காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பாடம்
Lesson


அன்புத் தம்பிக்கு,

வாழ்த்துகள்! தம்பி நீ நலமா! நான் இங்கு நலம். அண்ணி, குழந்தை அனைவரும் நலம். நீ எங்களை விட்டுப் படிக்கச் சென்று மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்னும் ஓர் ஆண்டில் உன் படிப்பு முடிந்து விடும். உனக்கு வேலை கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்கும். நல்ல எதிர்காலம் உனக்கு உண்டு! நன்றாகப் படி.

புதுதில்லியில் நீ இருக்கும் பகுதி எவ்வாறு உள்ளது? குளிர் அதிகமா? உடல் நலத்தைப் பார்த்துக் கொள்.

நாங்கள் இந்த விடுமுறையில் காஞ்சிபுரம் சென்று இருந்தோம். மூன்று நாட்கள் அங்கு ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பார்த்தோம்.

சென்ற விடுமுறையில் மாமல்லபுரம் சென்று இருந்தோம். அது குறித்து உனக்குக் கடிதம் எழுதினேன். அதுபோல் இப்பொழுது காஞ்சிபுரம் பற்றி உனக்கு எழுதப் போகின்றேன்.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் ஏறக் குறைய எழுபத்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்தில் சென்றால் மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம். நாங்கள் பேருந்தில்தான் சென்றோம்.

சென்னையில் காலை ஆறு மணிக்கு நாங்கள் கிளம்பினோம். காலை ஒன்பது மணிக்குக் காஞ்சிபுரம் வந்தோம். நண்பர் வீட்டில் காலையில் சாப்பிட்டோம்.

அதன்பின் ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அப்பப்பா! எங்குத் திரும்பினாலும் கோயில்கள்! பட்டுச் சேலைக் கடைகள்! கைகளைத் தலைமேல் வைத்து வணங்கிக் கொண்டே ஊர் முழுவதும் செல்லலாம். அவ்வளவு கோயில்கள். இதனால் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து, காஞ்சிபுரம் முழுவதும் பட்டுத் துணிக் கடைகள். பட்டுச் சேலைகள் தமிழ்நாட்டின் பழமையான மரபுக்கு எடுத்துக்காட்டுகள். நல்ல நிறங்கள். அழகான வேலைப்பாடுகள். இந்த நகரில் பரம்பரை பரம்பரையாக நெய்யப்படும் பட்டுச் சேலைகளுக்கு ஈடு இணையே இல்லை. நானும் உன் அண்ணிக்கு ஒரு நல்ல பட்டுச் சேலை வாங்கித் தந்தேன்.

 

கைலாச நாதர் கோயில்

முதலில் நாங்கள் சென்ற இடம் கைலாசநாதர் கோயில். அழகான இடம். கோயிலின் நடுவில் சிவலிங்க வடிவத்தில் கைலாசநாதர் இருக்கிறார். கைலாசநாதர் கோயில் சுவர்களில் அழகான உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் சிறு சிறு கோயில்களை இணைத்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிச் சிறு சிறு கோயில் மாடங்கள் சேர்த்து வெளிச்சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

 

யாளி

கோயிலின் வெளிப்பகுதி முழுவதும் கல்லால் செய்யப்பட்ட 'யாளி' என்ற விலங்குகளின் சிற்ப வரிசை காணப்படுகிறது. கோயிலின் முன் புறத்தில் சிங்கங்கள் தலையில் உள்ள தூண்கள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. கோயிலின் உள்ளே காளி, சிவன் முதலியவர்களின் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலைக் காணும் போது நாம் ஏதோ ஒரு கலைக்கூடத்திற்கு வந்தது போல இருந்தது. நம்மைச் சுற்றிலும் கல்லால் ஆன சிற்பங்கள். ஆகா! கைலாசநாதர் கோயில் அழகைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இந்தக் கோயிலை இராச சிம்மன் என்ற மன்னன் கட்டினான்.

முற்பகல் முழுவதும் நாங்கள் கைலாசநாதர் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். சில புகைப்படங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள். இந்த இடத்திற்குச் சைவக் காஞ்சி என்று பெயர்.

மாலை நான்கு மணிக்குத் திருப்பருத்திக் குன்றம் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு சமண சமயக் கோயில்கள் உள்ளன. ஒரு கோயிலை எங்களால் பார்க்க முடிந்தது. அது மிகப் பெரிய கோயில். எதிர் வீட்டில் இருந்த பாட்டி ஒருவர் கோயில் கதவுகளைத் திறந்து விட்டார். உள்ளே சென்றோம். அங்கு ஒரு பெரிய மண்டபம் இருந்தது. அதன் மேல்பகுதியில் அழகான பழமையான ஓவியங்கள் இருந்தன. அந்தப் படங்களில் மகாவீரரின் வாழ்க்கை வரலாறு வரையப்பட்டு இருந்தது. மகாவீரரின் முழுமையான வாழ்க்கையை நாம் இந்தப் படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கோயிலின் உள்ளே இரண்டு அறைகள் உள்ளன. அவற்றில் இரண்டு சமண முனிவர்கள் (தீர்த்தங்கரர்) இருந்தனர். வழுவழுப்பான உருவம். சமண முனிவர்கள் கண்களை உருட்டிப் பார்க்கும் காட்சி நேரில் நம்மைப் பார்ப்பதைப் போலவே உள்ளது. அதன் பிறகு அந்தக் கோயிலைச் சுற்றி வந்தோம். அந்தப் பகுதிக்குச் சமணக் காஞ்சி என்று பெயர். அங்கிருந்து இரவு நண்பர் வீட்டுக்கு வந்தோம்.

 

வரதராசப் பெருமாள் கோயில்

அடுத்த நாள் காலை நாங்கள் வரதராசப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். மிகப் பெரிய கோயில். கோயிலின் உள்ளே நுழைந்து மெல்லப் படிகள் ஏறினோம். கோயிலின் மேல் மாடியில் நிற்கும் நிலையில் வரதராசப் பெருமாள் காட்சி தந்தார். அவரை வணங்கினோம். அடுத்து நூறு கால்கள் (தூண்கள்) உள்ள கல்மண்டபத்திற்குச் சென்றோம். அங்கே கல்லில் சங்கிலிகள் செய்து தொங்கவிடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தூணிலும் மிக அழகான சிற்பங்கள் இருந்தன. அப்பப்பா காஞ்சிபுரம் கலைகளுக்கு எல்லாம் சிறப்புடைய ஊர்! இந்த இடத்திற்கு வைணவக் காஞ்சி என்று பெயர்.

 

காமாட்சி அம்மன் கோயில்

அன்று மாலை காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். கையில் கரும்புடன் காமாட்சி அம்மன் காட்சி தந்தாள்.

 

குமரக்கோட்டம் முருகன் கோயில்

அடுத்த நாள் காலை குமரக்கோட்டம் என்ற முருகன் கோயிலுக்குச் சென்றோம். நின்ற நிலையில் முருகர் காட்சி தந்தார். இவருக்குப் பக்கத்தில் வள்ளி தெய்வயானை கோயில்கள் இருந்தன. இன்னும் பல இடங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. எங்களால் இவற்றைத்தாம் பார்க்க முடிந்தது.

வைகுண்டப் பெருமாள் கோயில், கச்சபேசுவரர் கோயில் முதலானவைகளை அடுத்த முறை செல்லும்போது பார்க்க வேண்டும்.

மாலை நாங்கள் சென்னைக்குத் திரும்பினோம். தமிழ்நாட்டில்தான் பார்க்க எவ்வளவு இடங்கள் உள்ளன! ஒவ்வொன்றையும் பார்க்கும் போது தமிழரின் சிறப்பான வரலாறும் மரபும் நமக்குத் தெரிய வருகின்றன.

நீ புதுதில்லியில் இருந்து வந்ததும் பார்க்க உனக்கு நல்ல இடம் காஞ்சிபுரம். வருக.

பதில் எழுதுக.

உன் வரவை எதிர்பார்க்கும்

தமிழண்ணன்