நோபல் பரிசு பெற்ற தமிழர்

நோபல் பரிசு பெற்ற தமிழர்

பாடம்
Lesson


அது கடல்.

மத்திய தரைக்கடல்.

கடலின் மேல் பகுதி நீல நிறமாக இருந்தது.

வானமும் நீல நிறமாக இருந்தது.

 

அந்தக் கடலில்

ஒரு பெரிய கப்பல் சென்று கொண்டிருந்தது.

கப்பலை அலைகள் தொட்டுப் பார்த்துச் சென்றன.

 

கப்பல் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தது.

 

கப்பலின் மேல் பகுதியில் ஒரு மனிதர்.

அவர் கடலைப் பார்த்தார்.

அவர் வானத்தைப் பார்த்தார்.

 

"கடல் ஏன் நீல நிறமாகத் தெரிய வேண்டும்?" என்ற கேள்வி அவர் மனத்தில் வந்தது.

வானத்தில் நீல நிறம் உள்ளது. அது கடலில் படுவதால் நீல நிறமாகத் தெரிகிறதோ?

சரி பகலில் வானத்தின் நீல நிறம் கடலில் தெரிகிறது. சூரிய ஒளி இல்லாத

நேரங்களில்-

அதிகாலை, மாலை நேரங்களில்.....

அப்போதும் கடல் நீல நிறமாகவே தெரிகிறதே..... அது ஏன்?

அது மட்டும் இல்லாமல் வானம் சில நேரங்களில் மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. சிவப்பு நிறமாகத் தெரிகிறது. அப்போதும் கடல் நீல நிறமாகவே தெரிகிறதே ஏன்?

 

அவரின் கேள்வி மேலும் மேலும் வளர்ந்தது.

பெரிய அலைகள் வருகின்றன.

அவை வெள்ளை நிறமாக வருகின்றன. அலைகள் வரும் இடத்தில் கடலும் வெள்ளை நிறமாகத் தெரிகிறது. அலைகள் வந்து சென்ற உடனே அந்த நீல நிறம் கடலுக்கு வந்து விடுகிறதே..... எப்படி?

கடலின் மேல் பகுதி தெளிவாக இருந்தால்தானே அதில் வானத்தின் நீல நிறம் தெரியும்? கடல்நீர் அலைகள் வருவதால் அசைகிறது. அவ்வாறு அசைந்து கொண்டு இருக்கும் போதும் நீல நிறம் தெரிகிறதே எப்படி?

அவரின் சிந்தனை மேலும் மேலும் வளர்ந்தது.

அவர் இங்கிலாந்து சென்றுவிட்டு இந்தியா வந்தார். அதன் பின்னும் இந்தச் சிந்தனை வளர்ந்தது. இதற்கான பதிலை அவர் தேடினார்.

அவருக்குப் பதில் தெரிந்தது.

கடல் நீரில் சூரிய ஒளிக்கதிர்கள் படுகின்றன. அதே நேரத்தில் ஒரு சில சூரிய ஒளிக் கதிர்கள் கடல் நீரில் கலந்துள்ள சில கண்ணுக்குத் தெரிந்த - கண்ணுக்குத் தெரியாத பொருட்கள் மீதும் படுகின்றன.

 

அந்தப் பொருட்களின் மீது பட்ட சூரிய ஒளிக்கதிர்கள் சிதறுகின்றன. இதன்மூலம் நீல நிறம் வெளிப்படுகிறது. இதனால் கடல் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

இதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி, அவர் இங்கிலாந்தில் உள்ள இராயல் கழகத்திற்கு அனுப்பினார். அவரின் கட்டுரைக்குப் பாராட்டுக் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவர் இராமன் விளைவு என்பதைக் கண்டு பிடித்தார்.

இப்போது உங்களுக்குத் தெரிந்து இருக்கும் அந்த அறிஞர் யார் என்று!

அவர் தான் நோபல் பரிசு பெற்ற தமிழர் சர்.சி.வி. இராமன்.

சர்.சி.வி. இராமனின் வாழ்க்கை

இராமன் 1888 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி.

 

மலைக் கோட்டை (திருச்சிராப்பள்ளி)

மலைக் கோட்டை (திருச்சிராப்பள்ளி)

இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இயற்பியலில் மேல்கல்வியும் பெற்றார். கல்லூரியில் இளநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி ஆகிய இரு நிலைகளிலும் இவர் முதலிடம் பெற்றார். மேலும் இவர் பொருளியல், வரலாறு ஆகியனவும் கற்றார்.

மாநிலக் கல்லூரி (சென்னை)

அதன்பின் இவர் இந்திய அரசின் கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்தது. இவர் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அறிவியல் ஆய்வுகளைச் செய்து வந்தார்.

இதன்பின் இவருக்குக் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் கிடைத்த பணம் குறைவு. இருப்பினும் இராமன் இந்த வேலையில் சேர்ந்தார். இவரின் அறிவியல் ஆர்வம் மேலும் மேலும் வளர இந்த வேலை உதவியது. இவர் 1917 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை இங்கு வேலை செய்தார்.

 

1930 ஆம் ஆண்டு இராமன் நோபல் பரிசு பெற்றார். அப்பரிசு அவரின் "இராமன் விளைவு" என்ற கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது.

 

இராமனுக்கு இங்கிலாந்து அரசு "சர்" என்னும் பட்டத்தையும் வழங்கியது.

பிறகு இவர் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயற்பியல் துறைக்குத் தலைவர் ஆனார்.

அதன் பின் இவர் பெங்களூரில் தன் பெயரால் தொடங்கப் பெற்ற இராமன் நிறுவனத்தின் இயக்குநர் ஆனார்.

1970 ஆம் ஆண்டு பெங்களூரில் இவர் காலமானார்.