1-10

1. குறிஞ்சி
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே''
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
5
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்

2. பாலை
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
5
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
10
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்

3. பாலை
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
5
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்

4. நெய்தல்
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
5
''அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு'' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
10
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்

5. குறிஞ்சி
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
5
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்

6. குறிஞ்சி
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
''இவர் யார்?'' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
10
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

7. பாலை
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
5
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்

8. குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
5
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
10
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்

9. பாலை
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
5
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே!
10
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

10. பாலை
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர!
5
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

உடன்போக்கும் தோழி கையடுத்தது.