தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5368


 

பிரிதலுமென மூன்றுமாம்.

உ-ம்:

“பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமண லடைகரை யலவ னாட்டி
அசையின ளிருந்த வாய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
பெறலருங் குரைய ளாயி னறந்தெரிந்து
நாமுறை தேஎ மரூஉப்பெயர்ந் தவனொ
டிருநீர்ச் சேர்ப்பினுப்புட னுழந்தும்
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தன மடுத்தன மிருப்பிற்
றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் தண்கரைப் பகுக்குங்
கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே.”    (அகம்.280)

இதனுள்  ஈண்டுள்ள  பொருள்  கொடுத்தாற்  பெறல் அரியளாயின் தன்னை   வழிபட்டால்  தந்தை  தருவனோ?  அது  நமக்கரிதாகலின் இன்னும்  பொருள்  நாம்  மிகத்  தேடிவந்து  வரைதுமெனப் பொருள் வயிற்பிரியக் கருதியவாறு காண்க.

“பூங்கொடி மருங்கிற் பொலம்பூ ணோயே
வேந்து வினைமுடித்து வந்தனர்
காந்தண் மெல்விரற் கவையினை நினைமே.”

இது   வேந்தற்குற்றுழிப்  பிரிந்தான்  வரைவு  மலிந்தமை  தோழி கூறியது.  ஏனைய  வந்துழிக் காண்க. ஓதுதற்கு ஏவுவார் இருமுதுகுரவ ராதலின், அவர்   வரையாமற்  பிரிகவென்னார்.  பகைவென்று  திறை கோடற்குப் பிரியுங்கால்   அன்புறுகிழத்தி  துன்புற்றிருப்ப  வரையாது
பிரிதலின்று.   இது   தூதிற்கும்  ஒக்கும்.  மறைவெளிப்படுதல்  (499)
கற்பென்று   செய்யுளியலுட்   கூறுதலின்,   இதனை   இவ்வோத்தின்  இறுதிக்  கண்  வைத்தார். கற்பினோ டொப்பினும்  பிரிவின்றெனவே, கற்பிற்காயிற் பிரிவுவரை வின்றாயிற்று. (50)

மூன்றாவது களவியற்கு ஆசிரியர் பாரத்துவாசி

நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:42:42(இந்திய நேரம்)