தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5381


 

இது    கற்புக்காலத்துப்   பரவுக்கடன்  கொடுக்கின்ற  காலத்துத்
தலைவன் கூறியது.

அல்லல்  தீர  ஆர்வமொடு  அளைஇச்  சொல்லுறு  பொருளின்
கண்ணும் -    வரைந்த   காலத்து  மூன்றுநாட்  கூட்டமின்மைக்குக்
காரண மென்னென்று   தலைவி   மனத்து   நிகழாநின்ற   வருத்தந்
தீரும்படி  மிக்க வேட்கையோடு   கூடியிருந்து வேதஞ்சொல்லுதலுற்ற
பொருளின் கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக் கூறும்.

அது   முதனாள்   தண்கதிர்ச்   செல்வற்கும்,  இடைநாள்
கந்தருவர்க்கும்,  பின்னாள்  அங்கியங்  கடவுட்கும்  அளித்து
நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான்
நுகர   வேண்டிற்று,   அங்ஙனம்   வேதங்  கூறுதலான் எனத்
தலைவிக்கு விளங்கக்   கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று.

சொல்லென   ஏனது   சுவைப்பினும்  நீ  கைதொட்டது வானோர்
அமுதம் புரையுமால்  எமக்கென  அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்
- அமுதிற்கு  மாறாகிய   நஞ்சை  நுகரினும்  நீ  கையான்  தீண்டின
பொருள்  எமக்கு உறுதியைத்தருதலின் தேவர்களுடைய  அமிர்தத்தை
ஒக்கும் எமக்கெனப்  புனைந்துரைத்து  இதற்குக்  காரணங்  கூறென்று
அடிசிலும் பூவுந் தலைவி தொடுதலிடத்தும்: கூற்று நிகழும்.

உவமை இழிவு சிறப்பு.

“வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர்”               (குறுந்.196)

எனத் தலைவன் கூற்றினைத் தோழிகொண்டு கூறியவாறு காண்க.

அந்தணர்  திறத்தும்  சான்றோர்  தேஎத்தும் அந்தமில்   சிறப்பிற்
பிறர்பிறர் திறத்தினும்  ஒழுக்கங்காட்டிய   குறிப்பினும்  -  வேட்பித்த
ஆசிரியனுங்  கற்பித்த  ஆசிரியனுமாகிய  பார்ப்பார்  கண்ணும், முற்ற
உணர்ந்து  ஐம்பொறியையும்  அடக்கியோர்  கண்ணும்,  முடிவில்லாச்
சிறப்பினையுடைய  தேவர்கள்   கண்ணும்  ஒழுகும்  ஒழுக்கத்தினைத்
தான்  தொழுதுகாட்டிய குறிப்பின் கண்ணும்:

‘பிறர்பிற’ரென்றார்   தேவர்  மூவரென்பதுபற்றி.   தன்னையன்றித்
தெய்வந் தொழாதாளை இத்தன்மையோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:45:13(இந்திய நேரம்)