சிலப்பதிகாரம்
பாட அறிமுகம்
Introduction to Lesson

கோவலன் கண்ணகி கதையைச் செய்யுள் வடிவில் சிலப்பதிகாரம் என்ற பெயரில் இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். சிலம்பு என்பது காலில் அணியும் ஒருவகை அணிகலன். கண்ணகியின் கால்சிலம்பின் காரணமாக இக்கதை அமைவதால் இந்நூலுக்குச் சிலப்பதிகாரம் என்று பெயர். பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத் தமிழ்நாடு பேரரசர்களால் ஆளப்பெற்று வந்தது. சிலப்பதிகாரக் காப்பியக் கதை, சோழநாட்டின் தலைநகரான பூம்புகார் என்னும் புகாரில் தொடங்குகிறது. பின்னரப் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் தொடர்கிறது. சேரநாட்டின் தலைநகரான வஞ்சியில் நிறைவடைகின்றது. அதனால், புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று முப்பிரிவுகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது.
இக்காப்பியத்தின் தலைமை மாந்தர்கள் கோவலனும், கண்ணகியும் ஆவர். தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் நகரில் வணிகக் குலத்தில் தோன்றியவன் கோவலன். அதே குலத்தைச் சார்ந்தவள் கண்ணகி. இவர்கள் இருவருக்கும் நடைபெறும் திருமண நிகழ்ச்சியைச் சொல்லும் பகுதிதான் மங்கல வாழ்த்துப்பாடல் என்னும் நமது பாடப்பகுதியாகும்..