Primary tabs


உ-ம்:
“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த வணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றிய
மின்னொளி ரெஃகஞ் செந்நெறி விளக்கத்
தனியன் வந்து பனியலை முனியான்
நீரிழி மருங்கி னாரிடத் தமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்ற மசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக்
குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரு
மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு
முருகென வுணர்ந்து முகமன் கூறி
யுருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேட் பரவு மன்னை யன்னோ
என்னா வதுகொ றானே பொன்னென
மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய
மணிநிற மஞ்ஞை யகவும்
அணிமலை நாடனோ டமைந்தநந் தொடர்பே.” (அகம்.272)
இம் மணிமிடைபவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு
முருகெனப்
பராவினமை தோழி கொண்டு கூறினாள்.
“உருமுரறு கருவிய” (அகம்.158) என்பதனுள்,
“மிடையூர் பிழியக் கண்டனள் இவளென
அலையல் வாழிவேண் டன்னை”
என்றது, தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறியதனைத்
தோழி கொண்டு கூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க.
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற்
செய்திக்கண்ணும்-கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டினானுங்
கழங்கினானுந் தெய்வத்திற்குச் சிறப்புச்
செய்யாக்கால் இம்மையல்
தீராதென்று
கூறுதலின், அவ்விருவருந் தம்மினொத்த திறம்பற்றிய
தனையே செய்யுஞ் செய்தியிடத்தும்:
‘திறம்’ என்றதனான் அவர் வேறு வேறாகவுங் கூறப்படும்.
உ-ம்:
“பெய்ம்மணன் முற்றங் கவின்பெற இயற்றி
மலைவான் கோட்ட சினைஇய வேலன்
கழங்கினா னறிகுவ தென்றால்
நன்றா லம்ம நின்றவிவ ணலனே.”
(ஐங்குறு.248)
இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று.
“அறியா மையின் வெறியென மயங்கி
அன்னையு மருந்துய ருழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்
ஆய்மல ருண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே.”
(ஐங்குறு.242)
இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று.