தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5349


 

ர் ஆயினும் - களவொழுக்கம் புறத்தார்க்குப்  புலனாய்  அலர்
தூற்றப்படினும்:

உ-ம்:

“பாவடி யுரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதையூர்க்கே
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை யன்னவென்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.”       (குறுந்.89)

இது செவிலி தானே கூறியது.

“அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற்
கூறார் பெண்டென மொழிய வென்னை
யதுகேட் டன்னா யென்றன ளன்னை
பைபைய வெம்மை யென்றனென் யானே.”    (ஐங்குறு.113)

இதனுள்,     பெண்டென்றதனைக்   கேட்டு   அன்னாயென்றனள்
அன்னையென  அலர்தூற்றினமை  கண்டு செவிலி  கூறிய  கூற்றினைத்
தலைவி கொண்டு கூறியவாறு காண்க.

காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி கரந்தொழுகுங்  காமந்  தானே
அக்களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப் படுப்பினும்:

உ-ம்:

“மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன்றுண்டு.”             (குறள்.1273)

இது, காமத்தான் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது.

அளவு மிகத் தோன்றினும் - கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
புணர்ச்சியாற்  கதிர்த்துக்  காரிகை  நீரவாய்  அவளிடத்து  அளவை
மிகக் காட்டினும்:

உ-ம்:

“கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.”             (குறள்.1272)

இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது.

“பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக்
கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி
யெல்லிவள் பெரிதெனப் பன்மாண் கூறிப்
பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந்
தருங்கடிப் படுத்தனள்...
... ... ... ...
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே.”           (அகம்.150)

இது, தோழி கொண்டு கூறியது.

தலைப்பெய்து  காணினும் -  இருவர்க்குங்  கூட்டம்  நிகழ்தலானே
தலைவனை   இவ்விடத்தே  வரக்  காணினுந்  தலைவியைப்  புறத்துப்
போகக் காணினும்:

பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:38:59(இந்திய நேரம்)