தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    கவிஞர் என்பவர் கலை உலகின் படைப்புக் கடவுள்; பிரம்மா. படைப்புக் கடவுளையும் மிஞ்சிய அழியாத சிற்பங்களை உருவாக்கிய கலைஞர். காரணம்: பிரம்மன் படைத்த உயிர்களுக்கு எல்லை உண்டு; இறுதி உண்டு. மாபெரும் கவிஞர்கள் கவிதைகளில் படைக்கும் உயிர்களுக்கு எல்லை இல்லை; இறுதி இல்லை. இதனால்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,

    அயன்படைப் பினையும் திருத்தி
    அழகு செய்திடுவோன்

    (அயன் = பிரம்மன்; படைப்பு = உயிர்களை உருவாக்குதல்)

    என்று கம்பரைப் புகழ்ந்துள்ளார். பிரம்மன் படைப்புகளையும் திருத்தி அழகு செய்பவர் கம்பர் என்பது ப்பாடலின் பொருள். கம்பரின் புலமைச் சிறப்பை உணர்ந்த அறிஞர் பெருமக்கள் பலவாறு பாராட்டி மகிழ்ந்து உள்ளனர்.

    “கல்வியில் பெரியன் கம்பன்”
    “கவிச்சக்கரவர்த்தி கம்பன்”
    “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்”
    “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்”

    முதலான தொடர்கள் எல்லாம் கம்பர் புலமையைப் பாராட்டி எழுந்தவையே; இவை பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருபவை.

    விண்ணமுதின் சுவை கெடுத்த
         கம்பன் பாடல்

    (விண்ணமுது - தேவர்களின் அமிர்தம்)

    என்று நாமக்கல் கவிஞர் கம்பர் கவிதையைப் பாராட்டுகிறார்.

    வானவரின் அமுதத்தை விடக் கம்பர் கவி சுவை நிறைந்தது. இத்தகு சுவை மிகுந்த கம்பர் கவி நயத்தை, இந்தப் பாடம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இப்பாடத்தின் முதல் பகுதி கம்பரும் உலகக் கவிஞர்களும் எவ்வாறு கவிதையில் ஒன்றுபடுகின்றனர் என்பதை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி கம்பராமாயணக் கவிச்சுவையை விவரிக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:26:21(இந்திய நேரம்)