குற்றாலம்
பாடம்
Lesson
From : [email protected]
To : [email protected]
cc : [email protected]
Sub : KUTRAALAM
அன்பு நந்தினிக்கு,
நேற்று எனக்கு நீ அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்தேன், படித்தேன். சிங்கப்பூரில் படிக்கும் உனக்குப் பள்ளி விடுமுறை வர இருக்கிறது என்று அறிந்து கொண்டேன். அந்த விடுமுறைக்குத் தமிழ்நாட்டிற்கு வருவதாக நீ எழுதியிருந்தாய். மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கு வருக. தமிழ்நாட்டின் பண்பாட்டை அறிந்து கொள்க. எங்கள் வீட்டில் அனைவரும் உன் வருகையை எதிர்பார்க்கின்றனர். எங்கள் வீட்டிலேயே நீ தங்கிக் கொள்ளலாம். நாங்கள் உன்னை அங்கிருந்து தமிழ்நாட்டின் பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். வருக.


நாம் குற்றாலம் என்ற இடத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நான் இப்போது செய்து இருக்கிறேன். அதன்பின் மதுரை, திருச்சிராப்பள்ளி முதலான பல இடங்களை நாம் சுற்றிப் பார்க்க இருக்கிறோம்.
இந்த மின்னஞ்சலில் குற்றாலம் பற்றிய தகவல்களைத் தருகிறேன். அடுத்த அடுத்த மின்னஞ்சலில் மதுரை, திருச்சிராப்பள்ளி முதலான இடங்களைப் பற்றித் தகவல்களைத் தருகிறேன். குற்றாலம் பற்றி நான் தரும் இத்தகவல்கள் உனக்குக் குற்றாலத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். அதற்காகவே இந்த மின்னஞ்சல் கடிதத்தை உனக்கு நான் எழுதுகிறேன்.
முதலில் குற்றாலம் இருக்கும் இடத்தைப் பற்றி உனக்கு எழுதுகிறேன். குற்றாலம் தமிழ்நாட்டின் தெற்கில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. மதுரையிலிருந்து 160கி.மீ. தொலைவில் உள்ளது. மிகச் சிறிய ஊர்தான். ஆனால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் ஊர். மக்கள் கூட்டம் கூட்டமாகக் குற்றாலத்திற்குக் குளிக்க வருகிறார்கள். குளித்து முடித்து உடல் ஈரம் காயும் முன்னே அடுத்த சுற்றுலா இடம் எது எனத் தேடிப் போய்விடுவார்கள்.
குளிப்பதற்கு ஓர் ஊரா? என்று உனக்கு ஓர் ஐயம் வரலாம். ஆமாம் "குளிப்பதற்கு" ஏற்ற ஊர் குற்றாலம். இந்த ஊரில் பல மலைகள் உண்டு. மலைகளில் இருந்து மொத்தம் ஒன்பது அருவிகள் தண்ணீரைக் கொட்டிய வண்ணமாக இருக்கின்றன. அந்த ஒன்பது அருவிகளில் ஆறு அருவிகளில் மக்கள் குளிக்க முடியும். மற்றவற்றிற்குப் போவது கடினம். நாள் முழுவதும் குற்றாலத்தில் குளித்துக் கொண்டே இருக்கலாம். அதனால்தான்" "குளிப்பதற்கு" ஓர் ஊர் குற்றாலம் என்று நான் எழுதினேன். நீயும் நாள் முழுவதும் குளிக்கும் அனுபவத்தைப் பெற குற்றாலத்திற்கு வருக.
இந்த ஊருக்கு வருவதற்கு நிறையப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துவிட வேண்டும். அதன்பின் மதுரையில் இருந்து பல பேருந்துகள் குற்றாலத்திற்கே செல்கின்றன. தொடர்வண்டிப் போக்குவரத்தும் உள்ளது. சென்னை தென்காசி விரைவு வண்டி ஒன்று உள்ளது. இதில் தென்காசி வந்துவிட்டால் அதன்பின் தென்காசியில் இருந்து பேருந்தில் குற்றாலம் போகலாம். எனவே, குற்றாலத்திற்குப் போய்வர நல்லப் போக்குவரத்து வசதிகள் உள்ளன.
குற்றாலத்தின் இயற்கை அழகு
குற்றாலம் எப்பொழுதும் குளுமையாக இருக்கும் இடமாகும். ஏனெனில் இந்த ஊரில் எப்போதும் சாரல் இருந்து கொண்டே இருக்கும். அதாவது இயற்கை எப்போதும் இங்கு சிறுமழையைத் தூவிக் கொண்டே இருக்கும். அந்தச் சிறுமழையைத்தான் சாரல் என்று அழைக்கிறார்கள். குற்றாலச் சாரல் என்பது இயற்கை இந்த ஊருக்கு அளித்த மிகப் பெரிய கொடை ஆகும். தென்மேற்குப் பருவக்காற்று இங்கு இந்தச் சாரலை சூன் மாதம் முதல் ஒவ்வொரு வருடமும் தந்து கொண்டே இருக்கிறது. இந்த மாதம் முதல் குற்றாலத்தில் சாரல் வீசத் தொடங்கும். மக்கள் இந்தச் சாரலை அனுபவிக்கக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இந்தச் சாரல் சில நேரங்களில் பக்கத்தில் உள்ள தென்காசி வரையும் வீசும்.
இதுதவிர இந்த ஊரில் மலைகள், அருவிகள் எனப் பல இயற்கை வளங்கள் உள்ளன. இவற்றோடு சிறு காட்டுப் பகுதிகளும் அமைந்துள்ளன. இந்தக் காட்டுப் பகுதிகளில் அரிய மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன. இக்காடுகளில் உள்ள மரங்களில் இருந்து அரியவகை பழங்கள், காய்கள் கிடைக்கின்றன. ஒயிட்டு என்ற ஆங்கிலேயர் இம்மலையில் மொத்தத்தில் இரண்டாயிரம் அரியவகை மலர்கள், செடிகள், மரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார். இம்மலையில் இருந்து மலை வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மங்குசுதான், சீதாப்பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்களும், நெல்லிக்காய், தேங்காய், மாங்காய் போன்ற காய்களும், பாக்கு, தேன், கிழங்குகள் முதலிய உணவுப் பொருட்களும், தேக்கு, கோங்கு, சந்தனம் முதலிய விளைபொருட்களும், செண்பகம், மல்லிகை போன்ற மலர்களும் கிடைக்கின்றன.
காட்டுப் பகுதிகளில் உள்ள மூலிகைகள், பழங்கள், காய்கள் இவற்றைச் சுமந்து கொண்டு குற்றால அருவிகள் தண்ணீரைக் கொட்டுகின்றன. இதனால் குற்றால அருவிக் குளியலை மூலிகைக் குளியல் என்று அழைக்கிறார்கள். இந்த மூலிகைக் குளியல் (medicinal bath) உலகில் வேறு எந்த ஊரிலும் இல்லாத புதுமை உடையது.
மேலும் இந்தக் காடுகளில் அரியவகை வன விலங்குகள் வாழ்கின்றன. குரங்குகள், மயில்கள், சிறு கரடிகள் இதுபோன்ற பல இந்தக் காடுகளில் வாழ்ந்து வருகின்றன. ஒரு அழகான இயற்கைச் சிற்றூர் குற்றாலம் என்றால் அது உண்மையைத் தவிர வேறு இல்லை.
அருவிகளின் அழகு
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன என்பதை உனக்கு இந்தக் கடிதத்தில் முன்பே எழுதியிருந்தேன். அவை பின்வருமாறு:



ஐந்தருவி
பழைய குற்றால அருவி
புலி அருவி
புது அருவி
சிற்றருவி
பழத்தோட்ட அருவி
என்பன அவை ஆகும்.
இவற்றுள் பேரருவி, புலி அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, பழத்தோட்ட அருவி, குற்றால அருவி ஆகிய ஏழு அருவிகள் குற்றாலத்தில் உள்ள மலைகளில் இருந்து நிலம் நோக்கி விழும் அருவிகள் ஆகும். இவை காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
பேரருவி என்று அழைக்கப்படும் அருவி மக்கள் அதிகம் விரும்பிக் குளிக்கும் அருவியாகும். இதில் இருந்து விழும் அருவி நீர் வேகமாக நம் மீது பாயும். இதனால் ஒருவகையான புது அனுபவம் நமக்குப் பிறக்கும். நடுத்தலையில் தடார் என மிக வேகமாகப் பாயும் தண்ணீர் நம் உடலையே குலுங்க வைக்கும்; மெய்ச் சிலிர்க்க வைக்கும்.
ஐந்தருவி என்பது ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து தண்ணீரைக் கொட்டக்கூடியது. பழைய குற்றால அருவி மிக உயரத்தில் இருந்து தண்ணீரைக் கொட்டும் இயல்பை உடையது. இதில் குளிக்கும்போது சற்றுக் கவனம் தேவை. அதிக நேரம் தண்ணீரில் நிற்கக் கூடாது. ஏனெனில் மூச்சு அடைப்பு தோன்றலாம். மேலும், இந்த அருவி கற்களையும் மரங்களையும் கூட இழுத்துக் கொண்டு வரும். எனவே பழைய குற்றால அருவியில் குளிக்கும்போது நல்ல கவனம் தேவை.
புலி அருவி மேற்சொன்ன இரண்டு அருவிகளைவிட எளிமையானது. புலி தாவித்தாவி வருவது போல இந்த அருவி கொட்டும். சிறு பள்ளம் அதன் பின் தண்ணீர் விழுவது போன்ற அமைப்பை இந்த அருவி உடையது. பள்ளத்தில் தண்ணீர் வேகமாக விழுந்து மீண்டும் எழும். இதனால் ஏதேனும் ஒரு பள்ளத்தில் நாம் அமர்ந்து கொண்டு குளிக்கலாம். இதில் குளிப்பது ஒரு நல்ல அனுபவம். இதைவிட்டு எழுந்துவரவே மனம் வராது.
மற்ற அருவிகளும் இவை போன்றே குளிக்க ஏற்றவை. பழத்தோட்ட அருவியில் குளிக்க மட்டும் அனுமதி பெற வேண்டும். இந்த அருவியைச் சுற்றிப் பழத்தோட்டங்கள் இருப்பதாலும் தமிழக அரசு வனத்துறை இந்த அருவியை அதன் வளத்தைக் காத்து வருவதாலும் அனுமதி பெற்றபின்தான் இங்குக் குளிக்க இயலும்.
செண்பகடாவி அருவி, தேனருவி ஆகிய இரண்டும் மலையின் மேலே தோன்றி மலையின் மேலேயே விழக்கூடியன. இவற்றை அடைவது மிகக் கடினம். காட்டுப்பகுதி, வழுக்கும் பாறைகள், கொடிய வனவிலங்குகள், மிகுந்த உயரம் இந்தத் தடைகளைக் கடந்து இந்த இரண்டில் குளிக்கலாம். ஆனால் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் இந்த இடங்களில் வந்து குளிப்பது கடினமான செயல்தான்.
செண்பகடாவி அருவி என்பது செண்பக மலர்களை அதிகம் சுமந்து வரும் அருவியாகும். எனவே, அதற்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. தேனருவி என்பதில் வரும் தண்ணீர் தேன் போல சுவையுடையது. எனவே அதற்கு அப்பெயர் வந்தது.
என்ன நந்தினி. நீ எங்கே குளிக்கப் போகிறாய். உனக்குப் புலி அருவி போதுமா? இல்லை பழைய குற்றால அருவி வேண்டுமா? அல்லது தேனருவிக்குப் போவோமா? நீயே சிந்தனை செய்து கொண்டு வா.
குற்றாலத்தின் மற்றச் சிறப்புகள்
குற்றாலத்தில் அருவிகள் சிறப்பு. அதைவிடச் சிறப்பு, அருவிகளின் அணைப்பில் உள்ள குற்றாலநாதர் கோயில். இது சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும். மலையின் மேல் இருந்து பார்த்தால் இந்தக் கோயில் சங்கு வடிவமாகத் தெரியும். இந்தக் கோயிலின் மரம் குறும்பலா மரம். அதாவது குட்டைப் பலா மரம். குட்டையாக உள்ள பலா மரத்தில் பலாப் பழங்களைப் பறிப்பது எளிதுதானே. இந்தக் கோயிலில் சிவபெருமான், அகத்தியர், அன்னை குழல்வாய்மொழி பராசக்தி ஆகியோர் உள்ளனர்.
அகத்திய முனிவர் இந்த மலைக்கு வந்து தமிழ் வளர்த்தார் என்பது நீ அறிந்த புராணச் செய்தி தான். இந்த மலையின் பெயர் பொதிகை மலை. பொதிகைத் தமிழ் என்று தமிழுக்கு ஒரு பெயர் உண்டு. பொதிகைத் தென்றல் என்ற இன்பக் காற்றும் இங்கிருந்தே புறப்படுகிறது.
இங்குள்ள குற்றால நாதர் மீது குற்றாலக் குறவஞ்சி என்ற நூலைத் திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவர் பாடியுள்ளார். இந்நூலில் குற்றால நாதரின் சிறப்பு, குற்றால மலையின் வளம் முதலான அனைத்தும் பாடப்பெற்றுள்ளன.
மேலும் மற்றொரு சிறப்பும் இங்குள்ளது. அது சித்திரசபை ஆகும். இங்குள்ள ஒரு பழைய அழகிய மண்டபத்தில் நடராசர் நடனம் ஆடுவதாகப் படம் வரையபபட்டுள்ளது. இந்தப் படம் தவிர சிவகாமி அம்மன் படம், அறுபத்து மூன்று நாயன்மார்கள் படம், சிவனின் மற்ற திருவிளையாடல்கள் அங்குப் படங்களாக உள்ளன. இந்தப் படங்கள் அரிய வகை மூலிகைகள் கொண்டு வரையப்பட்டுள்ளன. எனவே இவை இயற்கை வண்ண ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் முறையே வெள்ளிசபை, பொன்சபை, தாமிர சபை என்றவாறு ஆடும் நடராசர் இங்குச் சித்திரமாக ஆடுகிறார். இதனை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகின்றது.
குற்றாலம் வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் இது முக்கியமானது. ஆனால் இதனைப் பலர் பார்ப்பதில்லை. இங்குச் செல்ல ஒரு ரூபாய் கட்டணம் உண்டு. நான் முன்னர் போகும் போது ஒரு ரூபாய் வாங்கினார்கள். தற்போது கூடி இருக்கலாம். எவ்வளவு கொடுத்துப் பார்த்தாலும் இந்தக் காட்சிக்குத் தகும்.
இதன்பின் இங்குத் தங்குவதற்கு அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் பல உண்டு. உணவிற்கு ஓரளவிற்கு நல்ல உணவகங்கள் உள்ளன. இவற்றில் தங்கி அருவிகளில் குளித்து இயற்கை வாழ்வை நாம் வாழ முடியும். வருக குற்றாலத்திற்கு இயற்கையைச் சுவைக்க.
உன் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் அன்பைக் கூறுக. அடுத்த மடலில் மதுரை, திருச்சிராப்பள்ளி முதலான இடங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கிறேன். இந்த மடலைப் படித்துப் பதில் எழுதுக. குற்றாலம் பார்க்க விரைவில் வருக!
நன்றி.
அன்புடன்
தமிழண்ணன்.