தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

  • 4.3 படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

    பேசப்படுவோர் பலராக இருந்தால், அவர்களைக் குறிக்கும் வினைமுற்றுகளையே பலர்பால் வினைமுற்று என்கிறோம்.

    அமைச்சர்கள் வந்தனர்
    மாணவர்கள் சென்றனர்

    எனும் இத்தொடர்களில் வந்தனர், சென்றனர் என்னும் சொற்கள் பலர்பால் உணர்த்தும் வினைமுற்றுச் சொற்களே. இச்சொற்களின் இறுதியில் ‘அர்’ விகுதி வந்து அவை பலர்பால் உணர்த்தின. ‘அர்’ விகுதி பலர்பால் உணர்த்துவதாக வினைமுற்றில் வருவதுபோல் அக்காலத்தில் ஆர் விகுதியும் வந்துள்ளது. ‘வீரர்கள் நடந்தனர்’ என்று இப்போது குறிப்பதைப் பழங்காலத்தில்

    ‘வீரர் நடந்தார்’

    என்றே எழுதியுள்ளனர். இன்று நாம் இவ்வாறு எழுதினால் வீரர் ஒருவர் நடந்ததாகப் பொருள் கொள்வோம். இத்தொடர் அக்காலத்தில் பலரையே சுட்டும். ஒருவனைக் குறிக்க வேண்டும் என்றால் அக்காலத்தில் ‘வீரன் நடந்தான்’ என்றே எழுதுவர்.

    பலர்பாலைக் குறிக்கும் வினைமுற்றுகளுக்கு மேலும் சில சான்றுகள் காண்போம். அடைப்புக் குறிக்குள் பொருளும் தரப்பெற்றுள்ளது.

    உழவர் வந்தார்
    =
    (உழவர்கள் வந்தனர்)
    புலவர் பாடினார்
    =
    (புலவர்கள் பாடினார்கள்)
    பாணர் பாடினார்
    =
    (பாணர்கள் பாடினார்கள்)

    பலர்பால் படர்க்கை வினைமுற்றுகளில் அர், ஆர், ப, மார் எனும் விகுதிகள் பயன்படுகின்றன. இவை தெரிநிலை வினைமுற்றுகளில் வருவது குறித்து இனிக் காண்போம்.

    4.3.1 தெரிநிலை வினைமுற்று

    அர், ஆர் எனும் விகுதிகள் சேர்ந்து படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுகள் அமைகின்றன. இறந்தகால வினைமுற்றுக்குச் சான்று:

    மாணாக்கர்
    படித்தனர்
    (மாணவர்கள் படித்தார்கள்)
    நடிகையர்
    நடித்தனர்
    (நடிகையர்கள் நடித்தார்கள்)
    பகைவர்
    ஓடினார்
    (பகைவர்கள் ஓடினார்கள்)
    மகளிர்
    அணிந்தார்
    (மகளிர் அணிந்தார்கள்)

    தெரிநிலை வினைமுற்றில் ப, மார் எனும் விகுதிகளும் பலர்பால் உணர்த்தப் பயன்பட்டுள்ளன. இவை இக்காலத்தில் பயன்பாட்டில் மிகுதியாக இல்லாதவையே என்றாலும் தெரிந்து கொள்வதற்காகக் கீழே சில சான்றுகள் தரப்பெறுகின்றன.

  • ப விகுதி
  • இது இறந்தகாலப் பொருளிலும், எதிர்காலப் பொருளிலும் மட்டும் வரும்.

    சான்று : என்ப, கூறுப முதலியன

    ‘என்ப’ என்பதற்கு என்றார்கள் என்றும், என்று கூறுவார்கள் என்றும் இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலாம்.

     

  • மார் விகுதி
  • இவ்விகுதியும் இன்றைய வழக்கில் இல்லாத ஒன்று. இவ்விகுதியைப் பெற்றுவரும் வினைச் சொல்லிற்குச் சான்று:

    கொண்மார்
    வந்தார்
    உண்மார்
    வந்தார்
    - என்பன

    (கொண்மார் = கொள்வார்)

    இங்கு மார் விகுதி, பெயரோடு வரும் மார் விகுதியில் இருந்து வேறானது. இதுவே பெயரோடு வரும்போது தேவிமார், குருமார், தாய்மார் என்பன போல அமையும். இதை நினைவிற் கொள்ள வேண்டும்.

    4.3.2 குறிப்பு வினைமுற்று

    அர், ஆர் எனும் விகுதிகள் படர்க்கைப் பலர்பால் உணர்த்துவதாக வரும் என முன்னர்ப் பார்த்தோம். இவையே குறிப்பு வினையிலும் வரும்.

    அவர் காஞ்சியார்
    இவர் கோவையார்
    ‘ஆர்’ விகுதி
    அவர் பாடகர்
    இவர் நடிகர்
    ‘அர்’ விகுதி

    தெரிநிலை வினையில் உரைக்கப் பெற்ற ‘ப’, ‘மார்’ எனும் விகுதிகள் குறிப்பு வினைமுற்றில் வருவதில்லை.

    எனவே, இதுவரை படர்க்கைக்கு உரியனவாக உயர்திணையில் கீழ்க்காணும் வினைமுற்று விகுதிகள் வரும் என்பதை அறிந்தோம்.

    ஆண்பாலுக்கு உரியன
    -
    அன், ஆன்
    பெண்பாலுக்கு உரியன
    -
    அள், ஆள்
    பலர்பாலுக்கு உரியன
    -
    அர், ஆர், ப, மார்

    இவற்றுள் ப, மார் எனும் இரண்டு தவிர்த்த ஏனையவை தெரிநிலை வினை, குறிப்பு வினை எனும் இரண்டிலும் பயன்படுவதையும் அறிந்தோம். இனி அஃறிணைக்குரிய படர்க்கை வினைமுற்றுகள் பற்றிப் பார்ப்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 12:31:59(இந்திய நேரம்)