தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாயக்கர் கால இலக்கிய இலக்கணங்கள்

  • 5.1 நாயக்கர் கால இலக்கிய இலக்கணங்கள்

    தமிழகத்தில் சோழர் ஆட்சிக்குப் பிறகு பாண்டியர் ஆட்சி தோன்றியது. ஆனால் பாண்டியர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மை காரணமாக இசுலாமியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. இந்த இசுலாமியர்கள் இந்துக்களின் சமய உணர்விற்குப் பாதகம் செய்தனர். அதன் காரணமாக இசுலாமியர் ஆட்சியை ஒழிக்கத் திட்டமிட்டனர். இம்முயற்சியின் பயனாக விஜயநகரப் பேரரசு துங்கபத்திரா நதிக்கரையில் உருவானது. அதே நேரத்தில் கி.பி. 1538இல் குமாரகம்பண்ணன் என்பவர் இசுலாமியர்களை வென்று மதுரையில் நாயக்கர் அரசுக்கு அடிகோலினார். அது முதல் நாயக்கர் ஆட்சி மதுரையில் ஏறக்குறைய 400 ஆண்டுகள் நிலைத்திருந்தது.

    அக்காலக் கட்டத்தில் சோழர் ஆட்சிக் காலம் போன்று பெரிய காப்பியங்களும் புராணங்களும் தோன்றவில்லை. எனினும், பல சிற்றிலக்கியங்களும் சில இலக்கண நூல்களும் தோன்றின. அக்காலத்திய மொழி வரலாற்றை அறியச் சிறந்த ஆதாரங்களாக இவை விளங்குகின்றன.

    5.1.1 இலக்கியங்கள்

    நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று கூறலாம். நெஞ்சு விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ் விடு தூது போன்ற தூது நூல்கள் நாயக்கர் காலத்தில் தோன்றின. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களும் அக்காலக் கட்டத்தில் வெளிவந்தவை. நந்திக் கலம்பகம் நாயக்கர் காலத்தின் தொடக்கக் காலத்தில் தோன்றியது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி (திருநெல்வேலி வட்டாரக் கிளைமொழி வழக்கு மற்றும் குறவர் சமூக வழக்குக் கூறுகளைக் கொண்ட நூல்), முக்கூடற்பள்ளு, சீர்காழிப் பள்ளு போன்ற பள்ளு நூல்களும் சிற்றிலக்கிய வகைகளுள் நாயக்கர் கால மொழி மாற்றங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன.

    புகழேந்தியாரின் நளவெண்பாவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதமும், அருணகிரியாரின் திருப்புகழும், தாயுமானவரின் தனிப்பாடல்கள் பலவும் நாயக்கர் கால மொழிநிலையை அறியப் பேருதவி புரிகின்றன.

    5.1.2 இலக்கணங்கள்

    மேலைநாட்டினரான வீரமாமுனிவர் (1680-1746) எழுதிய இலக்கண நூல்களான செந்தமிழ் இலக்கணமும், கொடுந்தமிழ் இலக்கணமும் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவற்றை முறையே செய்யுளுக்குரிய இலக்கணம் என்றும், பேச்சு வழக்கிற்குரிய இலக்கணம் என்றும் கூறலாம். மேலும், அவர் எழுதிய சதுரகராதி பிற்கால அகராதி நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்கின் அடிப்படையில் தமிழ்ச்சொற்களுக்கு விளக்கம் தருவதாக அமைந்துள்ளது இந்நூல்.

    வீரமாமுனிவர் எழுதிய போர்த்துக்கீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதியும் மக்கள் பேசும் பேச்சு வழக்குக் கூறுகளைக் கொண்டுள்ளது. சீகன்பால்கு ஐயர் 1709இல் தரங்கம்பாடிக்கு வந்தவர். கிறித்துவ வேதமான பைபிளைத் தமிழ்ப்படுத்தியவர். தமிழ்-இலத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவாக வழங்கும் பல சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

    இவ்வாறு மேலைநாட்டினர் சிலர், இலக்கண நூல்களையும் மொழி ஆய்வு நூல்களையும் எழுதினர். அவை நாயக்கர் கால இறுதியில் தமிழ்மொழிக் கூறுகள் சிலவற்றை அறிவதற்குச் சிறந்த ஆதாரங்களாகவும் விளங்குகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 13:29:46(இந்திய நேரம்)