|
|
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
|
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
|
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
|
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், |
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
|
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
|
எல்லித் தரீஇய இன நிரைப் |
|
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? |
உரை |
|
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|
|
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
|
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
|
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
|
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
|
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
|
கராஅம் பேணாய்; இரவரின், |
|
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! |
உரை |
|
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|
|
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
|
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
|
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
|
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
|
கொண்டு உடன் போக வலித்த |
|
வன்கண் காளையை ஈன்ற தாயே. |
உரை |
|
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
|
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
|
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
|
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
|
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
|
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
|
சிலம்புடன் கமழும் சாரல் |
|
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! |
உரை |
|
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
|
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
|
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
|
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
|
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
|
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
|
இள நலம் இற்கடை ஒழியச் |
|
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. |
உரை |
|
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|
|
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர் |
|
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த |
|
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப, |
|
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் |
5 |
ஏ கல் மீமிசை மேதக மலரும், |
|
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், |
|
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் |
|
செல்ப என்ப, காதலர்: |
|
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே. |
உரை |
|
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்
|
|
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, |
|
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; |
|
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, |
|
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; |
5 |
''எவன்கொல்?'' என்று நினைக்கலும் நினைத்திலை; |
|
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; |
|
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் |
|
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
|
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை |
10 |
மையல் உறுகுவள், அன்னை; |
|
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
|
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
|
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
|
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
|
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
|
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப் |
|
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
|
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? |
உரை |
|
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|
|
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
|
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
|
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
|
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
|
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
|
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
|
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை |
|
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
|
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
|
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
|
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
|
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
|
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
|
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
|
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
|
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. |
உரை |
|
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
|