தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5249


 

பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான் எ-று.

தலைவற்குத்  தெய்வமோ  அல்லளோவென  நிகழ்ந்த ஐயம், நூன்
முதலியவற்றான்      நீக்கித்       தெய்வமன்மை      உணர்தற்கு
அறிவுடையனாதலானுந்,   தலைவிக்கு,    முருகனோ     இயக்கனோ
மகனோவென ஐயம்  நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள்
ஆகலானும்   இங்ஙனங்   கூறினார்.   தலைவிக்கு,   ஐயம்  நிகழின்
அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல்
பற்றிச் ‘சிறந்துழி’ என்றார்.

உ-ம்:

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.”           (குறள்.1081)

எனவரும். (3)

ஐய நீங்கித் தெளிதற்குரிய காரணம் இவையெனல்

94. வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்(று)
அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ
நின்றவை களையுங் கருவி யென்ப.

இஃது   ஐயுற்றுத்   தெளியுங்கால்   இடையது  ஆராய்ச்சியாதலின்
ஆராயும்  கருவி  கூறுகின்றது.  வண்டு  முதலியன  வானகத்தனவன்றி
மண்ணகத்தனவாதல்     நூற்கேள்வியானும்     உய்த்துணர்ச்சியானும்
தலைமக்கள் உணர்ப.

(இ-ள்.)  வண்டே - பயின்றதன்மே லல்லது செல்லாத தாது ஊதும்
வண்டு; இழையே   -   ஒருவரான்   இழைக்கப்பட்ட  அணிகலன்கள்;
வள்ளி  - முலையினுந்  தோளினும்  எழுதுந் தொய்யிற்கொடி; பூவே -
கைக்  கொண்டு  மோந்து  உயிர்க்கும்  கழுநீர்ப்பூ;  கண்ணே - வான்
கண்ணல்லாத  ஊண்  கண்;  அலமரல்  -  கண்டறியாத  வடிவுகண்ட
அச்சத்தாற்  பிறந்த தடு மாற்றம்;  இமைப்பே  -  அக்கண்ணின் இதழ்
இமைத்தல்; அச்சம் - ஆண்  மகனைக்  கண்டுழி  மனத்திற்  பிறக்கும்
அச்சம்;   என்று   அன்னவை  பிறவும் -  என்று  அவ்வெண்வகைப்
பொருளும்   அவைபோல்வன  பிறவும்;  அவண்  நிகழ  நின்றவை -
அவ் வெதிர்ப்பாட்டின்கண் முன்பு கண்ட வரை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:19:26(இந்திய நேரம்)