காவிரி
பாடம்
Lesson
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பார்கள். ஆற்றங்கரை ஓரத்தில்தான் மனித நாகரிகமே தோன்றியதாக அறிஞர்கள் கூறியதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அத்தகைய சிறந்த நாகரிகம் படைத்த காவிரியாறாகிய நான் சோழநாட்டின் வடிகாலாய் விளங்குகின்றேன். உலகில் மனிதன் முதலாக அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வளிப்பவள் நான். நானில்லாமல் எந்த உயிரும் தோன்றவும் வாழவும் முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் 60,600 இலிட்டர் தண்ணீர் குடிக்கிறான். என் வழியாக அனைத்து உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் நீர் கொடுத்து உயிர் காக்கின்றேன். என் அருமையை எண்ணிப் பாருங்கள்.அதனால்தான் நீர் என்பது உயிர்ப்புத் தன்மையுடையது என்று அறிவியலார் சொல்கிறார்கள்.
பிறப்பு


காவிரியாறாகிய நான் குடகு மலையில் உள்ள தலைக் காவிரியில் பிறந்தவள். நான் மகதாட்டு என்னும் இடத்தில் ஆடு தாண்டும் காவிரியாய் அகலம் குறைந்து, பிறகு படிப்படியாக அகண்ட காவிரியாயச் சீறிப் பாய்கிறேன். என்னைக் கடக்க முயல்வோர் மீளமுடியாத, என் சுழலில் சிக்கிக் கொள்வார்கள். மேட்டுர் அணையில் என்னைச் சேமிப்பார்கள்.
வரவு
என் புதுவரவு கண்டு எத்தனை பேர் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் தெரியுமா!. சோழநாட்டு உழவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தங்கள் வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் என்னைப் பாய்ச்சிப் பயிர்களுக்கு உயிர் கொடுப்பார்கள். தங்கள் தணியாத் தாகத்திற்கும் விடை கொடுப்பார்கள்.
பெருமை


உலகில் மிகப் பெரிய ஆறு ஆப்பிரிக்காவில் பாயும் நைல் ஆறு ஆகும். இந்தியாவின் பெரிய ஆறு கங்கை என்பது தெரியுமா? தமிழக ஆறுகளில், மிகுந்த சிறப்பைப் பெற்றவள் நான். மகாகவி பாரதி கூடத் தமிழகப் பாட்டில் பட்டியலிடும் போது,“காவிரி, தென்பெண்ணை, பாலாறு” என்று என்னை முதலில் அழைத்துப் பெருமைப்படுத்துகிறார். எனக்குப் ‘பொன்னி ஆறு’ என்ற செல்லப் பெயரும் உண்டு.
பெரும்புலவர் சேர இளவரசர் இளங்கோவடிகள் கூட தான் எழுதிய சிலப்பதிகாரத்தில்,
1.
பூவர் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
2.
காமர் மாலை அருகசைய
நடந்தாய்! வாழி, காவேரி!
3.
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம் நின் கணவன்
4.
நாம வேலின் திறங்கண்டே;
அறிந்தேன்; வாழி, காவேரி!
என்று என்னுடைய அரிய சிறப்பினைப் புகழ்ந்து ஏற்றிப் பாடுகிறார். இவ்வாறு இளங்கோவடிகள் மற்றும் புலவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவள் நான் என்பதை எண்ணும்போது பெருமைப்படுகிறேன். சோழ அரசனுக்கு வளவன், நீர்நாடன், புனல்நாடன் ஆகிய இப்பெயர்களெல்லாம் என்னை வைத்தே உண்டாகின.
தடைகள்


பண்டைக் காலம் போல என்னால் மனம்போன போக்கில் போக முடியவில்லை. முன்பெல்லாம் என் கரைகளை உடைத்துச் சீறிப் பாய்ந்து பல கிராமங்களைச் சூழ்ந்து அழிப்பேன். முதன் முதலாக முற்காலச் சோழன் கரிகாலன் என் கால்களைக் கட்டிக் கரைகளைப் பலப்படுத்திக் கண்கள் கட்டப்பட்ட குதிரையைப் போல நேராக ஓடவிட்டான். அது மட்டுமா? கல்லணை கட்டி என்னை முடக்கிப் போட்டான். அவன் ஆணையிட்ட போதுதான், ஆணையிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நிலை என்னைத் திக்குமுக்காடச் செய்தது. சில நேரம் ஒரே இடத்தில் ஓய்ந்து கிடக்க வேண்டியிருக்கிறது தமிழ்மக்களின் நலனுக்காக இந்த இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொள்கிறேன்.
கருநாடக அரசும் என்னைத் தடுத்து என்மீது பல அணைகளைக் கட்டியது. நான் அவர்களுக்கு மட்டும் சொந்தமா? மழைக் காலத்தில் என்னை யாரும் தடுக்க முடியாது. இதற்குக் கால்கோள் இட்டவன் அந்தக் கரிகால் சோழனே ! அதன் பிறகே சோழநாட்டின் உழவர்கள் என்னை மடக்கிக் கால்வாய்களில் பாய்ச்சி, அவர்கள் சொல்லும் இடங்களுக்கெல்லாம் பாய வைக்கிறார்கள்; வளம் பெருக்கிக் கொள்கிறார்கள்.
பழங்காலப் புலவரான, ஒளவைப் பாட்டிக்கு அடியெடுத்துக் கொடுத்தேன். அந்த அன்னைத் தமிழ் ஒளவை ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று வாயாரப் பாராட்டினார். தஞ்சையும், திருச்சியும் திருவாரூம், நாகையும் தழைக்கப் பாடுபட்டுக் கொண்டேயிருக்கிறேன். கல்லணையில் தேங்கி ஓய்வெடுத்துத் தஞ்சையில் நுழைந்து நஞ்சை புஞ்சையுடன் கொஞ்சிக் குலாவி, புகாரில் நுழைந்து ஓயாமல் உழைத்து என் புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்க்கிறேன்.


‘கா’ என்றால் சோலை என்பது பொருள். பூ விரிந்து என் கரைகளில் 'கா' விரிந்து கிடப்பதனால் காவிரியானேன். நெல்மணிகள் என்னும் பொன் கொழிக்கும் என் வண்ணங்கண்டு பொன்னி என்ற பெயரும் அமைந்ததை முன்பே அறிவீர்கள். அல்லவா?
திருச்சியில் நான் சிரித்து மகிழ்வதால் திருவரங்கப் பெருமானைக் கண்டு வணங்குகிறேன். காவிரிப் பெண்ணாகிய என் வெள்ளப் பெருக்கெடுப்பால், மக்கள் அழிந்துவிடக் கூடாது என்பதால், கொள்ளிடத்தில் பாய்ந்து சீற்றம் தணிகின்றேன்.


தஞ்சைத் தரணியில் கொஞ்சி ஓடி விளையாடி, குடந்தைக்கு உடந்தையாகி நெல்லும், பாக்கும், தென்னையும், கரும்பும், வெற்றிலைக் கொடியும், மஞ்சளும், இஞ்சியும் இன்னும், காய்த்தோட்டம், கனித்தோட்டம், பூந்தோட்டமெங்கும் பாய்ந்து செழிக்கச் செய்கிறேன். பிறகு ஓய்வில்லாமல் உழைத்த நான் மயிலாடுதுறைக்கு வரும்போது களைத்து உடல் இளைத்துப் போகிறேன்.
பூம்புகார் என்னும் காவிரிப் பூம்பட்டினத்தில் கடலுடன் கலந்து இயற்கையுடன் இணைந்து இன்பங் காண்கின்றேன்.
பதினெட்டாம் பெருக்கு

காவிரியாகிய என்னை ஆடிப் பதினெட்டாம் நாளில், திருச்சி, தஞ்சை, திருவாரூர், குடந்தை, நாகைத் திருநகரங்களில் வாழ்ந்துவரும் மங்கல மகளிருடன் மற்ற தமிழகப் பெண்களும் இணைந்து பூச்சூடி, எனக்கும் பூச்சூட்டி என்னை வணங்கி மகிழ்வர். திருமணமான பெண்கள் தாலிக்கயிறு பெருக்கிப்போட்டு மகிழ்வார்கள். திருமணமாகாத பெண்களும் என்னை வணங்கி நல்ல துணை அமைய வேண்டி மகிழ்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வேண்டுகோள்
மனிதர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு உயிரினங்களையும் வாழவைத்து, உங்கள் சூழல் தூய்மையை உருவாக்கும் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள், பொறுத்துக் கொள்கிறேன். என் தூய்மையைக் குலைக்காதீர்கள். ஆற்றாது அழுது, உலர்ந்து மாய்ந்து விடுவேன். என் இயற்கைத் தன்மையைக் காப்பதும், அதன்வழி உங்களைக் காத்துக் கொள்வதும் உங்கள் கடமை என்று கூறி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரியாற்றின் பாய்ச்சல் நிலப் பகுதியாகும். வளம் தரும் காவிரியாற்றின் இயற்கை நலம் மாசுறாமல் காப்பதும் உம் கடமை ஆகும். வாழ்க வளமுடன், சூழலியல் தூய்மையைக் காத்து! என்று உங்களைத் தொழுது விடை பெறுகிறேன். வணக்கம்.