3. காப்பிய இலக்கியம்

சிலப்பதிகாரம்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இளங்கோவடிகள்

சிலப்பதிகாரம் என்னும் இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார்.

இவர், சேரநாட்டைச் சேர்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்த துறவி ஆவார். இவரது காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

தமிழில் தோன்றிய முதல் காப்பிய நூல் சிலப்பதிகாரம் ஆகும். உரைநடையும், செய்யுளுமாக இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியிருக்கின்றார். தமிழககக் கலைகளாக இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறப்பாடல் ஆகிய அனைத்து வடிவங்களையும் இக்காப்பியத்தில் இவர் அமைத்திருக்கின்றார். இயல், இசை, நாடகம் ஆகிய தமிழின் மூன்று துறைகளையும் இந்நூலில் தந்திருப்பதால் இதற்கு முத்தமிழ்க் காப்பியம் என்று பெயர் மன்னர்களை முதன்மைக் கதாபாத்திரங்கள் (கதைமாந்தர்கள்) ஆக்காமல், குடிமக்களைத் தலைமைக் கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கின்றார்.

சிலப்பதிகாரம் காப்பியத்தின் முதல் பகுதியாகிய மங்கல வாழ்த்துப் பாடலில் இருந்து ஒரு பகுதி இங்கு உங்களுக்குப் பாடமாக வைக்கப்பெற்றுள்ளது.

இப்பகுதி அக்காலத் தமிழர் திருமண முறைகளை அழகாக விளக்குகிறது. கோவலன், கண்ணகி ஆகிய இருவரின் திருமண விழா சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெறுகின்றது. உறவினர்களும், நண்பர்களும் கூடி இருக்கிறார்கள். மணக்கோலத்தில் கோவலனும் கண்ணகியும் இருக்கிறார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சியைத்தான் பின்வரும் பாடல் பகுதியின் மூலம் நீங்கள் காண இருக்கிறீர்கள்!.