சிலப்பதிகாரம்
பாடல்
Poem
முரசுஇயம்பின முருடு அதிர்ந்தன;
முறை எழுந்தன பணிலம் வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன
அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூண்அகத்து
நீலவிதானத்து நித்திலம்பூம் பந்தர்க் கீழ்
வானூர் மதியம் சகடு அணைய வானத்துச்
சாலிஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கண் நோன்புஎன்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇளமுலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர்விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறும் கொடிஅன்னார்
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார்......
- இளங்கோவடிகள்