Primary tabs

‘‘ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்’’
(சிலப். மங்கல)
எனவும் இவை குடையையும் செங்கோலையுங் திகிரியையும்
புனைந்தன.
மாணார்ச்
சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள்
வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை
வாழ்த்தும் வாண்மங்கலமும்;
இது பிறர்
வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும்
‘வென்றவாளின்
மண்’ (புறம்.68) என்பதனின் வேறாயிற்று.
புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின் ‘மாணார்ச் சுட்டிய’
என்றார்.
உ-ம்:
‘‘ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக்
கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத்
தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி
நீராட்டி யுண்ட நிணம்’’
என வரும்.
‘‘அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி
யுண்டாடும் பக்கமு முண்டு’’
(முத்தொள்.38)
இது பிறர் கூறியது.
இது பரணியிற் பயின்றுவரும்.
மன்னெயில்
அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த
மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும்
வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்;
அழித்ததனான் மண்ணுமங்கலம்.
உ-ம்:
‘‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்’’
(புறம்.15)
என எயிலழித்தவாறு கூறி,
‘‘வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட’’
(புறம்.15, 20 -1)
எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க.
குடுமிகொண்ட மண்ணுமங்கலம்
எயிலழித்தல் கூறாமையின்
இதனின் வேறாயிற்று.
பரிசில் கடைஇ