நாட்டுக்கொடி
பாடம்
Lesson
அன்புள்ள மாணவர்களே!
நாட்டுக்கொடி அறிமுகம்
நான்தான் இந்திய நாட்டின் நாட்டுக்கொடி! என்னைத் தேசியக் கொடி என்றும் சொல்வார்கள். என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்? நான்தான் இந்தியத் தாய்க்கு உண்மையான ஆடை. என்னைக் காத்தால்தான் இந்தியாவின் மானங்காக்க முடியும். உலகின் மூத்த மக்களின் மூவண்ணக்கொடி நான்தான். நான் எப்படித் தோன்றினேன்? எப்போது தோன்றினேன்? தெரியுமா உங்களுக்கு? சொல்லுகின்றேன் கேளுங்கள்.
ஏ.ஒ.கியூம் என்னும் ஆங்கிலேயர்தான் காங்கிரசு என்னும் பேரியக்கத்தின் தந்தை. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் ஆங்கிலேயரை ஆங்கிலேயரே எதிர்த்து இயக்கம் தொடங்கினார். அவருடன் சான்றோர்கள் பலரும் கூடிப் பேராயக் கட்சிக்காகக் கொடியொன்று கண்டனர். நாட்டு விடுதலை இயக்கத்துக்கு அதுவே தொடக்க வித்தாக அமைந்ததால் அதுதான் எனது தோற்றமாயிற்று.
எனது மூவண்ணங்களும் அவற்றின் பொருளும்
நாட்டுக் கொடியாகிய என் ஆடையில் முதலில் செம்மை, இடையில் வெண்மை, இறுதியில் பசுமை நிறம் என வகுத்தனர். தொடக்கக் காலத்தில் வந்தே மாதரம் என்று மையத்தில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டிருந்தது. அதற்குத் தாயை வணங்குவோம் என்று பொருள்.செம்மை நிறம் - வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கும்.
வெண்மை நிறம் - தூய்மையைக் குறிக்கும்.
பசுமை நிறம் - இந்தியாவின் செழிப்பைக் குறிக்கும்.
கொடியின் பின்னணியில் அருளின் வடிவமான அசோகச் சக்கரத்தை என் நடுவில் பொறித்தனர். அந்தச் சக்கரம் வண்டிக்குச் சக்கரம்போல் மிகமுக்கியமாக மதிக்கப் பெறுகின்றது. . அது அறச்சக்கரம். பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்ற அகிம்சையின் அருள் சக்கரம் அது.
பேராயக் கட்சி அதன் கொடியின் நடுவில் இந்தியத் தந்தை காந்தி அடிகளின் நினைவாக இராட்டையை அமைத்துக் கொண்டது. இதனால் இன்று எனக்கும் அக்கட்சிக் கொடிக்கும் அடையாளம் தெரியாத பலர் உள்ளனர்.
பெருமையும் சிறப்பும்
இந்திய நாடு பல்வேறு இன, மொழி மக்களின் கூட்டமைப்பாகும். ஒரு நாட்டு மக்களின் ஒற்றுமை, இறையாண்மை, மதிப்பு, புகழ், வீரம், விடுதலை, உரிமை, பெருமை ஆகிய அனைத்தும் ஒருங்கமைந்த சின்னம்தான் அந்நாட்டின் நாட்டுக்கொடி ஆகும். இப்பொழுது புரிகின்றதா என் பெருமை!
குடியரசுநாள் விழா, விடுதலைநாள் விழா, அரசு விழாக்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் என்னைக் கொடிக் கம்பத்தில் ஏற்றி வைத்து, எனக்கு வணக்கம் செலுத்துவார்கள். நான் மிக்க மகிழ்ச்சியுடன் பட்டொளி வீசிப் பறப்பேன். கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு விழாக்களில் நாட்டுப்பண் பாடும்போது எல்லோரும் எனக்காக எழுந்து நின்று வணக்கம் செலுத்துவார்கள்.
இந்தியத் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்து ‘நாட்டுப் பண்’ பாடும்போதுகூட எனக்காக எழுந்து நிற்காதவர்கள் இருந்தார்கள். பின்னாளில் திரையரங்குகளில் அப்பழக்கத்தையே கைவிட்டார்கள். இதற்காக நான் வருந்தவில்லை. நான் அரைக்கம்பத்தில் பறந்தால் யாரோ ஒரு நாட்டுத் தலைவர் மறைந்தார் என்ற அறிவிப்பு ஆகும். நான் தரையில் சாய்ந்தால் நீங்கள் தலைகீழ் விழுந்தீர்கள் என்பதே தீர்ப்பு. ஒரு நாட்டின் உயிர் மூச்சாகத் திகழ்வது நாட்டுக்கொடியாகும். எனவே, நிலைமை அறிந்து என்னை மதியுங்கள்! வணங்குங்கள்! நல்மதிப்போடு உலகில் தன்மானம் மிக்கக் குடிமக்களாக வாழுங்கள்!
நன்றி மாணவர்களே!
இதுவரை என் கதையைக் கேட்ட உங்களுக்கு மீண்டும் நன்றி ! நன்றி! நன்றி!