செந்தமிழ்
பாடம்
Lesson
தமிழ்மொழி இனிமையான மொழி. ‘தமிழ்’ என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். தமிழ் மொழி - இலக்கிய அளவிலும் இனிமை கொண்டது; மொழி அளவிலும் இனிமை கொண்டது.
தமிழ் மொழியை அதன் இனிமை, பெருமை, உயர்வு கருதி மொழி அறிஞர்கள் உயர்தனிச் செம்மொழி எனப் பாராட்டுவர்.
உலக மொழிகளில் உயர்வானது தமிழ் மொழி. அதில் உள்ள இலக்கிய இலக்கணங்களின் எண்ணிக்கை அதிகம். தமிழில் உள்ள திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாசகம் முதலான இலக்கியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை போன்று உலக மக்களின் உயர்வுக்கு வழி கூறும் பல இலக்கியங்கள் தமிழில் உண்டு.

தமிழ் மொழியின் உயர்விற்கு அதன் பழமையும் ஒரு காரணம். தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. அதன் பழமைக்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றில் இரண்டைக் காண்போம்
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு. அவை 1. வால்மீகி தந்த இராமாயணம் 2. வியாசர் தந்த பாரதம். இவை சமற்கிருதத்தில் (வடமொழியில்) எழுதப்பட்டு உள்ளன. இவற்றில் தமிழ்நாடு, தமிழ்மொழி பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
வால்மீகி இராமாயணத்தில் தமிழ்மொழி பற்றிய குறிப்பு உள்ளது. அது பின்வருமாறு.
இராமனின் மனைவி சீதை. இவளை இராவணன் தன் இலங்கை நாட்டிற்குத் தூக்கிச் சென்று விட்டான். இராமன் சீதையைத் தேடிச்சென்றான்.
குரங்கு வீரர்கள் சீதையைத் தேட இராமனுக்கு உதவி செய்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர்; பல இடங்களில் தேடினர்.
சில குரங்கு வீரர்கள் இலங்கை நாட்டிற்குத் தேடச் சென்றனர். அவர்களுக்கு இலங்கைக்குப் போக வழி தெரியவில்லை. அவர்களுக்கு வால்மீகி வழி கூறினார்.
"குரங்கு வீரர்களே!
இலங்கைக்குப் போகும் குரங்கு வீரர்களே!

நீங்கள் இலங்கைக்குப் போகும் வழியில் ஒரு நாட்டைப் பார்ப்பீர்கள்! அந்த நாட்டின் பெயர் பாண்டிய நாடு ஆகும். அந்த நாட்டின் மன்னன் பாண்டியன்.
அங்குப் பெரிய கோட்டை இருக்கும். அந்தக் கோட்டைக்குப் பெரிய வாயில் இருக்கும். அந்த வாயிலில் பெரிய கதவுகள் இருக்கும். அக்கதவுகள் தங்கத்தால் அமைந்து இருக்கும்.
கதவுகளில் முத்துகள், மணிகள் போன்றனவும் இருக்கும். அவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அந்த நாட்டில் இனிமையான மொழி பேசப்படும்"
என்று அவர் வழி சொன்னார்.
வியாசர் என்ற முனிவர் எழுதியது மகாபாரதம் எனும் இதிகாசம் ஆகும். அதில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழ் நாட்டு வரலாற்றைக் கூறுகிறது. அர்ச்சுனன் இந்திய நாட்டைச் சுற்றி வருகிறான்; அப்போது அவன் பாண்டிய நாட்டிற்கும் வருகிறான். அங்கு உள்ள குளங்களில் நீராடுகிறான். கோயில்களில் வணங்குகிறான். இந்த இடத்தில் வியாசர் தமிழ்நாட்டைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார்.

பிற மொழி நூல்களான வால்மீகி இராமாயணத்திலும், வியாச பாரதத்திலும் உள்ள இக்குறிப்புகள் தமிழ் மொழியின் பழமையை எடுத்துக் காட்டுவன.
தமிழ்மொழியின் பழமையை அறிவியல் வழியிலும் காண முடியும். புவியைப் பற்றிய அறிவியல் புவியியல் (Geography) எனப்படும். இந்த அறிவியல் படி தமிழ்மொழி பழமை வாய்ந்தது என்று காட்ட முடியும்.
"மிக மிகப் பழமையான காலத்தில் குமரிக் கண்டம் என்ற ஒரு நாடு இருந்தது. அதற்கு லெமூரியாக் கண்டம் என்ற பெயரும் உண்டு. அது இந்திய நாட்டின் தெற்கே இருந்தது. அந்நாடு கடலால் அழிந்தது. நாடு அழிந்து விட்டதால் அந்நாட்டில் இருந்த மக்கள் பல இடங்களுக்குச் சென்றனர். அந்நாட்டு மக்கள் பேசிய மொழி தமிழ் மொழி" என்பது புவியியல் அறிஞர்கள் கருத்து.
இவ்வாறு அறிவியல் அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் தமிழ்மொழி பழமையானது என்பது உண்மை ஆகிறது.
தமிழ்மொழிக்குத் தனியான பல சிறப்புகளும் உண்டு. அம்மொழியில் சில சிறப்பு எழுத்துகள் உள்ளன. அவை தமிழ்மொழிக்கு மட்டுமே உரிய எழுத்துகள் ஆகும். வேறு மொழிகளில் இந்தச் சிறப்பு எழுத்துகளின் ஒலிகள் கூட இல்லை.
ழ, ற, ன ஆகியன தமிழ்மொழிக்கே உள்ள சிறப்பு எழுத்துகள் ஆகும்.
தமிழ்மொழி தனித்த மொழி என்பது அதன் மற்றொரு சிறப்பு. தமிழ்மொழி வாழ, வளர வேறுமொழிகளின் உதவி தேவை இல்லை. ஆனால் தமிழ் பலமொழிகள் வாழ, வளர உதவி வருகின்றது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியன தமிழின் உதவியால் வாழும் வளரும் மொழிகள். எனவே, தமிழ் தனிமொழி என்ற சிறப்பைப் பெறுகிறது.

மொழி அறிஞர்களால் உலகில் உள்ள செம்மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்று காட்டப் படுகிறது. தமிழ்மொழி, செம்மொழி என்பதும் அதன் உயர்விற்கு மற்றொரு காரணம் ஆகும்.
உலக மொழிகளில் சில மொழிகள் மட்டுமே செம்மொழிகள் ஆகும். தமிழ், கிரேக்கம், சமற்கிருதம், இலத்தீன், சீனம், அரபி ஆகிய மொழிகள் மட்டுமே செம்மொழிகள்.
திருத்தமான மொழியே செம்மொழி எனப்படும்.
தெளிவான எழுத்து வடிவம், எழுத்து வடிவத்துக்கு ஏற்ற ஒலிப்பு முறை, எழுத்து வடிவத்திற்கும், ஒலிப்பு முறைக்கும் ஏற்ற பொருள்முடிவு பெற்ற மொழியே திருத்தமான மொழி எனப்படும்.
தமிழ்மொழிக்குத் தெளிவான எழுத்துவடிவம், ஒலிப்புமுறை, பொருள் முடிவு ஆகியன அமையப் பெற்றுள்ளன. இதனால் தமிழ்மொழி செம்மொழி எனப்படுகிறது.
உலகம் வளர்ந்து வருகிறது. உலகில் உள்ள மக்களும் வளர்ந்து வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு மொழியும் வளர வேண்டும். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் மொழியே செம்மொழி எனப்படும்.

தமிழ்மொழி உலக வளர்ச்சிக்கு ஏற்ப, உலக மக்கள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வருகிறது. அம்மொழியில் புதிய புதிய சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், இலக்கணங்கள், நூல்கள் ஆகியன வளர்ந்து வருகின்றன.
எனவே தமிழ்மொழி வளர்ந்து வரும் செம்மொழியாகவும், வாழ்ந்துவரும் செம்மொழியாகவும் அமைந்து சிறப்புத் தருகிறது. மேலும், தமிழ்மொழி பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது. எனவே அதனைச் செந்தமிழ் என்று பழங்காலத்தில் புலவர்கள் அழைத்தனர்.