தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   68


 

இனி   ஒரு  கூட்டமும்   நிகழாது   ஆண்டு   வந்துடைவேட்கை
இருவருக்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று.இவ்வகையினான்
இக்களவொழுக்கம் மூவகைப்படும்.

89 இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

இனி,  இதன்  தலைச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  காமப்
புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் நுதலிற்று,
என்பது சூத்திரம்.

(இதன் பொருள்) இன்பமும் பொருளு.............காணுங் காலை என்பது
இன்பமும்  பொருளும்  அறனும்  என்று  சொல்லப்பட்டு,  அன்பொடு
புணர்ந்த  நடுவண்  ஐந்திணையிடத்து  நிகழும்  காமக்  கூட்டத்தினை
ஆராயுங்காலத்து என்றவாறு;

அன்பொடு    புணர்ந்த   ஐந்திணை   என்றதனால்   கைக்கிளை
பெருந்திணையை  ஒழித்து   நின்ற  முல்லை  குறிஞ்சி பாலை மருதம்
நெய்தல்  எனக்  கொள்ளப்படும்.  அவை  அன்பொடு புணர்ந்த வாறு
என்னை யெனின், கைக்கிளை பெருந்திணையைப்    போலாமை, ஒத்த
அன்பினராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும்  ஊடலும்  இரங்கலும்
நிகழ்த்துப ஆகலானும், அவை நிகழுங்கால் அத் திணைக்குஉறுப்பாகிய
இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும், இவை
அன்பொடு புணர்ந்தன என்க.  அஃதேல்,  ஐ ந்திணைப்  புறத்தவாகிய
வெட்சி,  வஞ்சி,  உழிஞை,  தும்பை,  வாகை  என்பனவும் அன்பொடு
புணர்ந்தனவாம்    எனின்,    அவை   அன்புடையார்   பலர்  கூடி
நிகழ்த்துபவையாகலின், அன்பொடு புணர்ந்தனவாம்.

"அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை."             (குறள் - 76)

என்பதனாலும் கொள்க.

இனி,   இவ்வைந்திணையும்    இன்பமும்   பொருளும்   அறமும்
ஆயினவாறு.  என்னையெனின்  புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும்
இன்பந் தருதலின் இன்பமாயின,  முல்லை  முதலாகிய  ஐந்திணைக்கும்
உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும்  இவற்றின்  புறத்தாகிய
வெட்சி வஞ்சி உழிஞை தும்பை  என்பனவும்  வாகையுள்  ஒரு கூறும்
பொருளாகலானும், புணர்தல் முதலாகிய  உரிப்பொருளான் வருவதொரு
கேடின்மையானும்,  பொருளாயின.  இவ்வொழுக்கங்கள்  அறத்தின்வழி
நிகழ்தலானும், பாலையாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலானும்,
இவை  அறமாயின.  அஃதேல், கைக்கிளை பெருந்திணையும் இவற்றின்
புறமாகிய   பாடாண்பாட்டும்  காஞ்சியும்  அறமுதலாகிய மூன்றுமன்றி
அன்பொடு    புணர்தல்    வேண்டுமெனின்,   காஞ்சி   அன்பொடு
புணராமையும்  பாடாண்பாட்டும்    அன்பொடு    புணர்தல்    ஒரு
தலையன்மையும் அவ்வோத்தினுள் கண்டுகொள்க.     ஏனையிரண்டும்
அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன.  இனி  அவை  அறனும்
பொருளுமாய் இன்பமாகா; அஃதேல், அறனும் பொருளும் ஆகாமையும்
வேண்டுமெனின் குலனுங் குணனுங் கல்வியும் உடையராகிய  அந்தணர்
என  விசேடித்தவழி ஏனையோர்க்கு இம் மூன்று பொருளும் இயைதல்
வேண்டுமென்னும் நியமம் இன்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும்.

இனி,ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய
உரிப்பொருளும்,   அந் நிலமும் காலமும் கருப்பொருளும்,  களவினும்
கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப்படும். அவற்றுள்,
புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக்கூட்டம் எனக் கொள்க.

இன்னும்  அன்பொடு  புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம்
என்றதனால் எல்லா நிலத்தினும்  காமக்கூட்டம்  நிகழப்பெறும்  என்று
கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க.

மறையோர்  தேஎத்....யோரியல்பே  என்பது -மறையோரிடத்தோதப்
பட்ட  மணம்  எட்டனுள்ளும்  துறையமை  நல்யாழினை யுடையராகிய
துணைமையோர் நெறி என்றவாறு.

மறையோர் என்றது அந்தணரை.தேஎம் என்றது அவரதாகிய நூலை.
மணம்   எட்டாவன:   பிரமம்,   பிரசாபத்தியம்,  ஆரிடம்,  தெய்வம்,
காந்திருவம்,   அசுரம்,   இராக்கதம்,  பைசாசம்  என்பன. பிரமமாவது
கன்னியை  அணிகலன்  அணிந்து பிரமசாரியாயிருப்பானொருவனுக்குத்
தானமாகக்    கொடுப்பது.    பிரசாபத்தியமாவது,   மகட்கோடற்குரிய
கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுதுகுரவரும் இயைந்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:52:07(இந்திய நேரம்)