தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5457


 

தீங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் அழுங்கல் ஊரே.”         (குறுந்.140)

இது கற்பு.

“கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிறுந்
தேர்வண் கோமான் தேனூர அன்னஇவள்
நல்லணி நயந்துநீ துறத்தலிற்
பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே.”         (ஐங்குறு.55)

இது, தோழி அலர் கூறியது. (21)

அலராற்றோன்றும் பயனிதுவெனல்

163. அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே.

இஃது அலர் கூறியதனாற் பயன் இஃது என்கின்றது.

(இ-ள்.)  அலரில்  தோன்றுங்  காமத்திற்  சிறப்பே  -  இருவகைக்
கைகோளினும்    பிறந்த   அலரான்   தலைவற்குந்     தலைவிக்குங்
காமத் திடத்து மிகுதிதோன்றும் எ-று.

என்றது,  களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான்
இருவர்க்குங்     காமஞ்சிறத்தலுங்     கற்பினுட்     பரத்தைமையான்
அலர்தோன்றியவழிக்     காமஞ்சிறத்தலுந்    தலைவன்   பிரிவின்கட்
டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம்.

உ-ம்:

“ஊரவர் கௌவை யெருவாக அன்னசொல்
நீராக நீளுமிந் நோய்”                    (குறள்.1147)

“நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பே மெனல்”                    (குறள்.1148)

என்றாற்போல்வன கொள்க. (22)

இதுவுமது

164. கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.

இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது.

(இ-ள்.)  கிழவோன் விளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுள்
ஆடலும்  பாடலும்   கண்டுங்  கேட்டும்  அவருடன் யாறு  முதலியன
ஆடியும்  இன்பம்   நுகரும்   விளையாட்டின்   கண்ணும்,   ஆங்கும்
அற்று   -  அப்பரத்தையரிடத்தும் அலரான்  தோன்றுங் காமச் சிறப்பு
எ-று.

‘ஆங்கும்’   என்ற  உம்மையான்   ஈங்கும்   அற்றெனக் கொள்க.
தம்மொடு  தலைவன்  ஆடியது  பலரறியாதவழி  யென்றுமாம். பலரறிந்
தவழி அவனது பிரிவு  தமக்கு இழிவெனப்படுதலின் அவர்   காமச்சிறப்
புடையராம். தலைவன் அவரொடு விளையாடி  அலர்  கேட்குந்தோறுந்
தலைவிக்குப்  புலத்தலும் ஊடலும்    பிறந்து   காமச்   சிறப்பெய்தும்.
ஆங்கும்   ஈங்குமெனவே    அவ்விருவரிடத்துந்   தலைவன்  அவை
நிகழ்த்தினானாகலின்  அவற்குங் காமச் சிறப்பு ஒருவாற்றாற்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:00:02(இந்திய நேரம்)