2.2 ஒலிகளின் பாகுபாடு

தொல்காப்பியர், தமிழ் ஒலிகளை (எழுத்துகளை) முப்பது என வரையறுத்துக் கூறுகிறார். அவை அகரம் முதல் னகரம் இறுதியாக அமைந்தவை என அவற்றின் முறை வைப்புப் பற்றியும் கூறுகிறார். இவையே அன்றிச் சார்ந்து வரும் இயல்பினை உடைய வேறு மூன்று எழுத்துகளும் உண்டு என்று கூறுகிறார். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன. உயிரும் மெய்யும் ஆகிய முப்பதும் முதல்எழுத்து எனவும், சார்ந்து வரும் மூன்றும் சார்பெழுத்து எனவும் பின்னர் வழங்கப்பட்டன.

2.2.1 உயிரொலிகள்

அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டும் உயிரொலிகள். இவ்வொலிகள், அவற்றை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவாகிய மாத்திரையைக் கொண்டு குறில், நெடில் என இரண்டாகப் பகுக்கப்பட்டன. ஒரு மாத்திரை ஒலிக்கக் கூடிய அ, இ, உ, எ, ஒ என்பன ஐந்தும் குறில், இரண்டு மாத்திரை ஒலிக்கக் கூடிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் நெடில், இவற்றொடு ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் இரண்டையும் சேர்த்து நெடில் ஒலிகள் ஏழு எனப்பட்டன.

 • கூட்டொலிகள் (Diphthongs)
 • உயிரொலிகளில் ஐ, ஒள ஆகியவற்றிற்குப் பிற ஐந்து நெடில்களுக்கு இருப்பது போலத் தனியான குறில் இல்லை. இவற்றைக் கூட்டொலிகள் (Diphthongs) என்று மொழிநூலார் குறிப்பிடுவர்; வடமொழி இலக்கண நூலார் சந்தியக்கரம் எனக் குறிப்பிடுவர். சந்தியக்கரம் என்பதற்குக் கூட்டெழுத்து என்று பொருள்.

  வடமொழியில் அ, இ என்னும் இரண்டு உயிர்களின் கூட்டொலியாக ஐகாரமும், அ, உ என்னும் இரண்டு உயிர்களின் கூட்டொலியாக ஒளகாரமும் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் இவ் வடமொழிக் கருத்தை உடன்பட்டு,

  அகர இகம் ஐகாரம் ஆகும்
  அகர உகரம் ஒளகாரம் ஆகும்

  (தொல். எழுத்து. 54, 55)

  என்று கூறுகிறார். ஆனால் அவர் ஐகாரம் பற்றி மற்றொரு கருத்தையும் குறிப்பிடுகிறார். அகர உயிரும் யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி (அய்) ஐகாரம் என்றும் கூறுகிறார்.

  எனவே தொல்காப்பியர் காலத்தில் என்ற கூட்டொலி பற்றி இருவேறு கருத்துகள் நிலவின எனலாம். இந்த இருவேறு கருத்துகளில் அகரமும் யகரமும் சேர்ந்த கூட்டொலி என்பதாகும் என்ற கருத்தே பொருந்துவதாக உள்ளது. தொல்காப்பியர் ஐகார ஈற்றுப் பெயர்கள் விளியேற்கும்போது,

  ஐ ஆய் ஆகும்

  (தொல். சொல். 123)

  என்கிறார்.

  (எ.டு) அன்னை - அன்னாய்

  இங்கு, (அஇ) என்பது ஆய் என்றாகியது என்பதை விட, அய் என்பது ஆய் என்றாயிற்று என்பதே பொருத்தமாக உள்ளது.

  (எ.டு) அன்னய் - அன்னாய்

  தொல்காப்பியர் ஐகாரத்திற்குக் கூறியது போல, அகர உயிரும் வகர மெய்யும் சேர்ந்து ஒளகாரமாகும் என்ற மற்றொரு கருத்தைக் கூறவில்லை. சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒளவை, பௌவம் போன்ற சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருக்க இடமுண்டு, இச்சொற்களும் கீழ்க் கண்டவாறு அகரமும் வகரமுமாகச் சேர்த்து எழுத இடம் தருகின்றன.

  ஒளவை - அவ்வை
  பௌவம் - பவ்வம் (கடல்)

  மேற்கூறியவற்றால் ஐ, ஒள என்பவை அய், அவ் என்பனவற்றிலிருந்து வேறானவை அல்ல என்றும், வடமொழியைப் பின்பற்றி இவற்றை இரண்டு உயிர்களின் கூட்டொலி என்று கூறுவது பொருந்தவில்லை என்றும் உணரலாம்.

 • உயிர் மயக்கங்கள்
 • தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் உயிரளபெடை என்ற ஒன்றைக் கூறுகிறார். ஒரு நெடில் உயிரும் அதற்கு இனமான குறில் உயிரும் ஆகிய இரண்டு உயிர்கள் மயங்கி வரும் மயக்கத்தையே உயிரளபெடை என அவர் கூறுகிறார். இம்மயக்கம் செய்யுளில் மட்டுமே நிகழும். செய்யுளில் இசை நீட்டம் வேண்டும் போது, இரண்டு மாத்திரை உடைய நெடில் உயிரானது அம்மாத்திரையைவிட நீண்டு ஒலிக்கும். அப்போது அந்த நெடிலின் இனமான குறில் உயிர் அதனை அடுத்து எழுதப்படும்.

  (எ.டு) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

  மேற்கூறிய உயிர் மயக்கங்கள் தவிரத் தொல்காப்பியர் காலத்தில் வேறு வகையாகச் சொற்களில் இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவது பெரும்பாலும் இல்லை. அவ்வாறு இரண்டு உயிர்கள் சேர்ந்து வரும்போது, அவற்றிற்கு இடையே விட்டிசை தோன்றும். இவ்விட்டிசையைத் தடுக்க யகரம், வகரம் என்னும் உடம்படுமெய் இடையே தோன்றும்.

  (எ.டு)

  மணி + அழகு = மணியழகு ; பல + அரசர் = பலவரசர்.
  (மணி+ய்+அழகு) (பல+வ்+அரசர்)

  விட்டிசை = இரண்டு உயிர் எழுத்துகள் அடுத்தடுத்து நிற்கும் போது அவற்றுக்கிடையே தோன்றும் ஒலித்தடை. அஆ என்பதை ஒலித்துப் பார்த்தால் இத்தடையை உணரலாம்.

  2.2.2 மெய்யொலிகள்

  ககரம் முதல் னகரம் இறுதியாக உள்ள பதினெட்டும் மெய்யொலிகள். இவை ஒவ்வொன்றும் அரை மாத்திரை ஒலியளவு பெறும். இவற்றைத் தொல்காப்பியர் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகையாகப் பாகுபாடு செய்கிறார். இக்கால மொழி நூலார் வல்லினத்தை வெடிப்பொலிகள் (Plosives) என்றும் மெல்லினத்தை மூக்கொலிகள் (Nasals) என்றும் இடையினத்தை இடையின ஒலிகள் என்றும் குறிப்பிடுவர்.

  வல்லினம் - க, ச, ட, த, ப, ற
  மெல்லினம் - ங, ஞ, ண, ந, ம, ன
  இடையினம் - ய, ர, ல, வ, ழ, ள

  இதுவரை முதலெழுத்துகளாகிய உயிரும் மெய்யும் பற்றிப் பார்த்தோம். இனி, தொல்காப்பியர் காலத் தமிழில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துகள் எவ்வாறு வழங்கின என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

  2.2.3 குற்றியலிகரம்

  இருத்தல் - இச்சொல்லில் உள்ள இகரம் முழுமையான, ஒரு மாத்திரையுடைய இகர உயிர் ஆகும். நாடு + யாது - நாடியாது என்பதில் உள்ள இகரத்தை ஒலித்துப் பாருங்கள். அத்துடன் கேள் + மியா - கேண்மியா, செல் + மியா - சென்மியா எனும் புணர்மொழிகளில் வரும் இகரத்தையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றில் இகரம் குறைந்து ஒலிப்பதை உணரலாம். இதுவே குற்றியலிகரம் ஆகும். இது அரைமாத்திரை பெறுவது.

  நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரத்தின் முன், வருமொழி முதலில் யகரம் வரும்போது குற்றியலுகரம் இகரமாய்த் திரிபடைகிறது. கேள், செல் எனும் சொற்களுடன் மியா எனும் அசைச்சொல் புணரும்போது அவ்வசைச் சொல்லில் உள்ள இகரமும் குறுகுகிறது என்பதனை மேற்கண்ட எடுத்துக் காட்டுகளிலிருந்து உணர்கிறோம்.

  2.2.4 குற்றியலுகரம்

  இதனை மொழி இறுதிக் குற்றியலுகரம், மொழி முதல் குற்றியலுகரம் என இரு வகைப்படுத்தி விளக்குகிறார் தொல்காப்பியர்.

 • மொழி இறுதிக் குற்றியலுகரம்
 • தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, உயிரெழுத்து, இடையின எழுத்து, ஆய்த எழுத்து, வல்லின எழுத்து, மெல்லின எழுத்து ஆகிய ஐவகை எழுத்துகளைத் தொடர்ந்தோ வரும் ஒரு சொல்லின் இறுதியில் க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு வல்லின மெய்களின் மேல் ஏறி வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும். இதுவே தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்குக் கூறும் இலக்கணம்.

  (எ.டு) நாடு, முசு, மாபு, எகு, கொக்கு, பந்து

  தனிக்குறிலை அடுத்த வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குறுகவில்லை. எனவே அது முற்றியலுகரம் எனப்படும்.

  (எ.டு) கடு,பு.

 • மொழி முதல் குற்றியலுகரம்
 • மொழிக்கு முதலிலும் குற்றியலுகரம் வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். இது அவர் காலத் தமிழின் ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க இயல்பாகும். மொழி முதலில் குற்றியலுகரம் வருவது நுந்தை (உன் தந்தை) என்ற ஒரு சொல்லில் மட்டுமே என்கிறார் தொல்காப்பியர். (தொல். எழுத்து. 67). இச்சொல்லில் மொழி முதலில் வரும் மெல்லின நகர மெய்யின் மேல் ஏறி வரும் உகரம், அடுத்து வரும் மற்றொரு நகர மெய்யின் ஒலிச் சார்பால் இசைமை குறைந்து குற்றியலுகரமாக ஒலிக்கிறது. பின் வந்த நன்னூலில் மொழிமுதல் குற்றியலுகரம் கூறப்படவில்லை.

 • குற்றியலுகரம் பற்றிய மொழியியல் கருத்து
 • வல்லின மெய்கள் சொற்களின் இறுதியில் வந்தால் அவற்றை ஒலிப்பது கடினம். காட், அஃத், பஞ்ச், மார்ப் என்பவற்றை எளிமையாக உச்சரிக்க முடியுமா? இவற்றின் இறுதியில் குற்றியலுகரம் வரும்போது காடு, அஃது, பஞ்சு, மார்பு எனச் சொற்களை ஒலிப்பது எளிமையாக உள்ளது. இவ்வாறு ஒலிப்பு முயற்சி எளிமைக்காகக் குற்றியலுகரம் பயன்படுகிறது என்பது மொழிநூலார் கருத்து (டாக்டர்.மு.வ.மொழிநூல், பக்.24)

  இவ்வாறு உகரமானது சொல்லின் இறுதியில் வல்லின மெய்களைச் சார்ந்து நின்று அவற்றை ஒலிப்பதை எளிமையாக்குகிறது. அத்தோடு அல்லாமல் தானும் இசைமையில் நலிவடைந்து குற்றியலுகரமாகி விடுகிறது. இது தொல்காப்பியர் காலத் தமிழின் ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க ஓர் இயல்பு எனலாம்.

  2.2.5 ஆய்தம்

  தொல்காப்பியர் கூறும் மூன்றாவது சார்பொலி ஆய்தம். இது தற்காலத் தமிழ் நெடுங் கணக்கில் உயிர் எழுத்துகளின் வரிசைக்கும், மெய் எழுத்துகளின் வரிசைக்கும் நடுவில் உள்ளது. தொல்காப்பியர் காலத்தில் ஆய்தம் ஒரு நுண்ணிய ஒலியாக வழங்கியுள்ளது. ஆய் என்ற சொல்லுக்கு நுண்மை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர். (தொல். உரியியல்) எனவே ஆய்தத்தை அவர் ஒரு நுண்ணிய ஒலியாகவே கருதியிருக்கிறார் என்று கூறலாம்.

  வடமொழியில் நுட்பமான ஒலி ஹ என்று கூறப்படுகிறது. அதைக் காட்டிலும் மிக நுட்பமான ஒலியைத் தமிழில் தரவல்லது ஆய்தம் என்று டாக்டர் மு. வரதராசனார் குறிப்பிடுகிறார். (மொழி நூல், ப. 55).

  தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி - ஒருசொல்; புணர்மொழி - இருசொல்.)

 • தனிமொழி ஆய்தம்
 • ஆய்தம் ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும்.

  (எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு

  (எஃகு - ஒரு வகை உலோகம் ; கஃசு - கால் பலம் கொண்ட எடையளவு ; பஃது - பத்து, அஃகு - சுருங்கு)

  இச்சொற்களில் தனிக்குறிலின் முன்னர் வரும் ஆய்தம், தனது நுண்ணிய ஒலியால் தன்னை அடுத்து வரும் வன்மையான ஓசையுடைய வல்லின எழுத்துகளை உரசொலிகளாக (Fricatives) மாற்றி விடுகின்றது என்று மொழிநூலார் கூறுகின்றனர். உரசொலி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

  கீழ்க்காணும் எடுத்துக் காட்டுகளில் ககரம் எவ்வாறு ஒலிக்கிறது எனப் பாருங்கள்.

  கடல் - k ஒலி
  தங்கம் - g ஒலி
  அகம் - h ஒலி

  இம்மூன்றில் இரு உயிர் ஒலிகளுக்கு நடுவே (அ+க்+அ+ம்) வரும் ககரம் நுண்மையாகி h ஒலியைப் பெறுகிறது. இதுவே உரசொலி எனப்படும். ஆய்தமும் இவ்வாறே தன்னை அடுத்து வரும் வல்லின மெய்யின் வன்மையை மாற்றி மென்மையாக்கி (உரசொலியாக்கி) விடுகிறது. ஆய்தம் இடம்பெறும் சொற்களை உச்சரித்துப் பார்த்து இந்த உண்மையை நீங்களே உணரலாம்.

 • புணர்மொழி ஆய்தம்
 • தொல்காப்பியர் புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.

  1) வகர மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379)

  (எ.டு) அவ் + கடிய = அஃகடிய

  2) தனிக்குறிலை அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும். இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும் (தொல். எழுத்து. 369, 399)

   
  (எ.டு) கல் + தீது  = கற்றீது, கஃறீது
  முள் + தீது = முட்டீது, முஃடீது

  மேலும் தொல்காப்பியர் காலத் தமிழில், குறில் எழுத்தை அடுத்துக் கான் என்னும் எழுத்துச் சாரியை வரும்போது இடையே ஆய்தம் தோன்றி வழங்கியுள்ளது. இவ்வழக்கைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். ம + கான் = மஃகான். (தொல். எழுத்து. 28)

  மேற்கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தமிழில் சார்பொலிகள் மூன்றும், குறிப்பாகக் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒலித்தற்குக் கடினமான வல்லின ஒலிகளை, மிகவும் எளிமையாக ஒலித்தல் பொருட்டே வழங்கியுள்ளன என்பது தெளிவாகிறது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.
  தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? அவை யாவை?
  2.
  தொல்காப்பியம் வரையறுக்கும் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
  3.
  சார்ந்து வரும் மூன்று எழுத்துகள் யாவை?
  4.
  தொல்காப்பியர் காலத்தில் என்ற கூட்டொலி பற்றி நிலவிய இரு கருத்துகள் யாவை?
  5.
  குற்றியலுகரம் சொல்லுக்கு இறுதியில் எந்த எந்த மெய்களின் மேல் ஏறி வரும்?
  6.
  படு, ஆடு, பங்கு, நகு, யாது, அது, வீழ்து, தபு, பாம்பு, பசு, காசு, வயிறு - இச்சொற்களில் குற்றியலுகரச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  7.
  நாகியாது - இதைப் பிரித்துக் காட்டுக.
  8.
  கல்+தீது - இச் சொற்கள் புணர்ச்சியில் எவ்வாறு திரிபடைகின்றன?
  9.
  ஆய்தம் என்பதன் வேர்ச்சொல்லும் பொருளும் குறிப்பிடுக.