல் இயங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குந் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே."
இது,முதலும் கருவும் இன்றி உரிப்பொருளான் முல்லையாயிற்று.
"கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியங்கண் மாநிலம்
காடுகவின் எதிரக்5 கனைபெயல் பொழிதலின்
பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன்
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறியேன் றன்றே வீகமழ் கானம்
எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கி
இகுபனி உறைக்குங் கண்ணோ டினைபாங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்
இறுநற் காலம் காண்டிசின் பகைவர்
மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பிற்
கந்துகால் ஒசிக்கும் யானை
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே." (அகம்,164)
இது, பிரிதற் பகுதியாகிய பாசறைப்புலம்பல் எனினும், நிலம் பற்றி
முல்லையாயிற்று.
"மலிதிரை யூர்ந்துதண் மண்கடல் வௌவலின்"
(கலி.முல்லை,4)
என்னும் முல்லைக்கலி, புணர்தற்பொருண்மைத்தாயினும் முல்லைக்குரிய
கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்று, பிறவும் அன்ன.
குறிஞ்சித் திணைக்குச் செய்யுள்
"விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைஇ
இடிந்த வாய எவ்வங் கூர
நிலமலி தண்துளி தவிராது புலந்தாய்
நீர்மலி கடாஅம் செருக்கிக் கார்மலைந்து
கனைபெயல் பொழிந்த நள்என் யாமத்து
மண்புரை மாசுணம் விலங்கிய நெறிய
மலைஇ மணந்த மயங்கரி லாரலிற்
றிலைபொலிந் திலங்கு வைவே லேந்தி
இரும்பிடி புணர்ந்த செம்மல் பலவுடன்
பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குநிரை இரிய
நிரம்பா நெடுவரை தத்திக் குரம்பமைந்து
ஈண்டுபயில் எறும்பின் இழிதரும் அருவிக்
குண்டுநீர் மறுசுழி நீந்தி ஒண்தொடி
அலமரல் மழைக்கண் நல்லோள் பண்புநயந்து
சுரன்முத லாரிடை நீந்தித் தந்தை
வளமனை ஒருசிறை நின்றனே மாகத்
தலைமனைப் படலைத் தண்கமழ் நறுந்தாது
ஊதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் சீறடி
அரிச்சிலம் படக்கிச் சேக்கையின் இயலிச்
செறிநினை நல்லில் எறிகத வுயவிக்
காவலர் மடிபத நோக்கி ஓவியர்
பொறிசெய் பாவையி னறிவுதளர் பொல்கி
அளக்க ரன்ன வாரிருள் துமிய
விளக்குநிமிர் பனைய மின்னிப் பாம்பு
படவரைச் சிமையக் கழலுறு மேறோ
டிணைப்பெய லின்னலங் கங்குலும் வருபவோ வென்றுதன்
மெல்விரல் சேப்ப நொடியின ணல்யாழ்
வடியுறு நரம்பிற் றீவிய மிழற்றித்
திருகுபு முயங்கி யோளே வென்வேற்
களிறுகெழு தானைக் கழறொடி மலையன்
ஒளிறுநீ ரடுக்கங் கவைஇய காந்தள்
மணங்கமழ் முள்ளூர் மீமிசை
அணங்குகடி கொண்ட மலரினுங் கமழ்ந்தே."
இது, முதலும் கருவும் புணர்தலாகிய உரிப்பொருளும் வந்த
குறிஞ்சிப்பாட்டு.
"நறைபடர் சாந்தம் அறவெறிந்து நாளால்
உறையெதிர்ந்து வித்திய ஊழ் ஏனற் - பிறையெதிர்ந்து
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன வீண்டு." (திணைமாலை நூற்.1)
இது, முதற்பொருள் இன்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும்
வந்தமையாற் குறிஞ்சித் திணையாயிற்று.
"முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே."
இஃது, உரிப்பொருள் ஒன்றுமே வந்த குறிஞ்சிப்பாட்டு.
"பருவ மென்தினை பாலும் பெய்தன
கருவிரற் கிள்ளை கடியவும் போகா
பசிமூ தந்திக் கடைவன வாடப்
பாசிப் பக்கப் பனிநீர்ப் பைஞ்சுனை
விரியிதழ்க் குவளை போல வில்லிட்டு
எரிசுடர் விசும்பின் ஏறெழுந்து முழங்கக்
குன்றுபனி கொள்ளுஞ் சாரல்
இன்றுகொல் தோழி அவர்சென்ற நாட்டே."
இஃது இருத்தற் பொருண்மைக்கண் வந்ததேனும், முதற்பொருளானும்
கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று.
"வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பி னல்லது - கோடா
எழிலு முலையும் இரண்டிற்கு முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து." (திணைமாலைநூற்.15)
இது கற்பிற் புணர்வு; பொருளாற் குறிஞ்சியாயிற்று.
"படாஅ தோழியெங் கண்ணே கொடுவரி
கொண்முரண் யானை கனவு
நன்மலை நாடன் நசையி னானே."
இஃது இரங்கற் பொருண்மையேனும் முதற்பொருளானும்
கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று. பிறவும் அன்ன.
பாலைத்திணைக்குச் செய்யுள்
"அறியாய் வாழி தோழி இருளற
விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும்
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே." (அகம்.53)
இதனுள் பாலைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் பிரிவும்
வந்தவாறு கண்டுகொள்க.
"வளங்கெழு திருந