தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2438


செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த
நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா விளமை
யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே’’          (புறம்.243)

இது வீடு பெறுதற்கு வழி கூறியது.

பண்புற   வரூஉம்   பகுதி   நோக்கிப்   புண்கிழித்து   முடியும்
மறத்தினானும்   -   நன்றாகிய  குணம்  உறுநிலையாகப்  பெறுகின்ற
பகுதியை  யாராய்ந்து  பெறுதற்குப்  பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும்
வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து
இறக்கும் மறக்காஞ்சியானும்;

இது  யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது.
இதனை    வாகைத்திணைப்   பின்னர்   வைத்தார்;   இக்காஞ்சியும்
வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல் பற்றி.

உ-ம்:

‘‘பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச்
சென்று களம்புக்க தானை தன்னொடு
முன்மலைந்து மடிந்த வோடா விடலை
நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன்
புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச்
சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை
முரண்கெழு தெவ்வர் காண
விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே’’

இது  போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு
உடம்பினது  நிலையின்மையினையும்  பண்புற  வருதலையும் நோக்கி
இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.

ஏமச்  சுற்றம்   இன்றிப்   புண்ணோற்   பேஎய் ஓம்பிய பேஎய்ப்
பக்கமும்  -  கங்குல்  யாமத்துக் காத்தற்குரிய  சுற்றக்குழாமின்மையின்
அருகு   வந்து   புண்பட்டோனைப்   பேய்தானே   காத்த   பேய்க்
காஞ்சியானும்;

பேய்   காத்ததென்றலின்   ஏமம்   இரவில்  யாமமாயிற்று. ஏமம்
காப்புமாம்.  ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங்
கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.

இது   சுற்றத்தாரின்மை   கூறலிற்   செல்வ  நிலையாமையாயிற்று.
‘பக்க’மென்றதனாற்  பெண்டிர்  போலவார்  காத்தலும்  பேயோம்பாத
பக்கமுங் கொள்க.

உ-ம்:
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:23:19(இந்திய நேரம்)