தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5361


 

இரவுக்குறியிட மிதுவெனல்

131. இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.

இது, நிறுத்தமுறையானே இரவுக்குறியிடம் உணர்த்துகின்றது.

(இ-ள்.)   அகமனைப்  புகாக்   காலை   ஆன  இரவுக்குறியே  - உள்மனையிற்  சென்று  கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான இரவுக்குறியே:

ஏகாரம், பிரிநிலை.

இல்லகத்துள்ளும்   மனையோர்  கிளவி  கேட்கும்  வழியதுவே  -
இவ்வரைப்பினுள்ளதாகியும்  மனையோர்   கூறிய   கிளவி   கேட்கும்
புறமனையிடத்ததாம் எ-று.

அல்ல  குறிப்பிட்டதனை ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன்
அதுகேட்டு  ஆற்றுவனென்பது  கருதி,  ‘மனையோர்  கிளவி கேட்கும் வழியது’  என்றார்;    ஏகாரம்   ஈற்றசை:  என்றது,  இரவுக்குறி  அம்முயற்சிக்காலத்து   அச்சநிகழ்தலின்,    அகமனைக்கும்    புறமதிற்கும் நடுவே   புணர்ச்சி   நிகழுமென்றதாம்.   அகமனையிற்   புகாக்காலை யெனவே,   இரவுக்குறி    அங்ஙனஞ்   சிலநாள்   நிகழ்ந்த  பின்னர், அச்ச மின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறுமென்பதுங் கூறியதாம்.

உ-ம்:

“அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்”   (அகம்.198)

எனவும்,

“மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென
அலையல் வாழிவேண் டன்னை”             (அகம்.158)

எனவும்,

“அட்டி லோலை தொட்டனை நின்மே.”         (நற்.300)

எனவும் வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது.

“உளைமான் துப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின்ஊர விருங்கதுப்பு
ஐதுவர லசைவளி மாற்றக் கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகன் மழகளி றுறங்கு நாடன்
ஆர மார்பின் அணிமிஞி றார்ப்பத்
தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன்
காவல ரறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவ மசையினன் புகுதந்
துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந்
தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் தோழி

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:41:20(இந்திய நேரம்)