வெற்றி யாருக்கு?
பாடம்
Lesson
முன்னொரு காலத்தில் மகத நாட்டை மரகதவர்மன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்குத் திடீர் திடீர் என்று பல சந்தேகங்கள் தோன்றும். அதனை ஒட்டிப் போட்டிகளை அறிவித்துப் பரிசுகள் கொடுப்பது வழக்கம். நாட்டு நலன்களில் காட்டும் அக்கறையைவிட இப்படிப் பொழுதுபோக்கிற்காகப் போட்டிகள் நடத்துவதில்தான் அவனுக்கு விருப்பம் அதிகமாக இருந்தது. அவன் என்ன சொன்னாலும் "ஆமாம்" என்று தலையாட்டுவற்காகவே அவனது அரசவையில் பல அமைச்சர்கள் இருந்தார்கள். "காகத்தின் நிறம் சிவப்பு" என்றாலும் "ஆமாம்" என்பார்கள். "கழுதைக்கு ஒரு காலத்தில் கொம்பு முளைத்திருக்கும்" என்றாலும் "உண்மைதான்" என்பார்கள். "உப்பின் சுவை இனிப்பு" என்றாலும் ஒப்புக் கொள்வார்கள். அதற்கானக் காரணங்களையும் தேடிக்கண்டு மன்னன் மகிழும்படியாகச் சொல்லி பாராட்டும் பெற்றுவிடுவார்கள். அதனால் பொற்காசுகளும், முத்து மாலைகளும் உடனே பரிசாகக் கிடைப்பது இலாபம்தானே.
இதனால் அந்த மன்னன் மீது பெரியவர்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் வருத்தமும் கோபமும் இருந்துவந்தன. என்றாலும் மன்னனுக்கு நேரே இதனைச் சொல்ல எல்லாருக்கும் பயம். ஆனாலும் சொல்லித்தானே தீர வேண்டும். அதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று அந்நாட்டு அமைச்சர்களில் நல்லவரான நலம்விரும்பி காத்துக் கொண்டிருந்தார். அந்தப் பொன்னான வாய்ப்பு ஒரு நாள் வந்தேவிட்டது.

அந்த நாளில் நடந்தது இது தான். அரசவையில் மன்னன் தமது தலையாட்டி அமைச்சர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, "உலகத்திலேயே சிறந்த மலர் எது?" என்ற விவாதம் வந்துவிட்டது. ஒரு மந்திரி "ரோசாதான் சிறந்தது" என்றார். "காரணம் மலர்களில் அழகானதும் மணமிக்கதும் அதுதான். இந்த நாட்டிற்கு மன்னனாகத் தாங்கள் இருப்பதுபோல, மலர்களுக்கெல்லாம் மன்னனாக ரோசா இருக்கிறது" என்று அந்த அமைச்சர் கூறினார்.
அதற்கு மன்னன் தலை அசைத்ததைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்த அமைச்சருக்குப் பகீர் என்றது. எங்கே பரிசு அந்த அமைச்சருக்குப் போய்விடுமோ என்ற பயம். "இல்லை இல்லை மன்னவா" என்று பதற்றத்தோடு எழுந்தார். அவர் எழுந்த வேகத்தில் தலையில் வைத்திருந்த தலைப்பாகை தவறி வீழுந்தது. உடனே எல்லாரும் சிரிக்கத் தொடங்கினர். அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இவர் வேகமாக முறையிட்டார். "மாட்சிமைத் தங்கிய மன்னர் அவர்களே, தாங்கள் உலாப்போகும்போது ஓடிவந்து பார்க்க விரும்பும் பெண்களின் கவனம் எல்லாம் தங்களின் அழகிய திருமுகத்தின் மீதுதானே குவியும். அதற்கு நிகரானது வேறு எது? அப்படிப்பட்ட அழகு முகம்போல விளங்குவது தாமரைதான். அதில்தான் கல்விக் கடவுளான கலைவாணியும், செல்வக் கடவுளான திருமகளும் வீற்றிருக்கிறார்கள் என்றால் தாமரைதானே சிறந்த மலர்" என்று முழங்கினார். அதற்கு மன்னன் சற்றே உற்சாகமாகத் தலையாட்டியதைக் கண்டதும் அந்த அமைச்சருக்கு மகிழ்ச்சி. பரிசு தனக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
ஆனால் அடுத்துள்ள அமைச்சர் சும்மா இருப்பாரா? உடனே எழுந்தார். மன்னனை என்ன என்ன சொல்லிப் புகழ முடியுமோ அத்தனையும் சொல்லிப் புகழ்ந்தார். மற்றவர்களுக்கும் மன்னனுக்கும் இவர் மலரைப் பற்றிச் சொல்கிறாரா? அல்லது மன்னனின் புகழைப் பற்றியே சொல்லுகிறாரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அவர் சொல்லவருகிற பூ என்னவாக இருக்கும்? என்று அவரவர் மனதுக்குள் தோன்றிய பூக்களை நினைத்துக் கொண்டனர். தாம் நினைத்த பூவின் பெயரை மற்றவர் சொல்லிவிடக் கூடாதே என்ற பயம் வேறு வந்துவிட்டது.
"சரி சரி உமது மலரின் பெயரைக் கூறுக" என்று மன்னன் சொன்னதும் உடனே மந்திரிக்கு பயம் வந்துவிட்டது. மன்னனே மனம் வெறுக்கும் அளவுக்குப் பேசி விட்டோமோ என்ற பயம் வந்துவிட்டது. உடனே தனது மலரின் பெயரைச் சொல்ல முயன்றார். என்றாலும் அதுதான் சிறந்தது என்பதற்குக் காரணம் கூற வேண்டாமா? எனவே இப்படி ஆரம்பித்தார். "ஆகா பொறுமையின் சிகரமாக விளங்கும் மன்னர் பெருமான் இவ்வளவு நேரம் நான் பேசியதை எல்லாம் பொறுத்துக் கேட்டுக் கொண்டாரே, அப்போதும் அவரது அழகிய திருமுகம் தங்கத் தாமரைபோல்இருந்தது உண்மைதான். ஆனால் அவர் அன்பாக இருக்கிறார். கருணையோடு இருக்கிறார். நம்மைப் பார்த்து அருள் (ஆசி) தருவதுபோல இருக்கிறார் என்று நமக்குக் காட்டுவது எது? அவரது அழகிய புன்னகை தானே, அந்தப் புன்னகைக்கு நிகராக விளங்கும் முல்லைப் பூதான் சிறந்தது" என்று அவர் முடித்துக் கம்பீரமாக அமர்ந்தார். அதை ஆமோதிப்பது போல மன்னன் புன்னகை செய்தது அவருக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதனால் அவருக்குப் பரிசு போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயத்தில் பக்கத்தில் இருக்கிற மந்திரிக்கு வியர்த்துவிட்டது. அடுத்து அவர் முறை. சொல்லி ஆக வேண்டும். என்னதான் இந்த மாதிரி சொன்னாலும் மன்னனின் பற்கள் முல்லை மலர்போல அவ்வளவு சிறியதாகவோ அழகாகவோ இல்லைதான். பெரிதும் சிறிதுமாக ஏறியும் இறங்கியும் இருக்கிற பல்வரிசை மன்னனுடையது. என்றாலும் அப்படியே சொல்ல முடியுமா? அத்தோடு மன்னன் சிரிக்கிறபோது பெட்டைக் கோழி முட்டையிடுகிறபோது கத்துகிற மாதிரி இருக்கும். சில சமயங்களில் விக்கல் எடுப்பதுபோலச் சிரிப்பார். அப்படியான மன்னரின் சிரிப்புக்கு எப்படி முல்லை மலர் பொருந்தும்?
உடனே மந்திரி எழுந்தார். “குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், மன்னர் பெருமானே. முன்னர்க் கூறிய மந்திரியின் மலர் உயர்ந்ததாகக் கொள்ள முடியாது. பொதுவாக முல்லை மலரைப் பெண்களின் பற்களுக்குத்தான் உவமை கூறுவது வழக்கம். அதற்கு மாறாக அதனை மன்னர்பெருமானின் அழகிய பற்களுக்கு நிகரானது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? அப்படியானால் மன்னரின் அழகிய பற்கள் பெண்களது பற்களைப் போன்றது என்றால் ஆண்மைக்கே இலக்கணமாகத் திகழ்கிற நமது மன்னர்மன்னர்...” என்று இழுக்கிறபோதே முல்லை மலரைச் சொன்ன மந்திரிக்குப் பயம் வந்துவிட்டது. “ஆகா மன்னரைப் பெண் என்று கூறிவிட்டதாக நம்மை மாட்டிவிட்டு மரணதண்டனை வாங்கிக் கொடுக்கப்போகிறார் இந்த மந்திரி” என்று புரிந்து கொண்டார். இன்னொரு முறை தலைப்பாகை தடுமாறி விழுந்துவிடாமல்இருக்க அதனைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு எழுந்தார். “மன்னர்பெருமான் மன்னிக்க வேண்டும். நான் முல்லை மலரை உவமையாகக் கூறியது அதன் வெண்மைக்குத்தான். ஆனால் இந்த மந்திரி அவர்களோ...” என்று சொன்னவுடன் மன்னனின் திருமுகத்தில் புன்னகை மறைந்து கடுப்பு ஏறிற்று. “எனது பற்கள் எப்படி இருக்கின்றன என்பதை இன்னொரு விவதாதத்தின் போது வைத்துக் கொள்வோம். இப்போது சிறந்த மலரைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று அதட்டினான். ஆட்டங் கண்டுபோய் முல்லை மலரைச் சொன்ன மந்திரி அமர்ந்து விட்டார். நின்ற மந்திரி தான் சொல்ல வந்த மலர் மன்னனின் சிரிப்புக்கு உவமையாகும் மல்லிகைப் பூ என்று சொல்லி அமர்ந்தார்.

இப்படித் தொடர்ந்த மலர்களின் பட்டியலில் குவளை, சண்பகமலர், வாடாமல்லி, சம்பங்கி, மனோரஞ்சிதம், செவ்வந்தி என எல்லா மலர்களின் பெயர்களும் வந்துவிட்டன. ஆனாலும் மன்னனுக்கு நிறைவு தரும்படியான மலரின் பெயரை யாரும் சரியாகச் சொல்லவில்லை என்பது மன்னனின் முகத்தைப் பார்த்து எல்லாரும் முடிவு செய்துவிட்டனர். அப்படியானால் மன்னன் சிறந்த மலர் என்று நினைப்பது தேவலோகத்தில் உள்ள பாரிசாத மலராக இருக்குமோ? என்றெல்லாம் கற்பனை செய்து இன்னொரு வாய்ப்பை உண்டாக்கிக்கொண்டு எழுந்த மந்திரி சொல்லிப் பார்த்தார். மன்னன் மறுத்துத் தலையசைக்கவே அப்படியே அசையாது உட்கார்ந்து கொண்டார்.
இந்த வாய்ப்பை இதுவரையிலும் பயன்படுத்திக் கொள்ளாது அப்படியே உட்கார்ந்திருந்த அமைச்சர் நலம்விரும்பியின் மீது மன்னனின் பார்வை விழுந்தது. “நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?” என்பது போல ஒரு பார்வை. அதனை மதித்து நலம்விரும்பி எழுந்தார். மன்னனுக்கு வணக்கம் சொன்னார்.
“இத்தனை மந்திரிமார்கள் சொல்லிய மலர்களுக்கு நடுவில் நான் சொல்லும் மலரின் பெயர் எப்படி சிறப்பாக இருக்கும் என்று தயங்குகிறேன்” என்று சொன்னார்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இவர்கள் சொன்னதைக் காட்டிலும் சிறந்த மலரின் பெயரை நீங்கள் சொல்வதாக இருந்தால் நான் ஒருஇலட்சம் பொற்காசுகள் பரிசாகத் தருகிறேன்” என்று அறிவித்து விட்டான் மன்னன்.
அந்த அறிவிப்பைக் கேட்ட ஏனைய மந்திரிகளுக்கெல்லாம் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்றே போயிற்று. அந்தப் பரிசு தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மற்ற மந்திரிகளுக்குக் கிடைக்கக் கூடாதே என்று வருத்தப்பட்டனர். அதிலும் குறிப்பாக இந்த மந்திரிக்குக் கிடைத்துவிட்டால் எப்போதும் மக்கள் நலம் விரும்பும் இந்த மந்திரியால் தங்களது மந்திரி பிழைப்பிற்கு ஆபத்து வேறு வந்துவிடுமே என்று அஞ்சினர். அப்படி என்ன அதிசயமான மலரின் பெயரை இவர் கூறிவிடப் போகிறார்? என்று ஆவலோடும் ஒருவித பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அமைச்சர் நலம்விரும்பி நீங்கள் சொல்லவிரும்பும் மலரின் பெயரைச் சொல்லலாமே” என்று மன்னன் சொல்ல அவர் வாய்திறந்தார். அவையினர் யாவரும் அவரையே உற்றுக் கவனித்தனர்.
நலம்விரும்பி சொன்னார் - “மன்னர் பெருமானே மலர்களிலேயே சிறந்ததாக எளியேன் கருதுவது பருத்தி மலர் தான்”.
சொல்லி முடித்தாரோ இல்லையோ, அவை முழுக்க அடக்க முடியாதபடிக்குப் பொங்கிப் பொங்கிச் சிரித்தது. நிறுத்தமுடியாத அச்சிரிப்பில் தன்னையும் இணைத்துக் கொண்ட மன்னன் திடீரென்று தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு மற்றவர்களையும் சிரிப்பை அடக்க ஆணையிட்டான். பின்னர் அமைச்சர் நலம்விரும்பியிடம் அதற்கான காரணத்தைச் சொல்லச் சொன்னான்.
அமைச்சர் நலம்விரும்பி தனது விளக்கத்தை அமைதியான குரலில் அழுத்தமாகச் சொன்னார். “மன்னர் பெருமானே, மற்றவர்கள் சொன்ன மலர்கள் அனைத்தும் மணத்தால், வண்ணத்தால் அழகு உள்ளவைதாம். சிறந்தவைதாம். ஆனால் அவற்றை எல்லாம்விட மக்களுக்கு உதவுவதில் மக்களை அலங்கரிப்பதில் பருத்தி மலரைவிடச் சிறந்த மலர் வேறு ஒன்றுமில்லை” என்றார்.
அதற்குள் முல்லை மலர் சொன்ன மந்திரி எழுந்து “மற்றவர்கள் எல்லாம் முல்லைப் பூவையும், மல்லிகைப் பூவையும் வைத்துக் கொள்ள இவர் மட்டும் பருத்திப் பூவில் மாலை கட்டிப் போட்டுக்கொள்ளப்போகிறார் போல” என்று கேலி செய்தார். அதனைக் கேட்டு அவையினர் சிரித்தனர். மன்னனுக்குக் கூடச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினான். காரணம் இந்த அமைச்சர் நலம்விரும்பி இந்த மன்னனது தந்தையார் காலத்திலிருந்து இந்த அமைச்சரவையில் இருந்து வருபவர். தந்தைக்கு விருப்பமானவரும் கூட. எனவே, அமைச்சர் நலம்விரும்பியைப் பார்த்து எப்படி என்று விளக்கம் கேட்டான் மன்னன்.
“மன்னர் பெருமானே, நமது மந்திரிமார்கள் சொன்னதுபோல எல்லா மலர்களும் சூடிக்கொள்ளப் பயன்படுவனதான். ஆனால் அவற்றை நாம் சூடிக் கொள்ளாவிட்டால்கூட நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஆனால், நான் சொல்லும் பருத்தி மலரைச் சூடிக் கொள்ளாவிட்டால் நமக்கு அவமானம்தான் மன்னவா?” என்றார்.
இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதுபோல என்பதாக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். மன்னன் மட்டும் அமைச்சர் நலம்விரும்பியின் முகத்தையே புரியாதவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆம் மன்னவா, பருத்தி மலரிலிருந்து விளைந்து வரும் பஞ்சினால் செய்யப் பெற்ற ஆடைதான் நாம் அன்றாடம் உடுத்துகிற ஆடைகள். மற்ற மலர்களெல்லாம் அழகும் மணமும் தான் தருகின்றன. ஆனால் பருத்தி மலர்தான் மானமும் காக்கிறது. எனவே எல்லா மலர்களையும்விட பருத்தி மலர்தான் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது மன்னவா” என்று பணிவாகக் கூறி முடித்தார்.
உடனே படபடவென்று கைதட்டி இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட மன்னன் மகிழ்ச்சியோடு தான் அறிவித்த ஒரு இலட்சம் பொற்காசுகளைக் கொண்டுவரச் சொல்லி அமைச்சர் நலம்விரும்பிக்கு அளிக்க எழுந்தான்.
வேறுவழி இல்லாமல் தங்களது வயிற்று எரிச்சலையும் தோல்வியையும் தாங்கிக் கொண்ட மற்ற மந்திரிமார்கள் கரவொலி எழுப்பினர்.
அடக்கத்தோடு முன்வந்த அமைச்சர் நலம்விரும்பி மன்னரை வணங்கி, “மன்னவா, இந்தப் பரிசுக்கு உரியவன் நான் அல்லன். எனக்கு இந்தப் பரிசு வேண்டாம்” என்றார்.
உடனே மன்னன் உள்ளிட்ட யாவரும் அதிர்ச்சி அடைந்தனர். “அப்படியானால் இந்தப் பரிசு யாருக்கு?” என்று கேட்டான் மன்னன்.
“சந்தேகம் என்ன மன்னவா? இந்தப் பருத்தி மலரை விளைவிக்கும் விவசாயிதான். அவன்தான் இந்தப் பரிசைப் பெறத் தகுதி உடையவன். இந்த நாட்டில் சாமர்த்தியமாகப் பேசுபவர்களுக்குக் கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் செல்வமும் உழைப்பவர்களுக்குப் போய்ச்சேர வேண்டும் மன்னவா?” என்றார் அமைச்சர், நலம்விரும்பி.
“அப்படியானால் இந்த ஒரு இலட்சம் பொற்காசுகளையும் எந்த விவசாயிக்கு வழங்குவது?” என்று கேட்டான் மன்னன்.
“எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்கலாம் மன்னவா” என்றார் அமைச்சர்.
“அப்படியானால் விவசாயிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்து இந்தப் பரிசுக் காசுகளைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லிவிடலாம்” என்றான் மன்னன்.
அதனை மறுத்த அமைச்சர் நலம்விரும்பி, “இல்லை மன்னவா அப்படிக் கொடுத்தால் அந்தப் பொற்காசுகள் இப்போது உள்ள விவசாயிக்கு மட்டும்தான் போய்ச்சேரும். இனிமேல் வரும் விவசாயிகளுக்கும் போய்ச் சேரும்படியாகச் செய்ய வேண்டும் மன்னவா” என்றார்.
புரியாது தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மன்னனைப் பார்த்து நலம்விரும்பி சொன்னார். “ஆம் மன்னவா, இந்தப் பொற்காசுகளைக் கொண்டு ஏரிகளை வெட்ட ஆணையிடுங்கள். அதனால் சேமிக்கப்படும் நீரைக் கொண்டு எப்போதும் விவசாயப் பணி செய்யலாமே. நாட்டு மக்களுக்கு உணவும் உடையும் அளிக்க உதவும் பயிர்களை வளர்க்கும் எல்லா விவசாயிகளுக்கும் இந்தப் பரிசு போய்ச்சேருமே” என்று முடித்தவுடன் மன்னன் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ந்து மந்திரி நலம்விரும்பியைப் பாராட்டினர்.
மக்கள் நலம் விரும்பி இந்தப் பரிசைக் கொண்டு மன்னன் வெட்டிய ஏரிக்கு அந்த அமைச்சரின் பெயரையே சூட்டினர் என்று சொல்லவும் வேண்டுமோ?