அணி
பொது அறிமுகம்
General Introduction

ஓர் ஓட்டப்போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் மிகவேகமாக ஓடுகிறார். பார்ப்பவர்கள் கைதட்டுகிறார்கள்
’அவர் குதிரைமாதிரி ஓடுகிறார்’
'அவர் பறவைப் போல பறக்கிறார்’
என்று சொல்லுகிறார்கள்.
“குதிரை மாதிரி”
“பறவைப் போல”
உவமை அணி என்பது இதுதான். ஒன்றுக்கு உவமையாக ஒன்றைச் சொல்வது என்பது உவமையணி. இது செய்யுளுள் வந்தால் மிக இனிமை தரும்.
’நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு’
(திருக்குறள்- நட்பு)
என்பது நம் செய்யுள் பகுதியில் வந்த ஒரு குறள். இதில் நல்லவர்களின் நட்பு படிக்க படிக்க புது இன்பம், சுவை தரும் நூலைப் போன்றது எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் உவமை அணி உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
உவமை அணிக்கு மொத்தம் நான்கு பகுதிகள் தேவை.
அவை
1. உவமை ஒப்பாகச் சொல்லப்படும் பொருள்
2. உண்மைப் பொருள்
3. பொதுப்பண்பு
4. இணைப்புச் சொல் உவம உருபு
என்பன.
அவர் குதிரை போல ஓடினார் என்பதில்
ஒப்பாகச் சொல்லப்படும் பொருள் | - குதிரை |
உண்மைப்பொருள் | - ஓடியவர் |
பொதுப்பண்பு | - குதிரைக்கும் ஓடிய மனிதனுக்கும் பொதுவான பண்பு வேகமாக ஓடுதல் |
உவம உருபு | - போல |
’நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு’
(திருக்குறள்- நட்பு)
என்பதில்
ஒப்பாகச் சொல்லப்படும் பொருள் | - புத்தகம் |
உண்மைப்பொருள் | - நட்பு |
பொதுப்பண்பு | - படிக்கப்படிக்க இனிமை பழகப்பழக இனிமை |
உவம உருபு | - போலும். |
என்ன மாணவர்களே?
இப்போது நீங்கள் உவமைஅணி பற்றி அறிந்திருப்பீர்கள்.
நம்பாடத்தில் வந்த சில உவமைஅணிகள். - பின் வருமாறு வருகின்றன.
1. கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து
2. பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணைஅடி நீழலே