தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   798


யின், எ-று. 

(எ-டு.) சட்டி,  சள்ளை,  சமை  எனவும்,  ‘சான்றோர்  சமழ்த்தனர்
நிற்பவே.’  ‘தைய  லாய்!  சமழாதுரை  என்றதே.’  (சீவக.1000) எனவும்
சகரம்  மொழிக்கு முதலாய் வந்தவாறு காண்க. இவை, ‘சகரக் கிளவியும்
அவற்றோ  ரற்றே,  அஐ ஒள  எனும் மூன்றலங் கடையே.’ (எழுத். 62)
என ஆசிரியர் விலக்கலின், அக்காலம் மொழிக்கு முதலாகாது விலக்கிய
சகரம்,  பிற்காலத்து  வழங்கியதாயிற்று,  ‘ஞெண்டு’  (குறுந்.117) என்பது
‘ஞண்டு’ ஆய்ப் பின்னர் ‘நண்டு’ என மரீஇயிற்று. 

இச்சூத்திரம்,  ‘எதிர்பொருள்   உணர்த்தல்’   (பொ.656)  என்னும்
உத்தியாம்.  இவ்வாறு  பின்னர்  வழங்குவன எல்லாவற்றிற்கும் இதுவே
விதி. 

இனி,  ‘ஒன்றென   முடித்த’லாற்,   புதியன   தோன்றினாற்போலப்
பழையன  கெடுவனவும்  உள.  அவை,  ‘அழன், புழன்’ முதலியனவும்,
எழுத்திற்புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். (56) 

செய்யுள் விகாரம்

453. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்.

இது, செய்யுள் விகாரம் கூறுகின்றது. 

(இ-ள்.) குறைச்சொற்கிளவி   -    குறைக்கப்படுஞ்   சொல்லாகிய
சொற்கள்,  குறைக்கும்வழி அறிதல்-குறைக்கும் இடம் அறிந்து குறைக்க,
எ-று. 

‘குறைக்கும்  வழி  அறிதல்’ என்றது, ‘ஒரு சொற்குத் ‘தலை, இடை,
கடை’ என  இடம்  மூன்றே;  அவற்றுள்  ‘இன்னுழிக்  குறைக்கப்படும்
இச்சொல்,’ என்று அறிந்து குறைக்க,’ என்றவாறாம். 

(எ-டு.) மரையிதழ்  புரையும்  அஞ்செஞ்  சீறடி’ எனவும், ‘வேதின
வெரிநின்  ஓதிமுது  போத்து’ (குறுந்.140) எனவும், ‘நீல்உண் துகிலிகை
கடுப்பப் பலவுடன்’ எனவும்  மூன்று  இடத்தும்  குறைந்தவாறு காண்க.
ஈது, ஒரு  சொல்லின்கண்  சிறிது  நிற்பச்  சிறிது கெடுத்தல் ஆதலின்,
முழுவதும்  கெடுத்தலாகிய ‘தொகுக்கும்வழித்  தொகுத்த’லின் வேறாதல்
அறிக. 

‘குறைச்சொற்  கிளவி’  எனவே,  இவ்விதி   செய்யுட்கண்  என்பது
பெறுதும். இது,
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:14:01(இந்திய நேரம்)