Primary tabs

‘தீங்கட்டாய்’ என்பதூஉம் குறிப்பிற்றோன்றின. பிறவும் என்ன. (3)
155.
சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப வறிந்திசி னோரே.
உரை: சொல்லாவன, பெயர்ச்
சொல்லும் வினைச்சொல்லும் என
இரண்டென்று சொல்லுவர் அறிவோர் என்றவாறு.
பெயர்ச்சொற்கு இலக்கணம் வேற்றுமையோத்தினுட் கூறினார்;
வினைச்சொற்கு இலக்கணம் வினையியலுட் கூறுப; பிறசொல்லும்
உளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப், ‘பெயரே வினையென்
றாயிரண்டு’ என்றார். (4)
156.
இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு
மவற்றுழி மருங்கிற் றோன்று மென்ப.
உரை: இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும்
வினையையும் சார்ந்துதோன்றும் என்றவாறு.
சார்ந்துதோன்றும் எனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும்.
வழக்குப் பயிற்சி நோக்கி இடைச்சொல் முற்கூறினார். (5)
157.
அவற்றுட்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
யுயர்திணைக்குரிமையு மஃறிணைக்குரிமையு
மாயிரு திணைக்குமோ ரன்ன உரிமையு
மம்மூ வுருபின தோன்ற லாறே.
உரை: மேற் கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப்படுவன,
உயர்திணைக்கு உரிமையவாய் வருவனவும், அஃறிணைக்கு
உரிமையவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த ஒரிமையவாய்
வருவனவும் என மூன்று வேறு வாய்பாட்டான் வகுத்துத் தோன்றும்
நெறிக்கண் என்றவாறு. (6)
158. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு
முரியவை யுரிய பெயர்வயி னான.