3. காப்பிய இலக்கியம்

சிலப்பதிகாரம்

பாடல் கருத்து
Theme of the Poem


கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியில் முரசு முதலிய இசைக்கருவிகள் முழங்கின. முருடு என்னும் மத்தளங்கள் ஒலித்தன. சங்குஒலி எழுப்பப்பெற்றது. அரசனது உலாப் போன்ற வெண்கொற்றக் குடைகள் எழுந்தன. மங்கல நாண் ஆகிய தாலியும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப் பெற்றது.

திருமணப்பந்தலின் அழகிய தோற்றம்

அழகிய திருமண மண்டபம். மாலைகள் பொருந்திய உச்சியுடன் கூடிய அழகிய மண்டபம். நீலப்பட்டினால் அதன் மேற்கூரை (விதானம்) அழகு செய்யப்பெற்றுள்ளது. வயிரமணிகள் பொருத்தப்பெற்ற தூண்கள் அமைத்து அதன்மேலே முத்துகளால் பந்தல் அமைக்கப் பெற்று அழகாகத் திகழ்கின்றது மணமேடை. அந்தப்பந்தலின் கீழ், கண்ணகியும் கோவலனும் மணக்கோலத்துடன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு உரிய நேரம் வானத்துச் சந்திரன் உரோகிணி என்னும் விண்மீனைச் சேரும் நேரம். கற்பில் சிறந்த அருந்ததி என்னும் விண்மீன்போல, விளங்குபவள் கண்ணகி. மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறை நெறிப்படி திருமணச் சடங்குகளை நிறைவேற்ற, கோவலன் கண்ணகியைத் திருமணம் செய்கின்றான். பின்னர் அந்தப் பார்ப்பான் நெறிகாட்ட அதன்படி இருவரும் கைகோத்துக் கொண்டு திருமண வேள்விக்குரிய தீயை வலமாக வருகின்றார்கள். இந்த இனிய காட்சியைக் காண்பவர்களின் கண்கள் செய்த தவம்தான் யாதோ? அவ்வளவு அழகிய காட்சியாக நிகழ்கின்றது.

மங்கலப் பொருள்கள் ஏந்திய மகளிர்

திருமணம் முடிந்தவுடன் மங்கலப் பொருள்கள் ஏந்திய மகளிர் வரிசையாக வரத் தொடங்குகின்றார்கள். மிகவும் அழகிய அப்பெண்கள், நறுமணப்பொருள்களை ஏந்தி வந்தனர். சிலர் மணமிக்க மலர்களைக் கொண்டு வாழ்த்து பாடினர். ஒசிந்த பார்வையுடைய சிலர் மணமக்களை நெருங்கிவந்து வாழ்த்தினர். இளம்பெண்கள் சிலர் சந்தனம் ஏந்தியும், அகில் முதலான நறும் புகையை ஏந்தியும் வந்தனர். சிலர் அழகிய மாலைகளையும், சிலர் சுண்ணப் பொடிகளையும் ஏந்தி வந்தனர். அழகிய புன்னகையுடன் பெண்கள் சிலர் விளக்குகளை ஏந்திக் கொண்டும், அணிகலன்களைச் சுமந்து கொண்டும் வந்தனர். சிலர் ஒன்பது வகையான தானியங்கள் முளை வந்த முளைப்பாலிகையை ஏந்தி வந்தனர். இன்னும் சிலர் பூரணகும்பம் ஏந்தி வந்தனர். அப்போது, மலர் அணிந்த அடர்ந்த கூந்தலை உடைய அழகிய தங்கக் கொடி போன்ற பெண்கள் சிலர், "இம் மணப்பெண், தன் காதலனைப் பிரியாமல் இருப்பாளாக; இம்மணமகனும் இவளைப் பிணைத்த் (கோத்த) தம் கையினை நெகிழ விடாமல் இருப்பானாக. இருவரும் தீமை இல்லாமல் பல்லாண்டு வாழ்க!" என்று சில மலர்களைத் தூவி வாழ்த்தி நின்றனர். பின்னர் அருந்ததிபோன்ற கற்புடைய கண்ணகியை மங்கல அமளியாகிய படுக்கையில் ஏற்றினர்.