தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பூங்கொடி காப்பியம்

  • 4.1 பூங்கொடிக் காப்பியம்

    பூங்கொடிக் காப்பியம் கவிஞர் முடியரசனின் படைப்புகளுள் ஒன்றாகும். ‘மொழிக்கொரு காப்பியம்’ என்னும் சிறப்பினை இந்தக் காப்பியம் பெற்றுள்ளது. ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ நீங்கலாக, ‘விழவயர் காதை’ முதலாக ‘விடுதலைக் காதை’ ஈறாக முப்பத்தொரு காதைகள் இந்தக் காப்பியத்தில் உள்ளன. 5243 பாடல் வரிகள் உள்ளன. தமிழ்நாட்டு மொழிப் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றவர்களும் தமிழ்மொழி, தமிழிசை முதலியவற்றின் வளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் இந்தக் காப்பியத்தில் குறிப்பாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளனர்.

    மணிமேகலையும் பூங்கொடியும்

    பௌத்த சமய உண்மைகளை உணர்த்த அறச்செல்வியாக ஒரு மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பட்டாள். அதுபோல மொழி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இல்லறம் துறந்து, பொதுநலம் போற்றித் தன்னலம் மறந்த தமிழ்ச்செல்வி பூங்கொடியாகக் கவிஞர் முடியரசனால் படைக்கப்பட்டுள்ளாள்.

    4.1.1 ஆசிரியர்

    இக்காப்பியத்தை இயற்றியவர் கவிஞர் முடியரசன். 1920ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7ஆம் நாள் பெரியகுளம் என்னும் ஊரில் பிறந்தார். இயற்பெயர் துரைராசு என்பதாகும். தனித்தமிழ் உணர்வினால் தூண்டப்பெற்றுத் தனித்தமிழில் முடியரசன் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

    பாரதிதாசன் தொடர்பும் தமிழ் உணர்வும்

    பாவேந்தர் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையின் முன்னணிக் கவிஞர் முடியரசன். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர். தமிழ்மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் தம் வாழ்நாளின் இறுதிவரையிலும் உழைத்தவர். கவிஞர் முடியரசன் தமிழைத் தெய்வமாகப் போற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதில் உள்ளம் மகிழ்ந்தவர்.

    படைப்புகளும் பட்டமும்

    பூங்கொடி, முடியரசன் கவிதைகள், கவியரங்கில் முடியரசன், பாடும் பறவை, காவியப்பாவை, வீரகாவியம், ஊன்றுகோல் ஆகிய படைப்புகளைக் கவிஞர் முடியரசன் எழுதியுள்ளார். இவருடைய பாடல்கள் சில இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தவத்திரு குன்றக்குடி அடிகளார் கவிஞர்க்குக் கவியரசு எனப் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார்.

    ‘தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை’ என்பதற்கேற்ப மக்கள் மனத்தில் ‘இறவாமல்’ வாழும் உயர்ந்த கவிஞர் முடியரசன் என்பதில் ஐயமில்லை.

    4.1.2 கதைக்கரு

    இந்தக் காப்பியத்தின் கருப்பொருள் புதுமையானதாகும். தாய்மொழியாகிய தமிழ்மொழியின் உரிமையைக் காப்பதற்காக மேற்கொண்ட மொழிப் போராட்டம் இதன் கருப்பொருள் ஆகும். தொன்மை சான்ற ஒருமொழிக்கு அதற்குரிய இடத்தை ஆட்சியாளர் வழங்காதபோது அறப்போராட்டத்தின் வழி அதனைப் பெறமுயல்வது தவறாகாது என்று மொழிப்போராட்டம் குறித்துப் பூங்கொடிக் காப்பியம் கூறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 11:06:04(இந்திய நேரம்)