Primary tabs

உம் என்பது உந்து எனத் திரிதல்
294. உம்முந் தாகும் இடனுமார் உண்டே.
இஃது, உம் என்னும் இடைச்சொல் திரியும் என்கின்றது.
(இ-ள்.) உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே - ‘வினைசெயல்
மருங் கிற் காலமொடு வருவனவற்றுள்’ (252) உம் ஈறு உந்தாய்த்
திரிதலும் உடைத்து, எ-று.
(எ-டு.) ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து’ (புறம். 395-11) ‘நாரரி
நறவினாண்மகிழ் தூங்குந்து’ (புறம்.400:14) என வரும்;
இடனுமார் உண்டே, என்றதனான், இத்திரிபு பெயரெச்சத்திற்கே
கொள்க. (44)
எண்ணிடைச்சொற்கள் வினைச்சொற்களோடும் வருதல்
295.
வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே.
இஃது எண்ணிடைச்சொற்கள் வினைச்சொற்கண்ணும் வரும்
என்கின்றது.
(இ-ள்). எண்ணுவினையொடு
நிலையினும் நிலை திரியா-
எண்ணிடைச் சொற்கள்
பெயர்ச்சொல்லோடு அன்றி
வினைச்சொல்லொடு நிற்பினுந் தத்தம்
நிலைமையின் திரியா;
அவற்றவற்று இயல்பு
நினையல் வேண்டும் - அவற்றவற்று
இலக்கணங்களை
ஆராய்ந்து அறிதலை வேண்டும் ஆசிரியன், எ-று.
(எ-டு.) ‘உண்டுந் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்,
செல்வ
லத்தையானே’ (புறம்.166:30,31) உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் என வரும். ஒழிந்த எண் வினையொடு வந்தன உளவேற் காண்க. உண்டு தின்று ஓடி வந்தான் என்பது தொகை இன்றேனும், செவ்வெண்ணாம், சிறுபான்மை முற்றும் தொகை பெற்று வருதலின், ‘சாத்தன் வந்தான்; கொற்றன் வந்தான்; வேடன் வந்தான்; மூவரும் வந்தமையான் கலியாணம் பொலிந்தது’ என முற்றுச்
செவ்வெண் தொகை பெற்று வரும். இவை எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின் எண்ணப்படா எனின், ஒரு பொருள்
வேறுபாட்டான் எண்ணினார். இதனை, ‘இம்மூவரும் வரின் கலியாணம் பொலியும்’ என்று இருக்கின்றான் கூற்றாகக் கொள்க. என்னை? முன்னர்ச் சாத்தன் வந்தான்; பின்னர்க் கொற்றன் வந்தான்; அதன் பின்னர் வேடன் வந்தான்.

