தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.4-உலக மனிதர்

  • 6.4 உலக மனிதர்
     

    E

    மானிடச் சமுதாயத்தைப் பாரதிதாசன் ஓர் உலகமாகப் பார்க்கிறார். நாடு, மொழி, இன எல்லைகளைக் கடந்தவன் மனிதன். அந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றால், அன்பு செழிக்க வேண்டும் என்று அவர் கருதியுள்ளார்.



    தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்
    தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
    சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் - உலக ஒற்றுமை’)


    என்னும் அடிகளில் அன்புள்ளத்தைத் தாயுள்ளம் என்று பாடியுள்ளார். தாய்மையை அன்பின் வடிவமாக்கி அத்தாயை உலகமக்களின் அன்னையாக்கினால் நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்படாது என்று கருதியுள்ளார்.

    உலகநாடுகளில் வல்லவர்கள் ஏனைய நாட்டினரை அடிமை கொள்ளும் நிலையைப் பாரதிதாசன் வெறுக்கிறார். இந்த மனப்பான்மையை அவர் ‘நச்சு மனப்பான்மை’ என்று கூறியுள்ளார். இந்த மனப்பான்மை இந்த உலகிற்கு இடியைப் போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.


    நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
    நச்சுமனப் பான்மை
    தொல்புவி மேல் விழும் பேரிடியாம்

    (பாரதிதாசன் கவிதைகள், ‘புதிய உலகம் - பேரிகை’)


    என்னும் அடிகள், பாரதிதாசனின் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.


    புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் - புதிய உலகு செய்வோம்’)


    என்னும் அடிகளில் தீய வழியில் போர் செய்ய எண்ணும் உலகத்தவர்களை அழித்திட வேண்டும் என்று பாடியுள்ளார்.

    உலக மக்கள் அனைவரையும் ஒரேகுலமாகக் காணும் எண்ணத்துடன் பாரதிதாசன்.


    எங்கும் பாரடா இப்புவி மக்களை!
    பாரடா உனது மானிடப் பரப்பை
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
    ‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம்’ - உலகம் உன்னுடையது)
     


    என்று பாடியுள்ளார்.

    கறுப்பு நிறம் கொண்டவனாகப் பிறந்தாலும் வெள்ளை நிறம் உடையவனாகப் பிறந்தாலும் மனிதகுலத்தில் பேதம் கிடையாது; எல்லாரும் மனிதர்களே! என்று எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணினால் இந்த மக்களிடையே ஒற்றுமை நிலவும். இவ்வாறு அனைவரும் நினைப்பதற்கு மக்கள் தங்கள் அறிவை விரிவாக்க வேண்டும்; குறுகிய மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். இதை,


    அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
    அணைந்துகொள் உன்னைச் சங்கமமாக்கு
    மானிட சமுத்திரம் நானென்று கூவு
    பிரிவிலை எங்கும் பேதமில்லை
    உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
    புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’
    புவியை நடத்துப் பொதுவில் நடத்து

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் - உலகம் உன்னுடையது’)


    என்று எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பாடியுள்ளார். உலக மக்கள் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்றால், உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் உலக மக்களுக்குப் பொதுவானவை என்ற நிலை வரவேண்டும் என்று விரும்பியுள்ளார்.



    இலையே உணவிலையே கதி
    இலையே எனும் எளிமை
    இனிமேலிலை எனவே முர
    சறைவாய்! முரசறைவாய்!

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் - வாளினை எடடா’)
     

    உலகின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் பசித்துன்பம் இல்லாமல் வாழ்கிறார்கள். வேறு ஒரு பகுதியில் உள்ள மக்கள் பசியால் வாடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலை இனிமேலும் இருக்கக்கூடாது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.


    6.4.1 உலகத் தொழிலாளர்
     

    உலக மனிதருக்குப் பாடிய பாரதிதாசன் உலகத் தொழிலாளர்களையும் ஒரே வகையில் பார்த்துள்ளார். கண்கவரும் சோலையைப் பார்க்கின்றவரின் கண்களுக்கு அதில் உள்ள அழகுதான் உடனடியாகத் தெரியும். ஆனால் பாவேந்தருக்கோ இந்தச் சோலை உருவாவதற்கு உழைத்த தொழிலாளர்களின் உழைப்புத்தான் தோன்றியிருக்கிறது. அதைச் சோலையைப் பார்த்துக் கேட்பதைப்போல் பாடியுள்ளார் பாருங்கள்.
     



    சித்திரச் சோலைகளே! உமை நன்கு
    திருத்த இப்பாரினிலே - முன்னர்
    எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ
    உங்கள் வேரினிலே!

    (பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் - நீங்களே சொல்லுங்கள்’)


    என்னும் பாடலின் பேசமுடியாத சோலையைப் பார்த்துக் கேட்கும் பாவேந்தரின் கவிதை உள்ளம் வியப்புக்கு உரியது அல்லவா?

    உலகத் தொழிலாளர்களில் பலர் வேலையில்லாமல் துன்பப்படுவதைப் பாரதிதாசன் பார்த்துள்ளார். அவ்வாறு அவர்கள் துன்பப்படுவதற்கான காரணம் எது என்றும் அவர் சிந்தித்துள்ளார். சிந்தனையின் விளைவாக அவர்,


    வாடித் தொழிலின்றி வறுமையால் சாவதெல்லாம்
    கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் தோழர்களே

    (பாரதிதாசன் கவிதைகள் - ‘புதிய உலகம் - கூடித் தொழில் செய்க’)


    என்று தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சிறிய தொழில் கூடங்களை அவர்களாலேயே உருவாக்கிட இயலும். இந்தச் சிறு தொழில் கூடங்கள் அவர்களுக்கு வாழ்வு அளிப்பதுடன் பிற தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கும். எனவே, தொழிலாளர்கள் கூட்டுத் தொழில் முறையைப் பின்பற்றி வாழ்வில் உயரவேண்டும் என்று பாடியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:06:19(இந்திய நேரம்)