தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2435


யுடைத்து வாகை எ-று.

இதனுள்  ஏது  விரியாதனவற்றிற்கும்    ஏது    விரித்தவாற்றான்
இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க.              (21)

காஞ்சி பெருந்திணையது புறனாதல்
 

77.
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.
 

இத்துணையும்   உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி,
இஃது  உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது.
இதனை   வாகைக்குப்   பின்வைத்தார்.  வீரக்குறிப்பு  நிலையாமைக்
குறிப்போடு உறவுடைத்து என்றற்கு.

(இ-ள்.)  காஞ்சிதானே  பெருந்திணைப்  புறனே - எழுதிணையுட்
காஞ்சிதானேயெனப்   பிரிக்கப்பட்ட  புறத்திணை  பெருந்திணைக்குப்
புறனாம் எ-று.

அதற்கு   இது   புறனாயவாறு    என்னையெனின்,    எண்வகை
மணத்தினும்   நான்கு மணம்பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும்
அற முதலாகியமும்  முதற்பொருளும் அவற்றது நிலையின்மையு மாகிய
ஆறனுள்ளும்    நிலையின்மை   மூன்றற்கும்   உரித்தாய்   எல்லாத்
திணைகட்கும்    ஒத்த    மரபிற்றாகலானும்,  ‘பின்னர்   நான்கும்
பெருந்திணை பெறுமே’
 (தொல்.  களவியல்  14)  என்ற  நான்குஞ்
சான்றோர்   இகழ்ந்தாற்போல  அறம்  முதலியவற்றது  நிலையின்மை
யுணர்ந்து   அவற்றை  அவர்   இகழ்தலானும்,  ‘ஏறிய  மடற்றிறம்’
(தொல்.அகத்.51) முதலிய நான்குந் தீய காமமாயினவாறு போல உலகிய
னோக்கி   நிலையாமையும்    நற்பொருளன்றாகலானும்,   உரிப்பொரு
ளிடைமயங்கி  வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல
அறம்பொருளின்பம்     பற்றியன்றி     வேறுவேறு     நிலையாமை
யென்பதொரு  பொருளின்றாதல்  ஒப்புமையானும், பெருந் திணைக்குக்
காஞ்சி புறனாயிற்று. ‘கைக்கிளை முதலாப் பெருந் திணை யிறுவாய்’
(தொல்.  அகத்.  1)  ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்கு  இது
புறனாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமை யுணர்க. இது   மேலதற்கும்
ஒக்கும்.                                                (22)

காஞ்சித் திணைது பொதுவிலக்கணம்
 

78.
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
 

இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணம் கூறுகின்றது.

(இ-ள்.)   பாங்கருஞ்   சிறப்பின்   -  தனக்குத்  துணையில்லாத
வீட்டின்பம்  ஏதுவாக;  பல்லாற்றானும்.   அறம் பொருள் இன்பமாகிய
பொருட்பகுதியானும்  அவற்றுப்  பகுதியாகிய   உயிரும்  யாக்கையுஞ்
செல்வமும்  இளமையும்  முதலியவற்றானும்;  நில்லா  உலகம் புல்லிய
நெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:22:45(இந்திய நேரம்)