Primary tabs


“அணங்குடை நெடுவரை” என்னும் (22) அகப்பாட்டினுட் கட்டுக்
கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. “பனிவரை நிவந்த” என்னும் (98)
அகப்பாட்டினுட் “பிரப்புளர் பிரீஇ”
எனக் கட்டுவிச்சியைக்
கேட்டவாறும், “என் மகட்கு” எனச் செவிலிகூற்று நிகழ்ந்தவாறுங்
காண்க. இதனுள் “நெடுவேணல்குவ னெனினே” எனத் தலைவி அஞ்ச
வேண்டியது, இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான்
அருளுமென்று
கோடலின்.
“இகுளை கேட்சின் காதலந் தோழி
வளை யுண்கண் டென்பனி மல்க
வறிதியான் வருந்திய செல்லற் கன்னை
பிறிதொன்று கடுத்தன ளாகி வேம்பின்
வெறிகொள் பர்சிலை நீலமொடு சூடி
யுடலுநர்க் கடந்த கடலந் தானைத்
திருந்திலை நெடுவேற் றென்னவன் பொதியில்
அருஞ்சிமை யிழிதரு மார்த்துவர லருவியிற்
றதும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு
துருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக்
கடம்புங் களிறுங் பாடி நுடங்குபு
தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும்
ஆடின ராதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
குறிவர லரைநாட் குன்றத் துச்சி
நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருள்
திருமணி யுமிழ்ந்த நாகங் காந்தள்
கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி
நன்னிற மருளு மருவிடர்
இன்னா நீளிடை நினையுமெ னெஞ்சே.”
(அகம்.138)
என்னும் மணிமிடைபவளம் விதந்து கூறாமையின்
இரண்டும் ஒருங்கு
வந்தது.
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் - அங்ஙனம் வெறியாடுதல்
வேண்டிய தொழின் முடிந்த பின்னுந் தலைவிக்கு வருத்தம் மிகினும்:
உ-ம்:
“வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளிகடியாள்
காந்தண் முகிழ்விரலாற் கண்ணியுங் கைதொடாள்
ஏந்தெழி லல்குற் றழைபுனையா ளெல்லேயென்
பூந்தொடி யிட்ட புலம்பு மறிதிரோ”
எனவும்,
“புனையிருங் குவளைப் போதுவிரி நாற்றஞ்
சுனையர மகளி ரவ்வே சினைய
வேங்கை யொள்வீ வெறிகமழ் நாற்றமொடு
காந்த ணாறுப கல்லர மகளிர்
அகிலு மாரமு நா அறுபவன்
திறலரு மரபிற் றெய்வ மென்ப
வெறிபுனங் காவ லிருந்ததற் றொட்டுத்
தீவிய நாறு மென்மகள்
அறியேன் யானிஃதஞ்சுதக வுடைத்தே”
எனவும் வரும்.
இவை ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாயின.
“அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி அதன்றிறம்
யானுந் தெற்றென வுணரேன் மேனாண்
மலிபூஞ் சாரலென் றோழி மாரோ
டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி யென்னும் பூச றோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயிதழ்
ஊசி போதிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்
டியாதோ மற்றம்மாதிறம் படரென
வினவி நிற்றந் தோனே அவற்கண்
டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி
நாணி நின்றன மாகப் பேணி
ஐவகை வகுத்த கூந்த லாய் நுதன்
மையீ ரோதி மடவீர் நும்வாய்ப்
பொய்யு முளவோ வென்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேர னெதிர்மறுத்து
நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே
பகன்மாய் அந்திப் படுசுட ரமயத்
தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன்
மகனே தோழி யென்றனள்
அதனள வுண்டுகொன் மதிவல் லோர்க்கே.” (அகம்.48)
இது, செவிலி கூற்றினைத் தோழி கொண்டு கூறியது.
காதல் கைமிகக் கனவின் அரற்றலும் - தலைவியிடத்துக் காதல்
கையிகந்து பெருகுதலான் துயிலா நின்றுழியும் ஒன்று கூறி அரற்றுதலும்:
கனவு - துயில், துயிலிற் காண்டலைக் கனவிற் காண்டலென்ப.
உ-ம்:
“பொழுது மெல்லின்று” (குறுந்.161) என்பதனுட் “புதல்வற் புல்லி
அன்னாய்” என்று தலைவியை விளித்தது கனவின் அரற்றலாயிற்று.
அரற்றல், இன்ன