தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இயற்கைக் கவிஞர்

  • 6.5 இயற்கைக் கவிஞர்
     

    E

    ஓர் அறிவியல் அறிஞன் அல்லது ஒரு விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வையிலிருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டது. அறிவியல் அறிஞன், இயற்கையை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பார்ப்பான். விவசாயி தனது விவசாயத் தொழில் நோக்கத்தோடு பார்ப்பான். சாதாரண மனிதன் இயற்கையைப் பார்த்து மகிழ்வான். ஆனால் கவிஞன், தான் பார்த்து மகிழ்ந்த இயற்கைக் காட்சியைப் பிறரும் பார்க்கும் வகையில் சொல் ஓவியம் ஆக்குகிறான்.
     

    6.5.1 கதிர் வருணனை
     

    இயற்கையைப் பாடிய தமிழ்க் கவிஞர்களில் பாரதிதாசன் முதல் இடத்தைப் பெறுகிறார். கதிரவனின் தோற்றத்தைக் காட்டுகிறார் பாருங்கள்.
     


     

    எழுந்தது செங்கதிர்தான்
    கடல்மிசை! அடடா எங்கும்
    விழுந்தது தங்கத் தூற்றல்

    (அழகின் சிரிப்பு, ப. 3)
     

    எவ்வளவு அழகான கற்பனை. ‘எழுந்தது செங்கதிர் - விழுந்தது தங்கத் தூற்றல்’ என்னும் எதிர்ப்பொருள் வழங்கும் இன்பம் ஒருபுறம் என்றால், கதிரின் ஒளியைத் தங்கமாகக் காட்சிப்படுத்தியுள்ளது மேலும் வியப்பை வழங்குகிறது. இவை மட்டும்தானா என்றால், இல்லை. இன்னும் தொடர்கிறது பாருங்கள். அந்தத் தங்க ஒளி தூவப்படுகிறது என்று ஒளியைச் சிறு துளியாகக் கற்பனை செய்துள்ள அருமையை எவ்வாறு புகழ்வது?
     

    6.5.2 நிலவு வருணனை
     

    கதிர் வருணனை இவ்வாறு என்றால், நிலவை வருணித்திருக்கிறார் பாருங்கள்.

    புதுவையிலிருந்து மாமல்லபுரத்திற்குப் பாரதிதாசனும் அவரது நண்பர்களும் படகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலவு, ஒரு மரத்தின் பின்புறம் வானில் தோன்றியது. அதைப் பார்த்த பாவேந்தரின் கவிதை உள்ளம் ஆற்றைக் கடந்து, நாட்டைக் கடந்து பாலைவனத்திற்குச் செல்கிறது. பாலைவனப் பகுதியில் ஆட்சிபுரியும் மன்னன் ஒருவன் அங்கே உள்ள ஒட்டகத்தில் வீற்றிருப்பதைப் போல் நிலவு தோன்றுகிறது என்று பாடியுள்ளார்.
     

    வட்டக்குளிர்மதி எங்கே - என்று
    வரவு நோக்கி இருந்தோம்
    ஒட்டக மேல் அரசன்போல் - மதி
    ஓர் மரத்தண்டையில் தோன்றும்

    (பாரதிதாசன் கவிதைகள் II ப. 39)
     

    (மரத்தண்டையில் = மரத்தின் அருகில்)

    என்பதுதான் அந்தப்பாடல். கவிஞரின் இயற்கைக் கற்பனை நம்மையும் கற்பனை செய்யத் தூண்டுகிறது அல்லவா?

    இவ்வாறு இயற்கையில் காணும் பொருள்களை எல்லாம் பாரதிதாசன் தமது பாடல்களில் சிறை வைத்துள்ளார். இந்த இயற்கைக் கற்பனை பாரதிதாசனை என்றும் நிலைக்க வைக்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:06:22(இந்திய நேரம்)