101-110

101. நெய்தல்
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
5
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.

பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்

102. குறிஞ்சி
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
5
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு,
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்

103. பாலை
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,
5
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;
10
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்,
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்

104. குறிஞ்சி
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
5
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்-பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
10
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்

105. பாலை
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
5
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
10
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்

106. நெய்தல்
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
5
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப,
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்

107. பாலை
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
5
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்,
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
10
யானே, தோழி! நோய்ப்பாலேனே.

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

108. குறிஞ்சி
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
5
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

109. பாலை
''ஒன்றுதும்'' என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
''அன்னவோ, இந் நன்னுதல் நிலை?'' என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
5
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
10
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே!

பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்

110. பாலை
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
''உண்'' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
5
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
10
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்