தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A071212-நாலடியார்

  • 1.2 நாலடியார்

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார்.

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

    என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள். பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா?

    1.2.1 அமைப்பும் உள்ளடக்கமும்

    நாலடியார், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல். நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல். இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது. பதினொரு இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது.

    • துறவுக்குச் சிறப்பிடம்

    அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும், இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.

    • இல்லறமும் பிறவும்

    இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது. கல்விச் சிறப்பையும், கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது. பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது. குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது. ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன.

    1.2.2 நூல் சிறப்பு

    சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம். பழமொழிகளாலும், பழைய கதைகளாலும், உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது. அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது. இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை.

    • கற்பனை

    அறிவொளியால் உலகத்தை அறநெறிப்படுத்தும் பெரியோர் விரைவில் இறந்துபடுகின்றனர். அறிவிலிகளோ நெடுங்காலம் வாழ்கின்றனர். இம்முரண்பாட்டின் காரணம் யாதென எண்ணிய புலவர் கூறுவதைப் பாருங்கள். சாற்றை விரைவில் இழுத்துக் கொண்டு, சக்கையை விட்டு விடுதல் எவர்க்கும் இயல்பு. கூற்றுவனும் சான்றோரை இளமையிலேயே எடுத்துக் கொண்டு மற்றோரை விட்டு விடுகிறான். இங்குப் புலவர் கூறிய காரணம் எதுவாக இருப்பினும் சரியோ! தவறோ அதை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற உலகியலை ஒட்டிய கற்பனைகளை நாலடியாரில் காணலாம்.

    • பழமொழி

    பொருள் விளக்கத்துக்காகப் பல பழமொழிகளும் ஆங்காங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, கயவர் எக்காலத்தும் கயவரே என்பதனைப் புலப்படுத்த,

    கைக்குமாம் தேவரே தின்னினும்வேம்பு

    (நாலடி - 112)

    (கைக்குமாம் = கசக்குமாம்)

    என்ற பழமொழி வந்துள்ளது.

    ஒருவர் பொறை இருவர் நட்பு
    -
    223
    கற்கிள்ளிக் கையிழந்தற்று
    -
    336
    மகனறிவு தந்தையறிவு
    -
    367

    என்பன போன்ற பழமொழிகள் பலவற்றைக் காணலாம்.

    சுவைகள்

    இதுவரை உவமைகளாலும், உலக நடைமுறைகளைக் கூறுதலாலும் பழமொழிகளாலும், உறுதிப் பொருள்களை உணர்த்துதலிலும் நாலடியார் தனிச் சிறப்புப் பெற்றுள்ளதைப் பார்த்தோம். அறப்பொருள் உரைக்கும் நிலையிலும் நகைச்சுவை தோன்றப் பாடுவதை நாலடியாரில் காணலாம்.

    கொடுத்தாலன்றி விடாத இரவலர் பற்றி வழங்கப்படும் பாடல்களும் கதைகளும் தமிழில் மிக உண்டு. கொடாக்கண்டன் விடாக்கண்டன் கதையைப் போன்றது. இரவலர் ஒருவர் புகை நுழைய முடியாத இடத்திலும் நுழைந்து யாசித்தலைக் கண்டு வியந்து பாடிய பாடல் இது.

    பொருள்கள் பலவற்றுள்ளும் நீரே நுட்பமானது. அதனை விட நுட்பமானது நெய். நெய்யை விட நுணுக்கம் உடையது புகை. நீர் நுழைய முடியாத இடத்திலும் நெய் நுழையும். நெய் நுழைய முடியாத இடத்திலும் புகை நுழையும். ஆனால் யாசிப்பவன் புகை நுழைய முடியாத இடத்திலும் புகுந்து செல்வான் என்கிறார் புலவர் (நாலடி: 282).

    இங்கே புலவர் அனுபவிக்கும் வியப்புச் சுவை நம்மையும் மகிழ்விக்கிறது.

    கல்லாத பேர்களிலும் கல்லே மிக நல்லது
    (நாலடி - 334)

    என்ற பேதைமை பற்றிய பாடல்களில் இகழ்ச்சிச் சுவை மிளிர்கிறது. உயிரற்ற கற்கள் கூட மனிதர்கள் அமரவும் படுக்கவும் உதவுகின்றன. அறிவிலார் எதற்கும் பயனில்லாதவர்கள் என்பதைத்தான் அவ்வாறு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

    நிலையாமை பற்றிய பாடலில் எள்ளற் சுவையைக் காணலாம். இறந்தவனின் பிணத்தைச் சுமந்து கொண்டு செல்பவர்கள் தாங்களும் ஒருநாள் இறப்பவர்களே என நினைக்கிறார்களா? இல்லையே என்ற கருத்தில் இகழ்ச்சிக் குறிப்புடன் பிணத்தை இனிச் சாம்பிணங்கள் சுமந்து செல்கின்றன என்கிறார்.


    செத்தாரைச் சாவார் சுமந்து

                (நாலடி - 24)

    என்ற வரி கற்போர் நினைவை விட்டு நீங்காது.

    எதுகை மோனை அழகுபட வரும் பல பாடல்களை நாலடியாரில் காணலாம். சான்றுக்கு ஒரு பாடலைப் பாருங்கள்.

    வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
    வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
    வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார்

    (நாலடி - 39)

    இப்பாடலில் ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்து ஒன்றாக வரும் மோனை என்னும் தொடை அழகினைக் காணலாம். அவ்வாறே ‘வைகல்’ எனும் சொல் அடுத்தடுத்து வருவதைக் கண்டு மகிழலாம்.

    இனி நாலடியார் நூலிலிருந்து நாம் அறியலாகும் பிற செய்திகளைப் பார்ப்போம்.

    இடைக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், தொழில், உணவு, மக்கள் பயன்படுத்திய நாழி, தூணி, பதக்கு முதலிய அளவு கருவிகள், காணி, முந்திரி முதலிய நில அளவைகள், காதம், யோசனை முதலிய தொலைவு அளவைகள் பிறன் மனை விழைந்தார்க்குக் கொலைத் தண்டனை அளிக்கப்பட்டமை, இம்மை மறுமை உண்டு, வினைப்பயன் உண்டு, கூற்றுவன் பாசக்கயிற்றால் உயிர்களைப் பிணித்துக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கைகள் இருந்தன என்பவை பற்றியும் அறிந்து கொள்கிறோம். இலக்கிய உலகில் நாலடியார் சிறந்ததோர் அற இலக்கியமாக விளங்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:08:17(இந்திய நேரம்)