நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

பாடம்
Lesson


 

ஓர் ஊரில் ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் நஞ்சு உண்ட நாயக மூர்த்தி.

வீட்டில் யாருக்கும் இந்தப் பெயர் பிடிக்கவில்லை. இருந்தாலும் தாத்தா "நஞ்சு உண்ட நாயக மூர்த்தி" என்னும் இந்தப் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று சொன்னார்.

தாத்தாவிடம் அம்மா சொன்னாள்; "இந்தப் பெயர் நீளமாக இருக்கிறதே! இது வேகமான காலம். இரண்டு எழுத்துகள் அல்லது மூன்று எழுத்துகளில் பெயர் வைத்தால் நன்றாக இருக்குமே!"

அதற்குத் தாத்தா "அதெல்லாம் முடியாது! இவனுக்கு நஞ்சு உண்ட நாயக மூர்த்தி என்ற பெயர்தான் வைக்கவேண்டும்!" என்று கூறினார்.

"இல்லை.. இல்லை..... கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்... 'அரிச்சந்திரன்' என்ற பெயரை "அச், அச்" என்று கூப்பிடுகிறார்கள். 'தொல்காப்பியன்' என்ற பெயரையோ "தொல்ஸ்" என்கிறார்கள். 'ஆவுடையப்பன்' என்று பெயர் வைத்தால் 'ஆவ்', 'ஆவ்' என்று கூப்பிடுகிறார்கள். இப்படி... இருக்கும்போது.... நஞ்சு உண்ட நாயக மூர்த்தி என்று நான்கு கிலோமீட்டர் நீளத்திற்குப் பெயர் வைத்தால் எப்படிக் கூப்பிடுவார்கள்? நஞ்சு உண்ட நாயக மூர்த்தியை நஞ்சுண்டு, நஞ்சுண்டு என்று கூப்பிடமாட்டார்களா? அது கடைசியில் 'நஞ்சு', 'நஞ்சு' என்று நஞ்சி போய்விடாதா? என் செல்ல மகனை நஞ்சு என்று எல்லாரும் கூப்பிட விடலாமா?" என்று கேட்டார் அப்பா!

"ம்.... நீ இந்தப் பெயரை வைக்காவிட்டால் நான் வீட்டை விட்டுப் போய் விடுவேன்" என்று வீட்டை விட்டு வெளியே எழுந்து நடந்தார் தாத்தா!

அப்பா பயந்து போனார். "வேண்டாம் வேண்டாம். இதற்காக நீங்கள் வீட்டை விட்டுப் போக வேண்டாம். இதோ இப்போது இந்தப் பையனுக்குப் பெயர் வைக்கிறோம். "நஞ்சு உண்ட நாயகமூர்த்தி, நஞ்சு உண்ட நாயக மூர்த்தி" என்று அந்தப் பையன் காதில் மூன்று முறை கூறினார் அப்பா!

எல்லாரும் "நஞ்சு உண்ட நாயக மூர்த்தி வாழ்க! வாழ்க!" என்று வாழ்த்துகள் கூறினர்.

இவ்வாறு நஞ்சு உண்ட நாயக மூர்த்தி பிறந்தான். வளர்ந்தான். உண்டான். எப்போதும் உண்டான் எதையாவது அவன் உண்டு கொண்டே இருந்தான். உண்டதால் குண்டு, குண்டு என்று வளர்ந்தான். அதனால் அவன் பெயர் நஞ்சு குண்டு நாயக மூர்த்தி எனவே மாறிவிட்டது.

அவன் அம்மாவும் அவனுக்கு ஏதாவது ஓர் உணவு செய்து கொடுத்துக் கொண்டே இருந்தாள். அம்மா ஆசை ஆசையாய்ச் செய்து கொடுத்தாள். நஞ்சு உண்ட நாயகமூர்த்தி ஆசை ஆசையாய் எல்லாவற்றையும் சாப்பிட்டான். அவனது வயிற்றுக்கு ஓய்வே இல்லை. அது மட்டும் வேலை செய்து கொண்டே இருந்தது.

பையன் இப்படி நாள் ஒரு தீனியும், பொழுது ஒரு பலகாரமும் சாப்பிட்டு வளர்வது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. இவன் அதிகமாகச் சாப்பிடாமல் இருக்க என்ன செய்யலாம் எனச் சிந்தனை செய்தார். நல்ல மருத்துவரிடம் நஞ்சு உண்ட நாயக மூர்த்தியைக் காட்டலாம் என முடிவு செய்தார். நல்ல மருத்துவர் ஒருவர் வீட்டுக்கு நஞ்சு உண்ட நாயக மூர்த்தியை அழைத்துச் சென்றார்.

அவர் நல்ல மருத்துவர். ஊசி போட மாட்டார். மாத்திரை தர மாட்டார். தேன் தருவார். அதில் கலந்து சாப்பிட மருந்து தருவார். அதனால் அவர் நல்ல மருத்துவர்.

மருத்துவர் வீட்டுக்குள் போனதும் நஞ்சு உண்ட நாயக மூர்த்தியால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. பசித்தது. அவன் வயிறு "சாப்பிட ஏதாவது தா" என்றது. மருத்துவரும் அப்பாவும் பார்க்காத நேரம். மெல்ல 'நஞ்சு' எழுந்தான்.

ஓர் அறைக்குள் போனான். அந்த அறையில் மண்பானைகள், கண்ணாடிப் பாத்திரங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் எதுஎதுவோ இருந்தன. உருண்டையாய், சதுரமாய், கட்டியாய், பொடியாய், பலப் பல நிறங்களில் எதுஎதுவோ இருந்தன. வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மண்பானை அடுக்கை நஞ்சு தொட்டான். அதில் நடுப்பானையைப் பிடித்தான். இழுத்தான்.

அப்படியே பானை அடுக்கு அவன் மேல் விழுந்தது. 'டமால்' என்று சத்தம் கேட்டது. தலையில் ஒரு பானை ஓடு, கையில் ஒரு பானை ஓடு; தலை ஒரு நிறம், கை ஒரு நிறம், கால் ஒரு நிறம், உடம்பு ஒரு நிறம். நஞ்சு நிறம் நிறமாய் இருந்தான்.

ஒரு பானையில் இருந்த நெய் தரையில் கொட்டியது. நஞ்சு மெதுவாக நடந்து நெய்யின்மீது கால் வைத்தான். அது வழுக்கி விட்டது. அவன் "ஐயோ! ஐயோ! அம்மா! அப்பா!" என்று கத்திக் கொண்டே விழுந்தான்.

அவன் தரையில் கை வைத்து எழ முயன்றான். கை வழுக்கி மீண்டும் விழுந்தான்.காலை வைத்தான்.கால் வழுக்கியது. மீண்டும் விழுந்தான். படுத்தபடியே புரண்டு, புரண்டு வந்தான். அவன் உருண்டு புரண்டு வருவது கோயிலில் வேண்டிக்கொண்டு உருண்டு வருவது போல இருந்தது.

மருத்துவர் வீட்டில் இருந்த எல்லா மருந்தையும் கொட்டி விட்டான் நஞ்சு. இதனால் நல்ல மருத்துவருக்குக் கோபம் வந்தது. அவர் கெட்ட மருத்துவர் ஆனார். பெரிய கம்பு எடுத்து அடிக்க வந்தார். நஞ்சுவும், அப்பாவும் மருத்துவர் வீட்டை விட்டு ஓடி வந்தனர்.

நஞ்சு அப்போது அஞ்சாவது (ஐந்தாம் வகுப்பு) படித்தான்.பள்ளிக்கூடத்தில் ஒருநாள் ஆசிரியர் தேர்வு வைத்தார்.அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற எழுத்துகளில் தொடங்கும் சொற்களை எழுத வேண்டும். இதுதான் தேர்வு. எல்லா மாணவர்களும் தேர்வு எழுதினார்கள்.

ஒருவன் அ - அன்பு, ஆ - ஆற்றல், இ - இன்பம் என எழுதினான். இன்னொரு மாணவன் அ - அறிவு, ஆ - ஆசை, இ - இடி என எழுதினான். ஆனால் நம் 'நஞ்சுவோ'

அ - அதிரசம்

ஆ - ஆப்பம்

இ - இடியாப்பம்

என்று எழுத ஆரம்பித்தான். இவை எல்லாமே சுவையான தின்பண்டங்கள். நஞ்சுவுக்கு எப்போதும் சாப்பாடு! சாப்பாடு! சாப்பாடு பற்றிய எண்ணம்தான்.

எல்லா மாணவர்களும் தேர்வு எழுதி முடித்தார்கள். நஞ்சுவும் பாதிக்குப் பாதி தேர்வு எழுதினான். ஏனென்றால் 'நஞ்சுவுக்கு' ஈ, உ, ஏ, ஒ, ஓ, ஒள இந்த எழுத்துகளில் ஆரம்பிக்கும் உணவுப் பொருள்கள் தெரியவில்லை.

ஆசிரியர் தேர்வுத் தாள்களைப் பார்த்தார். நஞ்சுவின் தேர்வுத்தாள் வந்தது. நஞ்சு எழுதியதை ஆசிரியர் பார்த்தார்; படித்தார். விழுந்து விழுந்து சிரித்தார்.

இந்தத் தேர்வுத் தாளை எடுத்துக் கொண்டு ஆசிரியர் நஞ்சுவின் வீட்டுக்கு வந்தார். அப்பா, அம்மாவிடம் சொன்னார். அம்மா அழுதாள். அப்பா கம்பு எடுத்தார். நஞ்சுவைத் தேடினார். நஞ்சு பயந்து ஓடினான்.

'நஞ்சு' பழைய பொருட்கள் வைக்கும் அறைக்குள் ஓடினான். அவன் பைக்குள் நிரப்பியிருந்த மிட்டாய்களில் இரண்டு கீழே விழுந்தன. வேறு நேரமாய் இருந்தால் அவற்றைத் தேடி எடுத்துத் தின்றிருப்பான். இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. அந்த அறையில் பழைய பெரிய துணிப்பை ஒன்று இருந்தது. அதை 'நஞ்சு' எடுத்தான். அதனை எடுத்து உடம்பில் போட்டு மறைத்துக் கொண்டான். அறையில் ஓர் ஓரமாக உட்கார்ந்தான்.

நேரம் ஆனது. இரவு வந்தது. அப்படியே 'நஞ்சு' தூங்கிப் போனான். நடுஇரவு வந்தது. இரண்டு திருடர்கள் 'நஞ்சு'வின் வீட்டிற்கு வந்தார்கள்.

அவர்கள் பழைய பொருட்கள் வைக்கும் அறைக்குச் சென்றார்கள். காலில் தட்டுப்பட்ட இரு மிட்டாய்களையும் ஒருவன் எடுத்தான். ஆளுக்கு ஒன்றாக தின்றார்கள். இருட்டில் அறையில் இருந்த பொருட்களைத் தொட்டார்கள். பொருட்கள் உருண்டு விழுந்தன. சத்தம் கேட்டது. "நஞ்சு"வின் தூக்கம் போனது. ‘நஞ்சு’ கண்களைத் திறந்தான். ஒரே இருட்டு. எங்கும் இருட்டாக இருந்தது. யாரோ இரண்டு பேர் நிற்பது மங்கலாகத் தெரிந்தது. நஞ்சுவுக்குப் பயம் வந்துவிட்டது. உடல் நடுங்கியது. என்ன செய்வது எனத் தெரியாமல் நஞ்சு பையோடு உருண்டான். மெல்ல வெளியே எட்டிப் பார்த்தான். ஏதோ ஒரு பொருள் உருண்டு வருவதைத் திருடர்கள் பார்த்தார்கள். "ஐயோ" "ஐயோ" "பேய்" "பேய்" "பூதம்" "பூதம்" என்று பயந்து கத்தினார்கள். கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடினார்கள்.

இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்தார்கள். "நஞ்சு" "நஞ்சு" என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள். விளக்குகள் எரிந்தன.

"நஞ்சு" "நஞ்சு" என்னும் சத்தம் கேட்டதும் திருடர்கள் மேலும் பயந்தார்கள். நஞ்சு என்றால் விஷம். “ஓ - நாம் தின்ற மிட்டாய் விஷம். ஐயோ” என்று மேலும் பயந்து அலறினார்கள். ஓடினார்கள்.

திருடர்களை அப்பாவும் தாத்தாவும் பிடித்துக் கொண்டார்கள்.

நஞ்சு வேக வேகமாகப் பையோடு உருண்டு உருண்டு வீடு முழுவதும் வந்தான். தலையை நீட்டிப் பார்த்தான்.

அம்மாவும் அப்பாவும் "ஆ!, நஞ்சு கிடைத்து விட்டான்”, திருடர்களைப் பிடித்து விட்டான் எனச் சொன்னார்கள். நஞ்சு பையிலிருந்து வெளியே வந்தான்.

"நஞ்சு" - "வாழ்க!"

"திருடர்களைப் பிடித்த நஞ்சு." "வாழ்க" என எல்லாரும் கூறினர். நஞ்சு எதுவும் நடக்காதது போலச் சட்டைப் பையில் இருந்த ஒரு மிட்டாயை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.