Primary tabs
3.1 நாட்டுப்புறவியல் - வகைமைப்பாடு
நாட்டுப்புறவியல் துறையில் வகைமைப்பாடு என்பது அண்மைக் காலத்தில்தான் வளர்ந்தது. வகைப்பாடு என்று குறிக்காமல் வகைமைப்பாடு என்று குறிப்பதனால் வகைமைப்பாட்டிற்குள் வகைப்பாடு அடங்கும் என்று கொள்க.
- வகைமை
வகைமை என்பது உள்ளடக்கத்தாலும், உருவத்தாலும், வழங்கப்படும் சூழலாலும் தனித்த இயல்புகளைக் கொண்ட வழக்காற்றுத் தொகுதியேயாகும். தனித்த இயல்பினை வேறுபடுத்துவதன் மூலமாகவும் வகைமை என்பதனை அறியமுடிகின்றது. வகைமை என்பது உருவாக்கப் படுவதில்லை, இயல்பாகவே மரபில் இருக்கின்றது.
- வகைமையும் வகைப்பாடும்
வகைமைப்பாட்டிற்குள் வகைப்பாடு என்பது அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். அதனைச் சான்றுடன் விளக்குகின்ற போது வகைமை என்பதிற்கும் வகை என்பதிற்குமான வேறுபாடு சற்றுத் தெளிவாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது, நாட்டுப்புற வழக்காறுகளில் ‘கதை’ என்பதனை வகைமையாகக் கொள்ளலாம். இந்த நாட்டுப்புறக் கதை வகைமைக்குள் புராணக் கதைகள், பழமரபுக் கதைகள், தேவதைக் கதைகள், வேடிக்கைக் கதைகள் போன்றவற்றினை அவற்றிற்கான வகைகளாகச் சுட்டலாம்.
3.1.1 வகைமைப்பாடு - வகைகள்
நாட்டுப்புற வழக்காறுகளைப் பொதுவாக வகைமைப் படுத்தும் போது இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை, 1) இனவகைமை, 2) ஆய்வு வகைமை என்பனவாகும். இவற்றுள் இனவகைமை என்பது ஒரு வழக்காறு. அவ்வழக்காற்றினை வழங்குகின்ற இன மக்களால் எப்பெயரால் சுட்டி அழைக்கப்படுகின்றதோ, அப்பெயரினாலேயே வகைமைப்படுத்துவதற்கு ‘இனவகைமை’ என்று பெயர். ‘ஆய்வு வகைமை’ என்பது ஆய்வாளர்களால் ஆய்வு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வகைமை ஆகும். இந்த ஆய்வு வகைமையே நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வுகளிலும், ஆய்வாளர்களாலும் பெரும்பாலும் சுட்டப் படுகின்றது என்பது இங்குக் குறிக்கத்தக்கது. பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிற இந்த ஆய்வு வகைமை என்பதும் மரபோடு அதாவது இன வகைமையோடு ஒத்துப் போகக் கூடியதாக இருந்தால்தான் சரியானதாக அமையும்.
- இயல்புகள்
மேற்குறிப்பிட்ட வகைமைக்கான இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இன வகைமை என்பது வட்டாரம் சார்ந்து அமைவது, சிக்கலானது, தெளிவற்றது, நாட்டுப்புற மக்களின் அறிவு எல்லைக்கு உட்பட்டது. ஆய்வு வகைமை என்பது பாதுவானது, சிக்கலற்றது, ஆய்வாளர்களால் உருவாக்கப்படக் கூடியது, தெளிவானது, அறிவியல் சார்ந்தது. இவற்றை இந்த இரண்டு வகைமைகளுக்கான இயல்புகளாகக் குறிப்பிடலாம்.
- பிரிவுகள்
நாட்டுப்புறவியல் வகைமையினை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு, பொதுவாக நாட்டுப்புறவியலினை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவை,
1) நாட்டுப்புற இலக்கியம் 2) நாட்டுப்புறக் கலைகள்
என்பனவாகும். இந்த இரு பெரும் வகைமைப்பாட்டிற்குள் பலவகையான வகைப்பாடுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.